செவ்வாய், 20 டிசம்பர், 2011

நடைமுறை வழக்கில் உள்ள இணைச்சொற்கள்

அடுக்கடுக்கான  பல சொற்களை பேசுவதுண்டு அந்த சொற்களை இரட்டைகிளவி போலவும் எதுகை மோனை போலவும் இருக்கும் சில சொற்களுக்கு விளக்கம் தெரியும் சில சொற்களுக்கு விளக்கம் தெரியாது இருந்தாலும் அச்சொற்களை சரியான தருணங்களில் பயன்படுத்தி கொண்டுதான் இருக்கின்றோம் (உதாரணமாக: அடிதடி,அக்கம் பக்கம் ,நேரங்காலம் ) இச்சொற்களை பற்றி ஆசிரியர் இளங்குமாரன் சொல் அகராதியில குறிப்பிட்டு இருப்பார் அந்த சொற்களை பற்றி இதோ உங்கள் பார்வைக்கு...

நெளிவு சுழிவு : ஒருவரிடம் உள்ளது உள்ளது படி பேசிகிட்டு இருக்கும் போது மற்றவர் கடிந்து கொள்வர் நெளிவு சுழிவு தெரியாம பேசறீயேன்னு,நெளிவு-ஒருவரது செயல் அறிந்தோ அல்லது சூழ்நிலை அறிந்தோ அதற்கேற்றார் போல் நடந்து கொள்ளுதல் சுழிவு-ஒருவரது செயல் அறிந்து அதற்க்கு தக்க சூழ்ச்சி வழியில் நடந்து கொள்ளுதல், அத கூட இப்ப போட்டு வாங்கறதுன்னு சொல்றாங்கல்ல அது போல

கணக்கு வழக்கு : அதுக்குன்னு ஒரு கணக்கு வழக்கு வேண்டாமா, அவனுக்கும்  எனக்கும் இனி எந்த கணக்கு வழக்கும் கிடையாது இப்டி ஏதாவது ஒரு சண்டையிலையோ ,இல்ல வேற எதாவது ஒரு சூழ்நிலையிலையோ நாம சொல்லியிருப்போம் இல்ல கேட்டிருப்போம்,கணக்கு-கணக்கிட்டு வைத்து கொள்ளுதல் வழக்கு-காலங்காலமாக(அ)வழக்கமாக செய்தல்

ஒளிவு மறைவு : ஒளிவு-சொல்லவேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு மற்றதை மறைத்து விடுவது மறைவு-எதுவுமே சொல்லாமல் எல்லாவற்றையும் மறைப்பது

ஏடா கூடம் :ஏடா-ஏடம் , அதாவது செருக்கு,கர்வம்,தடித்தனம் அதாவது கண்ணியமற்றவைகள் கூடம்-வஞ்சகம்,மறைப்பு அதாவது முறையில்லாமல்   போவது

உண்ணாம திண்ணாம : உண்ணாம-பேருணவு அதாவது சாப்பாடு திண்ணாம-சிற்றுணவு அதாவது டீ காபி முறுக்கு கடலை

அரசல் புரசல் : அரசல்-தன் காதால் நேரடியாக கேட்பது புரசல்-இன்னொருவர் அவர்கள் காதால் கேட்டு அதை நம் காதால் கேட்பது

வெட்டவெளி : வெட்டை-மேடான பகுதி வெளி-அகன்று விரிந்து பரந்து திறந்த வெளி பகுதி

வத்தலும் தொத்தலும் : வத்தல்-வறுமையில் வாடியிருத்தல் மெலிந்திருத்தல் தொத்தல்-நோயால் வாடியிருத்தல் மெலிந்திருத்தல்

பிக்கல் பிடுங்கல் : பிக்கல்-தனக்கான சொத்தை,பொருளை,பணத்தை உரிமையுள்ளவர்கள் பிரித்தல்(அ)கேட்டல் பிடுங்கல்-உரிமையுள்ளவரும் இல்லாதவரும்(அ) தனக்கான பங்குக்கும் மேலாக பங்கை(சொத்து,பொருள்,பணம்)பிரித்தல்

பழக்க வழக்கம் : பழக்கம்-ஒருவர் பல காலமாக செய்து வருவது வழக்கம்-பலரும் பலகாலமாக செய்து வருவது அதாவது மரபு வழி வழியாக வருவது

புள்ளை குட்டி : புள்ளை-ஆண் பிள்ளை குட்டி-பெண் பிள்ளை

பேர்புகழ் : பேர்-வாழும் காலத்தில் கிடைக்கும் பெருமைகள் புகழ்-நாம் இல்லாத போதும், இல்லாத காலத்திலும் கிடைக்கும் பெருமைகள்

நோய் நொடி : நோய்-உடலளவிலும் மனதளவிலும் ஏற்படுகிற பிணி நோய் நொடி-வறுமை

திக்குமுக்கு : திக்கு-வார்த்தை பேசமுடியாத நிலை முக்கு-மூச்சி வெளியிட முடியாத நிலை, தான் செய்த தவறை மற்றவர் அறிந்து விட்ட நிலையில் அச்சத்தில் உறைந்து போயிருத்தல்

சொல்லாம கொள்ளாம : சொல்லாமல்-வந்த விஷியத்தையோ(அ)போகின்ற விஷியத்தையோ சொல்லாதிருத்தல் கொள்ளாமல்-எதையும் பெறாமல் அதாவது வாங்காமல் செல்லுதல்

சீரும் சிறப்பும் : சீர்-மனமுவந்து பொருட்களை தருதல் சிறப்பு-மனமுவந்து பாராட்டுதல் புகழ்தல்

சின்னாபின்னம் : சின்னா(சின்னம்)-தனிமை ப்டுத்தல், தனித்தல்,பிரித்தல் பின்னம்-சிதைவுபடுத்துதல்,சேதபடுத்துதல்

சாக்கு போக்கு : சாக்கு-தான் செய்த தவறை பிறர் மீதோ ஏனைய நிகழ்வுகளின் மீதோ சொல்லி தப்புதல் போக்கு-செய்த தவறை மறைக்க திசை திருப்புதல்

சண்டை சச்சரவு: சண்டை-ஒருவரையொருவர் தாக்கி கொள்தல் அதாவது கைகலப்பு சச்சரவு-வாயால் திட்டிக் கொள்தல் வாய்சண்டை

சட்டதிட்டம் : சட்டம்-அரசால் வகுக்கப்பட்ட ஒழுங்குமுறை திட்டம்-காலங்காலமாக சமுதாயத்தால் வகுக்கப்பட்ட ஒழுங்குமுறை

கூடமாட : கூட-ஒருவருக்கு துணையாக(அ)உதவியாக இருத்தல் மாட-ஒருவருக்கு பேச்சு துணையாக இருத்தல்

ஏழை பாழை : ஏழை-வறுமையில் உள்ளவர் பாழை-ஒன்றுமில்லாதவர் வெறுமையாளி

ஆஞ்சி ஓஞ்சி : ஆஞ்சி(ஆய்ந்து)-ஓர்செயலை ஆராய்தல் ஓஞ்சி(ஓய்ந்து)-எதுவும் செய்ய முடியாமல் போதல்(அ)சோர்ந்து போதல்

அரைகுறை :அரை-சரிபாதி அளவு குறை-அரையிலும் குறைவானது

அருமைபெருமை : அருமை-தன் செயலால் உயர் தன்மை அடைதல் பெருமை-கல்வி,பதவி,செல்வம் ஆகியவற்றால் வரும் செல்வாக்கு

அக்கம் பக்கம் : அக்கம்-தான்,தான் இருக்கும் இடம்,வீடு பக்கம்-அருகில் இருப்பவர்(அ)அதற்கடுத்து இருப்பவர் இருக்கும் இடம்,வீடு






உதவிய பக்கங்கள்---- தமிழ் அகராதி, இணைச்சொல் அகராதி , விக்கிபீடியா

*****பிரகாஷ்சோனா*****