கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 ஜூன், 2013

தமிழும் தமிழர் வாழ்வும்

தமிழுக்கு அமுதென்று பேர் : அந்ததமிழ்.... இன்பதமிழ்.... எங்கள் உயிருக்கு நேர்

தரணிக்கு முதல் மொழி தமிழ்... அவள் தொடர்ந்து வந்த மொழிகளுகெலாம் தாய்

தமிழரின் பண்பாடு தமிழ்..... அது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றுரைக்கும்

தமிழரின் கல்வி தமிழ்.....அது கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன், நற்றார் தொழா அர் எனின் என்றுரைக்கும்

தமிழரின் சமூகம் தமிழ்......... அது எவ்வழி நல்லவ ராடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே என்றுரைக்கும்

தமிழரின் நாகரீகம் தமிழ் ........அது பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நணி நாகரீகர் என்றுரைக்கும்

தமிழரின் நாடு தமிழ் ....அது வடா அது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும் என்றுரைக்கும்

தமிழரின் உறவு தமிழ் அது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றுரைக்கும்

தமிழரின் வேதம் தமிழ் அது தீதும் நன்றும் பிறர்தர வாரா என்றுரைக்கும்

தமிழரின் வேகம் தமிழ்....... அது வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க என்றுரைக்கும்

தமிழரின் விவேகம் தமிழ்...... அது எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள் மெய்ப்பொருள் காண் பதறிவு என்றுரைக்கும்

தமிழரின் வாழ்வியல் தமிழ்...... அது மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும், எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறை(வு) இலை என்றுரைக்கும்

தமிழரின் வரலாறு தமிழ்...... அது கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி என்றுரைக்கும்

தமிழரின் வீரம் தமிழ்...... அது நாமர்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் என்றுரைக்கும்

தமிழரின் காதல் தமிழ்...... அது கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய், முற்படக் கிளந்த எழுதிணை என்ப என்றுரைக்கும்

தமிழரின் ஆழம் தமிழ்...... அது கங்கைபோல் காவிரிபோல் கருத்துகள், ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம் என்றுரைக்கும்

தமிழரின் அழகு தமிழ்..... அது நோக்கு புவனது நோக்கல் தன்மைத்து என்றுரைக்கும்

தமிழரின் அறம் தமிழ்..... அது மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் என்றுரைக்கும்

தமிழரின் ஈகை தமிழ்..... அது அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கியொளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல் என்றுரைக்கும்

ஆக்க தொகுப்பு
__ தம்பிரான்தோழர் கபிலனார் ___

இது போன்று தமிழினை ஆழப்பதியம் போட்டு தொந்தமிழான செந்தமிழை..நற்றமிழாய் பேணி காத்து பைந்தமிழோடு தீந்தமிழாய் நம்மில் பகிர்வோரை எங்ஙனம் புகழ்வது,  தமிழரின் ஒட்டு மொத்த வாழ்வியலும் தமிழோடுதான் என்று உரைபோரை எங்ஙனம் வியப்பது,  தமிழர் தமிழ் ஆய்வினை உற்று நோக்கி,மேற்கோளிட்டு தமிழின் ஈர்ப்பினை நோக்கி எனையும் எனை போன்றோரையும் உந்திதள்ளிய ஐயனே உமக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்

பெருவுடையான்


செவ்வாய், 30 ஏப்ரல், 2013

என் தேசம் என் மக்கள்


சாதீ ஒழிய பாடுபடும் பலர்,
சமய ஒழிப்பில் சிலர் ஆகி போகிறார்கள்.

இவ்விரண்டும் தேவையென்று சொல்லும் சிலரின் கருத்தடைவு யாதெனில், அவரவர் இனம் யாதென அறியவே இவையாம்.

பாவம், இரவல் வாங்கிய அறிவை கொண்டு சிந்திப்பவர்கள் போல
தமிழர் பண்டிகை எல்லாம் இந்துக்கள் பண்டிகை எனவும்,
இந்திய தேசம் இந்துக்கள் தேசம் எனவும் எண்னுவோர்க்கு என்ன சொல்லி புரிய வைப்பது.

மனிதரின் புறவாழ்வில் சாதீயும், அகவாழ்வில் மதமும் அகலா இடம் பிடித்து விட்டது. அறமும் வீரமும், ஊடலும் கூடலும், காதலும் களிப்பும் ,இருந்த மனித வாழ்வில் சாதி கம்பளம் விரிக்கபட்டு மதங்கள் வீருநடை போட்டு கொண்டுதான் இருக்கிறது. இதில் எம் தமிழினம் காலந்தோரும் ஒன்றுபடாமல் பிரிக்கபட்டே கிடக்கிறது

தமிழ்...
சைவத்தமிழ்
வைணவதமிழ்
சமணத்தமிழ்
என சமயங்களால் வளர்க்கபட்டது போல் இனிவருங்காலம் சாதிகளால் வளர்க்கபட்டு விடுமோ

இத்தருணம் நாம் காணும் தமிழ், சமயங்களால் வளர்க்கபட்டு அழிவின் விளிம்பில் மிஞ்சியவைகளே

மிஞ்சியவை சாதிகளால் வளர்க்க பட்டால் இனியும் எஞ்சுவது கடினமே, எனும் ஐயப்பாடே என்னில்  நிலவுகிறது

இன்றய சூழலில் தமிழ் பேசுபவன் யாரென்றால், முதலிடம் பிடிப்பவர்கள் அரசியல் கட்சி தலைவர்களே, பிறமொழி கலப்பில்லாமல் பேசினாலே அவனை அரசியல் கட்சிகாரனாகவே பார்க்கிறது சமூகம் ,என்னை பொறுத்தவரையில்

சமூகம் வளர அரசியல்ஆட்சி நடத்தியது போய், சாதிசமய வளர்ச்சியில் ஒண்டிகுடித்தனம் நடத்துகின்றன ஆட்சிகளும் & கட்சிகளும்

சமூக வளர்சியில் பூர்வகுடி இனவளர்ச்சியை மேம்படுத்தாத அரசுகள்,  கடைநிலை குடிமகனின் தேவையை சீர்குலைக்கும் சாதி சமயத்தை சீர்படுத்தாத அரசுகள், கண்டம் விட்டு கண்டம் கொள்ளையடித்தது போதாதென்று, கோள்விட்டு கோள் சென்று கனிம வளங்களை கொள்ளையடிக்க தயாராகி வருகிறது . இது தான் இன்றைய நிலையில் எம் தேசத்துக்கான வளர்ச்சி

சாதியம் ஒழிக்க பாடுபட்டவர்களின் பெயர் கூட இன்று சாதி பட்டியலில் ,இனம் காக்க பாடு பட்டவர்களின் பலரது பெயர் இனபட்டியலில் கிடைப்பது அரிதே

சமணர்களுக்கு பிடிக்காத ஐந்திரம் எனும் இலக்கண நூல் பாணினியால் அழிக்க பட்டது போல் சாதிசமயங்களால் தமிழும் ,எம் இனமும் அழியபடாமல் இருந்தால் சரி

(ஐந்திரம் வழியாக அகத்தியத்தின் துணையோடு தொல்காப்பியர் நூலியற்றியதாக தொல்காப்பியரின் சக மாணவரான பனம்பாரர் கூறுகிறார்)

பெருவுடையான்

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

கிராமியம் - தாலாட்டு


நெடுநாட்களுக்கு பின் கிராமியங்களில் பாடப்படும் தாலாட்டு பாடல்களோடு இப்பதிவு வழியாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி , பொதுவாக தாலாட்டுகளில் ஆராரோ,ஆரிரரோ,என்று இசை வரிகளை பயன்படுத்தபட்டே பாடபட்டிருக்கும். எல்லாம்... குழந்தைகளை வசீகரிக்க கூடிய ஒரு ஈர்ப்பு தான் அவ்வரிகள். அதே போல ஆண் குழந்தைகளுக்கு தனி, பெண் குழந்தைகளுக்கு தனி, என சில சில மாற்றங்கள் செய்து பாடபட்டிருக்கும், ஆண்,பெண் என இருவருக்கும் பொதுவான பாடல் வரிகளும் இருக்கும். 

உதாரணம் :

ராராரோ... ஆரிரரோ
ஆராரோ... ராரிரரோ
என் கண்ணே
ஆரிரரோ ராராரோ...
கண்ணுங்கு... கண்ணுறங்கு...
கண்மணியே... கண்ணுறங்கு... - என்
பொன்மணியே கண்ணுங்கு...

ராராரோ... ஆரிரரோ
கண்ணே ஆரிரரோ ராராரோ...

ஓடு மான் ஓட
ஒன்பது மான் பின் தொடர
காட்டு மான் கூட
கவரிமான் கண்ணுறங்கு
கண்ணான கண்ணே
கண்மணியே கண்ணுறங்கு
பொன்னான கண்ணே
பூமரத்து வண்டுறங்கு

ராரிக்கு அழுத கண்ணோ
நீ ராமர் புஷ்பம் கேட்ட கண்ணோ
தூரிக்கு அழுத கண்ணோ
நீ சொக்க ரதம் கேட்ட கண்ணோ
ஓ ராரி ராரி ராரி ராராரோ             (பொது)
**********************************************************
சரி, ஆணுக்கு தனி பெண்ணுக்கு தனி தாலாட்டு பாடல்கள் என்று சொன்னேன் அல்லவா ,அந்த ஆண் பிள்ளைகளுக்கான தாலாட்டு வரிகள் எப்படி இருக்கும், கொஞ்சம் வீரம் கலந்ததாக இருக்கும் அவ்வளவே இதோ கீழே

உதாரணம் :

பூனை பால் பீச்சி
புலிப்பால் உறையூத்தி
ஆனைப்பால் பீச்சி வரும்
ஆனழகன யாரடிச்சா

தெற்கே உறகிணறாம் - உன்
தெருவெல்லாம் பால்கிணறாம்
பால்கிணத்த பாக்க வந்த
பாலகன யாரடிச்சா

யாரடிச்சா நீ அழுக
நீ அடிச்சாரை சொல்லி அழு

மாமா அடிச்சாகளோ உன்னை
மல்லிகப்பூ செண்டால
அத்தை அடிச்சாகளோ உன்னை
அரளிப்பூ செண்டால
தாத்தா அடிச்சாகளோ உன்னை
தாழம்பூ செண்டாலே
பாட்டி அடிச்சாகளோ உனக்கு
பால் கொடுக்கும் கையாலே

யாரடிச்சா நீ அழுக
நீ அடிச்சாரை சொல்லி அழு

ஓ ராரி ராரி ராரி ராராரோ         (ஆண்)
*********************************************************
அடுத்து பெண் பிள்ளைகளுக்கான தாலாட்டு , இது கொஞ்சம் செல்லமாகவும் குல பெருமைகளை தழைக்க செய்ய கூடியதாகவும் இருக்கும் இதோ

உதாரணம் :

வடக்கே நிலம் வாங்கி உங்க அப்பா
வாழை தோப்பு உண்டு பண்ண
வாடகாத்து வீசுதல்லோ
வருசமக நீ கண்ணசர

தெற்கே நிலம் வாங்கி உங்க அப்பா
தென்னந்தோப்பு உண்டு பண்ண
தெங்காத்து வீசுதல்லோ
செல்லமகள் நீ கண்ணசர

நீ போற இடம்
என்ன வச்சா தோப்பாகும்
இஞ்சி பிஞ்சரங்கம்
எலுமிச்சை தோப்பாகும்
மஞ்ச பயிராகும்
மாமரம் சோலையாகும்

மானே மரிக்கொழுந்தே
மருகில்லா மாணிக்கமே
தேனே திரவியமே
தெவிட்டாத தெள்ளமுதே
மாசி பிறையே
மங்காத மாங்கனியே
தேசப் பிறையே
தெவிட்டாத மாங்கனியே
உங்க குலம் மங்காம
எதிர் குலத்தார் ஏசாம
தங்கமலை பொக்கிசத்தை
தானாள வந்த கண்ணே

கண்ணுரங்கு கண்ணுரங்கு
கண்மணியே கண்ணுரங்கு - என்
பொன்மணியே கண்ணுரங்கு       (பெண்)

தாலாட்டினை உங்கள் இல்லங்களிலும் சிறிது பயன்படுத்தி தான் பாருங்களேன் . உங்களுக்கு தெரிந்த நாட்டுபுற கிராமிய தாலாட்டு வகைகள் ஏதேனும் இருந்தாலும் கூறுங்களேன் 

நன்றி
பெருவுடையான்

திங்கள், 25 ஜூன், 2012

இரண்டும் எட்டும்

இந்தா பக்கத்துல தான் ரெண்டு எட்ல போயிடலாம் அப்டினு பலர் சொல்றத கேட்டிருப்போம்

இந்த ரெண்டுக்கும் எட்டுக்கும் அப்டி என்னதான் தொடர்பு இருக்கு, சம்பந்தமே இல்லாம நடந்து போறதுக்கு எதுக்கு ரெண்டு எட்டுனு சொல்றாங்க இந்த ரெண்டையும் எட்டையும் பத்தி நம் முன்னோர்கள் என்ன தான் சொல்லிருக்காங்க,ஏதோ எனக்கு தெரிஞ்சவரைக்கும் நான் கற்றது வரைக்கும் சொல்றனே. தெரிஞ்சதை சொல்றேனு சொல்றதை விட தெரிஞ்சதை ஒரு குழப்பு குழப்பி தாரேன் நீங்க அப்டியே புடிச்சிக்கோங்க (அட குழப்பி விடறதுக்கும் யாராவது வேணும்ல)

இரண்டு : கண்ணிரண்டு, காலிரண்டு, கையிரண்டு

எட்டு : எண் ஜான் உடலமைப்பு

இந்த எட்டு ஜான் உடம்பை கொண்டு அக்கம் பக்கம் வேடிக்கை பாக்காம கையிரண்டும் வீசி நடந்தா போற தூரம் பக்கம் வந்திடும். அப்டினு வேற யாரும் சொல்லலை நான் தான் சொல்றேன். சரி திட்டாதீங்க நான் தான் முதல்லையே சொன்னேல்ல எதையாவது எனக்கு தெரிஞ்சதை குழப்பி தருவேன்னு...நீங்க திட்னாலும் எதோ இதுல உண்மை இருக்குற மாதிரிதான் தெரியுது (அப்பாடா குழப்பியாச்சி)

ஏதாவது ஆன்மீக குருமார்களிடம் இதை பற்றி கேட்டா அது சித்த சன்மார்க்கத்திற்கான வழின்னு மறைபொருள்ல சொல்லுவாங்க அது என்ன சித்த சன்மார்க்கம் ... எட்டு என்ற எண்ணிற்கு தமிழ் எண்களில்  என்றும் இரண்டிற்கு  என்றும் குறிப்பிடுவது உண்டு அடி உச்சி நு அர்த்தமாம் அதாவது உச்சி முதல் பாதம் வரைக்குமான ஓர் விதமான பயிற்சி அப்டினு ஒரு சாராரும் , எண் ஜான் உடலமைப்பை கொண்ட நாம் உலகில் உள்ள இருமைகளுக்கு உட்பட்டு தான் இருக்கிறோம் இவைகளை கடந்து கடை நிலையான வீடு பேறு அடைவது அதாவது இறைவனடி சேர்தலே இந்த இரண்டு எட்டும் அப்டினு மற்றொரு சாராரும் சொல்வாங்க

எது எப்டியோ இத படிச்சிட்டு நீங்க ஒரு முடிவுக்கு வந்துருப்பீங்க

கொசுரு
*********
* எட்டு போல நடைபயிற்சி மேற்கொண்டால் உடலுக்கு நல்லதாம்
* யோக முறைகள் எட்டு (இயமம்,நியமம்,ஆசனம்,பிராணயாமம்,பிரத்தியாகாரம்,தாரணை,தியானம்,சமாதி)
* சங்க இலக்கியத்தில் தொகை நூல்கள் எட்டு (நற்றிணை,குறுந்தொகை,ஐங்குறுநூறு,பதிற்றுபத்து, பரிபாடல்,கலித்தொகை,அகநானூறு,புறநானூறு)
* கணித முறை படி எட்டு இரட்டை எண் ஆகும்
* சித்தி முறைகள் எட்டு (அணிமா,மகிமா,கரிமா,லகிமா,ப்ராப்தி,ப்ரகாம்ய,ஈசத்வம்,வசத்வம்)


பிரகாஷ் சோனா

  




புதன், 30 மே, 2012

நான்..யார்.......சாமி..யார்

நான் யார் ... நான் யார்? , சாமி யார்? என்னை குழப்பிய வரிகள் உங்களுக்கும் இது குழப்பமான பதிவாக இருக்கலாம்.

நான் யார்..?


நான் யார் என்ற கேள்வியை உனக்குள் எழுப்பு, சிந்தி என பல சாமியார்கள் சொல்லி சொல்லியே உங்களையும் என்னையும் குழப்பி மகான்களாகி அமரர் நிலையையும் எய்து விட்டனர்.

நான் நான் என்று அடிக்கடி சொல்லிகொள்கிறோமே அந்த ”நான்” யார் என்று உங்களுக்குள்ளே நீங்களே கேள்விகேட்டு பாருங்கள் உடனே நான் சிவா என்று உங்களது பெயரை சொல்லிகொள்வீர்கள், மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருங்கள் அப்போது நீங்கள் வகிக்கும் பதவியையோ, தொழிலையோ, குடும்ப பாரம்பரியத்தையோ (இன்னார்மகன், இன்னார் பேரன்) சொல்லிகொள்வீர்கள் நான் யார் என்ற ஒற்றை கேள்விக்கு பதில் தெரியாமல் பெயர், பதவி, பாரம்பரியம், என பல பதில்களை சொல்லிகொள்கிறோம், இவற்றையெல்லாம் நீக்கிவிட்டு மீண்டுமோர் முறை நான் யார் என்ற கேள்வியை உங்களுக்குள்ளே எழுப்புங்கள்.... உங்களுக்கு பதில் கிடைப்பது சிரமமே கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் , சதை நரம்புகளாலான காற்றடைத்த பிண்டம், எண்ண குவியல்களின் களம் என்ற பதிலே நம்மில் உதிக்கும்,சரி இதையெல்லாம் நீக்கிவிட்டு மீண்டும் ஓர் முறை நான் யார் என்றுஉங்களை நீங்களே கேட்டு பாருங்களேன்.பதில்..........ஒன்றுமே இல்லை

சரி கனவிலும் நனவிலும் இதே கேள்வியை கேட்டு பாருங்களேன், அட நனவுல கேட்டு பார்த்திடலாம், கனவுல எப்டி கேக்க முடியும் காரிருள் போர்த்தி என்னை நானே அறியா நிலையிலல்லவா கிடப்பேன், என்று நிங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது...ம்ம்ம் கேட்க முடியாது தான்

ஆக, நான் யார் என்ற கேள்விக்கு நமக்கான அடையாளங்களையோ செயல்களையோ தான் பதிலாய் தருகிறோம். நான் யார் என்ற கேள்விக்கு மேற்சொன்ன பதில்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு பார்த்தால் அதுவே நான் என்ற சுயஆத்மன், அந்த நான் என்ற ஆத்மனுக்கு அடையாளங்களோ குறிகளோ குணங்களோ கிடையாது, எந்த நிலையிலும் மாறாமல் குணங்குறியற்று இருப்பது எதுவோ அதுவே ”நான்”எனும் ஆத்மன், என்று நான் யார் என்ற ஆத்ம ஆராய்ச்சியில் ரமணமகரிஷி சொல்லியிருப்பார்.நான் எனும் அந்த ஆத்மனை நம்மில் நாம் உணர்ந்திருந்தாலே பூலோகத்தில் பிரச்சனைகளே அற்று இருந்திருக்கும் ..சரி அடுத்து இந்த சாமிகளை பற்றி "ச்சி" இந்த ஆசாமிகளை பற்றி பார்ப்போம்.

சாமி யார்..?

சாமி சாமி என்று அடித்து கொண்ட கால கட்டங்களில் நான் யார் என்பதை உணர் என்று சொல்லிய ஆசாமிகள் தான் நமது மாய திரையை விலக்கிய சாமி என்று சொன்னாலும் தகும் என்று சிலர் சொல்வர். ஆசாமிகளாகிய நாம், நாம் யார் என்பதை உணர்ந்தாலே போதும் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஏதுடா சாமி என்று புகட்டியவர்களும் அவர்கள் தானே என்றும் சிலர் வாதிடுவர்.

”நான் யார்” என்று கேள்வி கேட்க தெரியாதவன் தான், ”நான்” எனும் ஆத்மனை உணராதவன் தான், தனக்குள்ளே கேள்வி கேட்டு கொள்ளுங்கள் என்று சொன்னவர்களையே சாமியாக்கி விடுகிறார்கள். நமக்கான பணிகளை நாம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென ஒருவன் நம்மை பார்த்து நீ உலகில் பல இடங்களில் பயணம் செய்திருப்பாய் ஆனால் ஓர் நாளாவது உனக்குள் நீ பயணம் செய்திருக்கிறாயா என்று கேட்டால் அவனை பார்க்கும்போது நமக்கு என்ன தோன்றும் ஒன்னு பைத்தியம்னு தோனும் இல்லன்னா என்னாமா யோசிக்கிறாம்பா நீ அதிமேதாவிதாம்பா இப்டி தான் எண்ண தோன்றும்.

இப்படி தனக்கான பாதையை விட்டு மாற்று சிந்தனையில் சிந்திப்பவர்களை ஞானி என்றும் சாமி என்றும் நம்மில் பலர் ஏற்றுகொள்கின்றனர். அவர்களின் மாற்று சிந்தனை உங்களை சிந்திக்க வைக்கிறதா அப்படியென்றால் அவர்களது மாற்று சிந்தனையையும் அவர்களின் சாரத்தையும் ஏற்றுகொள்ளுங்கள் வேண்டாமென்றில்லை அவர்களை பின்பற்றி அவர்களை அதிமேதாவிகளாக்கி சாமியாக்கி மேலுயர தூக்கி நிறுத்தாதீர் விளைவு நமக்கே

இயற்கை சக்திகளின் சீற்றங்களுக்கும் பிரபஞ்ச சக்திகளுக்கும் பயந்த நம்மவர்கள் தமக்கான பாதுகாப்பு வேண்டி அச்சக்திகளை சாமியாக்கிய வேளையில், மாற்று சிந்தனையுள்ள ஆசாமிகள் நம்மிடையே சாமிகளாகி போனர். இயற்கையை மீறிய சக்திகள் அனைத்தும் மாயைகளே என்று எப்போது நாம் உணர்கிறோமோ நான் என்ற ஆத்ம சொரூபனை எப்போது நாம் உணர்கிறோமோ அன்று இந்த சாமிகள் மீண்டும் ஆசாமிகளாகி போவர்.

இது எனது கருத்து, உங்கள் சிந்தனையோடு எனது கருத்தை ஒப்பிடும்போது சில எதிர்மறை கருத்து இருக்கலாம்.....விதிவிலக்கல்ல

எண்ண எழுத்துகளுடன்
***பிரகாஷ்சோனா***

வியாழன், 22 மார்ச், 2012

நாட்டுபுற கிராமிய பாடல்கள்


இந்த பதிவை நான் எழுத பெருமை பட்டாலும் சிறிய வருத்தமும் உண்டு ஏனென்றால் இக்கலை அழியக்கூடிய தொய்வு நிலையில் இருப்பதனால் அட என்ன கலைன்னு கேக்குறீங்களா நம்ம நாட்டு புற இசை கலைகள் தாங்க...அட ஆமாங்க முன்பெல்லாம் கிராமங்கள்ல எதற்கெடுத்தாலும் பாட்டு பாடுவாங்க குழந்தை பிறக்கும் முதல் இறக்கும் வரை....

குழந்தைக்கு தாலாட்டு பாட்டு , சும்மா சுற்றி திரியிற இளங்காளைகளுக்கும் கன்னியருக்குமான காதல் பாட்டு., விளையாடும் போது பாட்டு , வேலை செய்யும் போது சோர்வு தெரியாமலிருக்க நடவு பாட்டு ,ஏற்றம் இறைக்கும் போது பாட்டு , வழிபாட்டு பாட்டு ,கதை பாட்டு, திருமண சடங்கு பாட்டு ,நின்னா பாட்டு, உக்காந்தா பாட்டு, கும்மி பாட்டு ,குலவ பாட்டு இப்டி நம்ம தமிழர் மரபுல இசையோடும் இயற்கையோடும் ஒன்றியே வாழ்ந்திருந்திருக்காங்க நம்ம முப்பாட்டன்மார்கள் .

ஆனால் நாம இப்ப நமக்கு புரியாத மேற்கத்திய இசையோட கலந்துட்டோம் சரி அதெல்லாம் இப்ப நமக்கெதுக்கு வந்த விடயத்தை சொல்லிடுறேன்.

நாட்டுபுற பாடல்களை பற்றி எனக்கு தெரிந்த , கேட்ட ,படித்த சில பாடல்களை தான் குறிப்பிடலாம்னு இருக்கேன். சரி இப்ப முதல்ல குழந்தைங்க பாட்டுல இருந்து ஆரம்பிப்போம் குழந்தைக்கான தாலாட்டு பாட்டுல மாமன்மார்களுக்கு முக்கியத்துவம் குடுத்து பாடபட்டிருக்கும். அது எதுக்குன்னு தெரியல ஒரு வேளை குழந்தைக்கு தாய்மாமன் முக்கியத்துவம் கருதி கூட இருக்கலாம் உதாரணத்துக்கு

”பால் குடிக்க கிண்ணி
முகம் பார்க்க கண்ணாடி
கொண்டு வந்தான் தாய்மாமன்
ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ”
                                                     
அதேபோல குழந்தை பயன்படுத்தும் பொருட்களை வர்ணனை படுத்தியும் அவன் பிறப்பின் பெருமைகளை பற்றியும் பாடபட்டிருக்கும். மேலும் குழந்தை வளரும் தருணங்களில்

”தப்பளாங் குட்டி தவழ்ந்து வர
தரை எத்தனை பாக்கியம் செய்ததோ
குட்டியானை குதித்து வர
குடில் எத்தனை தவம் செய்ததோ”

இப்படி குழந்தை பிறந்தது முதல் அடியெடுத்து நடப்பது விளையாடுவது வரை  குழந்தைக்கான நாட்டுபுற பாடல்கள்..உண்டு. சிறு குழந்தைக்கான விளையாட்டு பாடல்
ஆலையிலே சோலையிலே;ஆலங்காடி சந்தையிலே
கிட்டிபுள்ளும் பம்பரமும் கிறிக்கியடிக்க
பாலாறு பாலாறு பாலாறு - னு

சொல்லிகிட்டே கில்லியடிப்பாங்க அதே போல இளைஞர்களும்

நாநதா வீரனடா; நல்லமுத்து பேரனடா
வெள்ளிசிலம்பெடுத்து விளையாட வாரேன்டா
தங்க சிலம்பெடுத்து தாலிகட்ட வாரேன்டா
சடுகுடு சடுகுடு சடுகுடு - னு

கபடி ஆடுவாங்க சரி நம்ம இளைஞர்கள் கபடியும், கிட்டி மட்டுமா விளையாடுவாங்க அட ஆமாங்க காதல் விளையாட்டுலையும் கை தேர்ந்தவங்க நம்ம இளைஞர்கள், அவரவர் முறை பெண்களை கேலி செய்து பாடும் பாடல்கள் அவளின் கடைகண் பார்வைக்காக ஏங்குவது போல் பாடல்கள் என நம் நாட்டுபுற பாடல்களில் உண்டு. அதிலும் பெண்கள் தான் கிண்டல் செய்வதில் கெட்டிகாரங்க அட ஆமாங்க இத கொஞ்சம் கேளுங்க

மாமா மணியக்காரா என்னை கட்டிக்க
மஞ்சவடை சுட்டுப்போடுறேன் என்னை கட்டிக்க
கூளூரு போறமட்டும் குத்து பட்டுக்க
கொழுக்கட்ட சுட்டு போடுறேன் புட்டு போட்டுக்க - இப்டி

ஒரு பெண் ஒரு ஆண்மனை கேலிசெய்யறபாட்டு அதே போல அத்தை மகனை கேலி செய்யுற மாதிரி பாட்டுகளும் உண்டு ...இதோ...

நெல்லு வெளஞ்சத பாருங்கடி யம்மா
நெல்லு சாஞ்சத பாருங்கடி
நேத்து பொறந்த அத்த மவனுக்கு
மீசை மொளச்சத பாருங்கடி

அதேபோல திருமண நிச்சயித்த பெண் தனக்கான ஆண்மகனை கேலிசெய்யும் பாடலும் இதோ...
என்னை ஏண்டா பாக்குற நீ சும்மா சும்மா
சுண்ணாம்புக்கு பாக்குறேண்டி உன்னை உன்னை
உனக்குதாண்டா பாக்குறாங்க என்னை என்னை
அதுக்குதாண்டி பாக்குறேன் உன்னை உன்னை

அதே போல கோவலன் போல சுற்றி திரியுற கணவனை பார்த்து மனைவி பாடுற மாதிரி ஒரு பாட்டு
சாமத்தில பூத்த பூவு மச்சா
சாமந்திப்பூ நானிருக்க
சாறிப்போன பூவுக்கு தான் மச்சா
சந்து சந்தா நீ சுத்தலாமா
இப்படியாக ஒவ்வொரு நிகழ்வுக்கும் பாடல்களா பாடி இசையோடவே ஒன்றி நாம் வாழ்ந்திருக்கோம், அதே போல பாடல்களை பாட எழுத்து வரிகளை கையாண்ட முறைகளும் அருமையா இருக்கும். சில பெருசுகளின் பாடல்களை கேட்க தவமாய் காத்திருந்திருப்போம், ஏன் நம்ம கம்பன் கூட ஏற்றம் இறைக்கும் விவசாயின் பாடலுக்காக ஒரு நாள் முழுவதும் காத்து கிடந்ததாக கதைகளும் உண்டு இதோ அந்த பாடல்
மூங்கிலை மேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே

மரித்தோருக்கான பாடல் :
ஆரங்கி ரவிக்கையும் ஆனைமுக தங்க காப்பும்
அதட்டி கழட்டையில என் அங்கம் நடுங்குதே
பூவாலழகியம்மா நான் புண்ணியரோட மனைவியம்மா
புண்ணியரத் தோத்தேனே பூவிழந்து போனேனே
மஞ்சளழகியம்மா நான் மன்னனோட தேவியம்மா
மன்னவரத் தோத்தேனே மஞ்சளிழந்து போனேனே
பொன்னு திருவளைய நான் பொறக்கையில போட்டாளையா
புண்ணியனா வாசலிலே பொடி பொடியாவுதே

இப்படி நிறைய பாடல்கள் உண்டு என்னால் எல்லா பாடல்களையும் பதிவிட முடியல மீண்டும் சந்தர்பம் கிடைக்கும் போது பகிர்கிறேன் முடிவா ஒரு சின்ன கும்மி பாட்டோட பதிவை முடித்து கொள்கிறேன்
  
வாங்கடி வாங்கடி தோழி பெண்டுகளா-வள்ளி
மாமயில் பாட்டை படியுங்கடி
கானலில் இருந்த மாமயிலே-கந்தன்
கண்ட கதைய படியுங்கடி
 குறவர் குடிசை நுழைந்தானடி-அந்த 
கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
துறவர் வணங்கும் புகழாண்டி-அவன்
தோற்றத்தை பாடி அடியுங்கடி
உங்களுக்கும் ஏதாவது கிராமிய பாடல்கள் தெரிந்தால் குறிப்பிடுங்க மீண்டும் சந்திப்போம்

உதவிய பக்கங்கள் : நாட்டுபுற இயல் , விக்கி , கிராமியம்

எண்ணங்களும் எழுத்து கோர்வையும்
பிரகாஷ் சோனா 

செவ்வாய், 20 டிசம்பர், 2011

நடைமுறை வழக்கில் உள்ள இணைச்சொற்கள்

அடுக்கடுக்கான  பல சொற்களை பேசுவதுண்டு அந்த சொற்களை இரட்டைகிளவி போலவும் எதுகை மோனை போலவும் இருக்கும் சில சொற்களுக்கு விளக்கம் தெரியும் சில சொற்களுக்கு விளக்கம் தெரியாது இருந்தாலும் அச்சொற்களை சரியான தருணங்களில் பயன்படுத்தி கொண்டுதான் இருக்கின்றோம் (உதாரணமாக: அடிதடி,அக்கம் பக்கம் ,நேரங்காலம் ) இச்சொற்களை பற்றி ஆசிரியர் இளங்குமாரன் சொல் அகராதியில குறிப்பிட்டு இருப்பார் அந்த சொற்களை பற்றி இதோ உங்கள் பார்வைக்கு...

நெளிவு சுழிவு : ஒருவரிடம் உள்ளது உள்ளது படி பேசிகிட்டு இருக்கும் போது மற்றவர் கடிந்து கொள்வர் நெளிவு சுழிவு தெரியாம பேசறீயேன்னு,நெளிவு-ஒருவரது செயல் அறிந்தோ அல்லது சூழ்நிலை அறிந்தோ அதற்கேற்றார் போல் நடந்து கொள்ளுதல் சுழிவு-ஒருவரது செயல் அறிந்து அதற்க்கு தக்க சூழ்ச்சி வழியில் நடந்து கொள்ளுதல், அத கூட இப்ப போட்டு வாங்கறதுன்னு சொல்றாங்கல்ல அது போல

கணக்கு வழக்கு : அதுக்குன்னு ஒரு கணக்கு வழக்கு வேண்டாமா, அவனுக்கும்  எனக்கும் இனி எந்த கணக்கு வழக்கும் கிடையாது இப்டி ஏதாவது ஒரு சண்டையிலையோ ,இல்ல வேற எதாவது ஒரு சூழ்நிலையிலையோ நாம சொல்லியிருப்போம் இல்ல கேட்டிருப்போம்,கணக்கு-கணக்கிட்டு வைத்து கொள்ளுதல் வழக்கு-காலங்காலமாக(அ)வழக்கமாக செய்தல்

ஒளிவு மறைவு : ஒளிவு-சொல்லவேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு மற்றதை மறைத்து விடுவது மறைவு-எதுவுமே சொல்லாமல் எல்லாவற்றையும் மறைப்பது

ஏடா கூடம் :ஏடா-ஏடம் , அதாவது செருக்கு,கர்வம்,தடித்தனம் அதாவது கண்ணியமற்றவைகள் கூடம்-வஞ்சகம்,மறைப்பு அதாவது முறையில்லாமல்   போவது

உண்ணாம திண்ணாம : உண்ணாம-பேருணவு அதாவது சாப்பாடு திண்ணாம-சிற்றுணவு அதாவது டீ காபி முறுக்கு கடலை

அரசல் புரசல் : அரசல்-தன் காதால் நேரடியாக கேட்பது புரசல்-இன்னொருவர் அவர்கள் காதால் கேட்டு அதை நம் காதால் கேட்பது

வெட்டவெளி : வெட்டை-மேடான பகுதி வெளி-அகன்று விரிந்து பரந்து திறந்த வெளி பகுதி

வத்தலும் தொத்தலும் : வத்தல்-வறுமையில் வாடியிருத்தல் மெலிந்திருத்தல் தொத்தல்-நோயால் வாடியிருத்தல் மெலிந்திருத்தல்

பிக்கல் பிடுங்கல் : பிக்கல்-தனக்கான சொத்தை,பொருளை,பணத்தை உரிமையுள்ளவர்கள் பிரித்தல்(அ)கேட்டல் பிடுங்கல்-உரிமையுள்ளவரும் இல்லாதவரும்(அ) தனக்கான பங்குக்கும் மேலாக பங்கை(சொத்து,பொருள்,பணம்)பிரித்தல்

பழக்க வழக்கம் : பழக்கம்-ஒருவர் பல காலமாக செய்து வருவது வழக்கம்-பலரும் பலகாலமாக செய்து வருவது அதாவது மரபு வழி வழியாக வருவது

புள்ளை குட்டி : புள்ளை-ஆண் பிள்ளை குட்டி-பெண் பிள்ளை

பேர்புகழ் : பேர்-வாழும் காலத்தில் கிடைக்கும் பெருமைகள் புகழ்-நாம் இல்லாத போதும், இல்லாத காலத்திலும் கிடைக்கும் பெருமைகள்

நோய் நொடி : நோய்-உடலளவிலும் மனதளவிலும் ஏற்படுகிற பிணி நோய் நொடி-வறுமை

திக்குமுக்கு : திக்கு-வார்த்தை பேசமுடியாத நிலை முக்கு-மூச்சி வெளியிட முடியாத நிலை, தான் செய்த தவறை மற்றவர் அறிந்து விட்ட நிலையில் அச்சத்தில் உறைந்து போயிருத்தல்

சொல்லாம கொள்ளாம : சொல்லாமல்-வந்த விஷியத்தையோ(அ)போகின்ற விஷியத்தையோ சொல்லாதிருத்தல் கொள்ளாமல்-எதையும் பெறாமல் அதாவது வாங்காமல் செல்லுதல்

சீரும் சிறப்பும் : சீர்-மனமுவந்து பொருட்களை தருதல் சிறப்பு-மனமுவந்து பாராட்டுதல் புகழ்தல்

சின்னாபின்னம் : சின்னா(சின்னம்)-தனிமை ப்டுத்தல், தனித்தல்,பிரித்தல் பின்னம்-சிதைவுபடுத்துதல்,சேதபடுத்துதல்

சாக்கு போக்கு : சாக்கு-தான் செய்த தவறை பிறர் மீதோ ஏனைய நிகழ்வுகளின் மீதோ சொல்லி தப்புதல் போக்கு-செய்த தவறை மறைக்க திசை திருப்புதல்

சண்டை சச்சரவு: சண்டை-ஒருவரையொருவர் தாக்கி கொள்தல் அதாவது கைகலப்பு சச்சரவு-வாயால் திட்டிக் கொள்தல் வாய்சண்டை

சட்டதிட்டம் : சட்டம்-அரசால் வகுக்கப்பட்ட ஒழுங்குமுறை திட்டம்-காலங்காலமாக சமுதாயத்தால் வகுக்கப்பட்ட ஒழுங்குமுறை

கூடமாட : கூட-ஒருவருக்கு துணையாக(அ)உதவியாக இருத்தல் மாட-ஒருவருக்கு பேச்சு துணையாக இருத்தல்

ஏழை பாழை : ஏழை-வறுமையில் உள்ளவர் பாழை-ஒன்றுமில்லாதவர் வெறுமையாளி

ஆஞ்சி ஓஞ்சி : ஆஞ்சி(ஆய்ந்து)-ஓர்செயலை ஆராய்தல் ஓஞ்சி(ஓய்ந்து)-எதுவும் செய்ய முடியாமல் போதல்(அ)சோர்ந்து போதல்

அரைகுறை :அரை-சரிபாதி அளவு குறை-அரையிலும் குறைவானது

அருமைபெருமை : அருமை-தன் செயலால் உயர் தன்மை அடைதல் பெருமை-கல்வி,பதவி,செல்வம் ஆகியவற்றால் வரும் செல்வாக்கு

அக்கம் பக்கம் : அக்கம்-தான்,தான் இருக்கும் இடம்,வீடு பக்கம்-அருகில் இருப்பவர்(அ)அதற்கடுத்து இருப்பவர் இருக்கும் இடம்,வீடு






உதவிய பக்கங்கள்---- தமிழ் அகராதி, இணைச்சொல் அகராதி , விக்கிபீடியா

*****பிரகாஷ்சோனா*****

வியாழன், 24 நவம்பர், 2011

WHY THIS கொலைவெறி

தலைப்பை பார்த்தவுடனே ஒருமுடிவுக்கு வந்துரிப்பீங்க நான் என்ன சொல்ல போறன்னு நீங்க நினைத்தது சரிதான் நமது தமிழுக்கு வந்த நிலைமைய பார்த்தீங்களா.. என்னத்த சொல்ல

”கல்தோன்றா மந்தோன்றா காலத்தே மூத்த குடி தமிழ் குடி” இப்டி பெருமையா வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் ஆனால் இங்க நம்ம ஆளுங்க கிட்ட தமிழ் எப்டியெல்லாம் மாட்டிகிட்டு முழிக்குதுன்னு உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். தமிழை நம் முன்னோர்கள் சங்கம் வைத்து வளர்த்தார்கள்  இயல் இசை நாடக கலைகள் மூலம் வள்ர்த்தார்கள் என்று படித்திருப்போம் ஆனால் தற்போதைய நிலை தமிழ்சங்கங்கள் எங்கு இருக்கின்றது என்றே தெரியவில்லை கட்சி சங்கங்களும் சாதி சங்கங்கள் மட்டும்  தான் தென்படுகிறது . இயல்,இசை,நாடகம் இன்றும் இருக்கு நைந்து போககூடிய நிலையில் இருக்கு . சினிமாவின் மூலம் கொஞ்சம் அப்பப்ப உசுரோட இருக்கு .

முன்பெல்லாம் நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது திருவிழாக் காலங்களில் விடிய விடிய புராண கதைகளை மைய படுத்திய கூத்துகள் வீர ம்காராசாக்களை பற்றிய கூத்துகள் நடக்கும் விடிந்ததும் கரகாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் பாரம்பரிய மேளதாளங்கள் எல்லாம் நடக்கும் இப்படி நம் முன்னோர்கள் விட்டு சென்ற கலைகளின் மூலம் கூத்துகாரர்களும் தமிழை வளர்த்தனர்

அந்த கூத்துகள் தான் தற்போது சினிமாவாக உருப்பெற்றுள்ளது தற்போது சினிமா தமிழையும் நம் பாரம்பரியத்தையும் வளர்க்கிறதா என்றால்... அதற்கான பதிலை நான் கூற விரும்பவில்லை உங்களுக்கே தெரியும்

அதற்காக நம்மவர்கள் மீது குறை கூறவில்லை தமிழை நேசிப்பவர்கள் சுவாசிப்பவர்கள் அனேகம் பேர் உண்டு .முதலில் இரண்டு சம்பவங்களை உங்களிடம் பகிர ஆசை படுகிறேன்.

சம்பவம் : 1
  எனது பாட்டியின் இறப்பிற்க்காக நான் பிறந்த இருப்பிடத்திற்கு செல்ல நேர்ந்த்து அப்போது பாட்டி பிறந்த வளர்ந்த வாக்கபட்ட அணைத்து கதைகளையும் கூறி கூத்து கட்டினர் அப்படி கூத்து கட்டிய அதே கிராமத்தில் எனது அண்ணன் மகனும் இருக்கிறான் சென்ற இடத்தில் அண்ணனிடம் பேசி கொண்டிருந்தேன், அப்போது மகன் என்ன படிக்கிறான் என்று கேட்டேன் அவன் காம்போண்டு ஸ்கூல்ல படிக்கிறான்னு பெருமிதம் பட, மகன் குறுக்கிட்டு அது காம்போண்டு இல்லப்பா கான்வெண்ட் என்று சொல்லி கோபபட்டான் .

சம்பவம் : 2
எனது நண்பனை பார்க்க வேலூருக்கு சென்றிருந்தேன், அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் குழந்தைகளிடம் என்ன படிக்கிறாய் என்று கேட்டேன், ஒருகுழந்தை 1st std என்றும் மற்றொரு குழந்தை LKG என்றும் புன் முறுவலாய் பதிலளித்தனர் .அவ்வாறு பேசிகொண்டிருக்கையில் மீண்டும் நான் என்ன சாப்பிடுவாய் மீன் சாபிடுவாயா, கறி சாப்பிடுவாயான்னு கேட்டேன் இரண்டும் சாப்பிட மாட்டேன் என்று சொன்னாள் சரி என்ன தா சாப்பிடுவ என்று கேட்டேன்.  ஃபிஸ் ,சிக்கன், எக் என்று சொன்னாள்.

இப்போது சொல்லுங்கள் தமிழ் என்ன பாடுபடுகிறது பார்த்தீர்களா, சரி அதவிடுங்க அது ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் விடயம் பெற்றோருக்கான ஆசையும் கூட , சமீபத்தில் உறுமி இசை தகடு வெளியீட்டு விழாவில் வைரமுத்து வேதனையோடு ஒரு விடயத்தை சொன்னார். கமலஹாசன் சினிமாவில் தமிழ் வளர்ப்பது கடினம் என்றும்அவர் எவ்வளவு நொந்து அதை சொல்லியிருப்பார் என்பது எனக்கு தெரிகிறது என்றும் ஆனால்
சினிமாவில் இன்னும் தமிழ் வளர்க்க முடியும் என்பதற்கு உருமி ஒரு எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.  எதற்காக இப்போது இதை கூறுகிறேன் என்றால் சமீபத்தில் தனுஷ் அவர்களின் 3 படத்திற்கான கானொளியை பார்க்க நேர்ந்தது அதை நீங்களே பாருங்க தமிழையும் ஆங்கிலத்தையும் சேர்த்து எப்டி கொலை பண்னிருக்கார்ன்னு இந்த பாட்டுல ஒரு வரி கூட தமிழே கிடையாது ஆனால் இது மூனுங்கற தமிழ் படத்துல வர்ர தமிழ் பாட்டு இதுல இன்னொரு வேதனையான விடயம் சினிமாவில தமிழ் வளர்ப்பது கடினம் என்று வேதனை பட்டவரின் மகளின் முன்னிலையில் தனுஷ் பாடுகிறார் (இதுக்கு தானா அம்மனி 7ம் அறிவுல அந்த கூவு கூவுனிங்ளா அம்மணி) 
இன்னுமொரு விடயம் அந்த படத்தில வரும் புறநானூற்று பாடலை பற்றி சொல்லி அதற்கு விளக்கமும் சொல்லி அதில் வரும் இரு களிரை மட்டும் என்னவென்று சொல்லாமல் அறிந்தோர் அறிவாராக தெரிந்தோர் தெரிவாராக என்று சொல்லி கொண்டிருக்கையில் அந்த இரு களிரின் விளக்கம் தெரியாததால் அரங்கில் அணைவரும் அமைதியாய் இருக்க ஒருவர் மட்டும் கைதட்டுகிறார் .அப்போது கவி பேரரசு இந்த வரி அவர் ஒருவருக்காக மட்டும் தான் புரியாதவர்கள் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று வேதனையோடு சொல்கிறார். அந்தளவுக்கு நாம் தமிழை மறந்து தொலைத்து கிடக்கிறோம் .உடனே உனக்கு தெரியுமா என்று என்னிடம் கேட்டு விடாதீர்கள் தெரியாததால் தான் இந்த பதிவே எழுத நேர்ந்தது இதோ அந்த புறநானூற்று வரிகள்


”அதோ அதோ உன் ஒரு கரம் உருக்கி களிரொன்று எரிகின்றாய்…
இதோ இதோ என் இரு களிர் அடக்க என் குடில் வருகின்றாய்”

இன்னுமொன்றையும் கூறினார் 
 இரண்டாம் நூற்றாண்டில் வருகிற பாட்டை 15ஆம் நூற்றாண்டு கதைக்கு 21ஆம் நூற்றாண்டில் எழுதியிருக்கிறேன் என்று சொன்னார்


இப்ப முடிவா என்ன சொல்ல வர்ரேன்னா நம் முன்னோர்களின் வீரவாளையும் கலாச்சாரத்தையும் பொருட்காட்சியில வச்சிருக்கிற மாதிரி நமது தாய் மொழியையும் வச்சிராதீங்கன்னு சொல்றேன் கொஞ்சமாவது தமிழை கொல்லாம தமிழ் பேசுங்க தயவுசெய்து,  நம்ம காலையில இருந்து இரவு உறங்க செல்லும் முன் வரை தமிழுடன் கலந்து எத்தனை கலப்பட மொழிகளை பேசியிருப்போம் சற்று சிந்தித்து பாருங்கள்

வாழ்க தமிழ் ! ஓங்குக அதன் புகழ் !

என்றென்றும் உங்கள்
பிரகாஷ் சோனா











வியாழன், 20 அக்டோபர், 2011

மறத்தமிழன்

மறத்தமிழன்

இவ்வார்த்தையை நம்மில் பலரும் கூறி கொள்வதுண்டு, அதற்கான விளக்கம் தான் என்ன, மறம் என்ற அந்த ஒற்றை சொல்லுக்கு அப்படி என்னதான் தனித்துவம் இருக்கு; அதன் மத்துவம் தான் என்ன ,ஏதோ நான் இது வரை பயின்றதை வைத்து ஓர் விளக்கம் . தவறு என்றால் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன்.

மறம் என்ற ஒற்றை சொல்லில் தீரம், வீரம், சினம், சீற்றம், வலிமை, ஆற்றல், வெற்றி, அமர், அழித்தல், கொல்லுதல் என பத்தும் அடங்கியிருப்பது தான் இதன் சிறப்பு, சரி அப்படி என்னதான் இந்த பத்திலும் இருக்கிறது பார்ப்போம்..


தீரம் : எதையும் துணிவுடன் செயல்படுத்தும் திறன்


வீரம் :  பராக்கிரமமான மனவலிமை, எச்சூழ்நிலையிலும் தளரா மனம், ஆயிரம் பேர் எதிர்கொண்டாலும் ஒற்றை ஆளாய் நின்று எதிர்க்கும் திறன்


வலிமை : தனது நிலைபாட்டின் மீது உள்ள உறுதி பலம் அதாவது நக்கீரன் தனது வாதத்தின் மீதுவைத்துள்ள நிலைபாட்டை போல


ஆற்றல் :  எதையும் காலம் தாழ்த்தாமல் விரைவில் செய்து முடிக்க கூடிய திறன் கொண்டிருத்தல்


சினம் : கோபம்


சீற்றம் : அநீதிகளை கண்டு பொங்கி எழுதல்,& ஒரு செயலின் மீதான தீவிரம்


அமர் : உக்கிரமான போர்முறைகளில் கைதேர்ந்தவர்கள் எச்செயலிலும் பின்வாங்காதவர்கள்


அழித்தல் : ஓர் செயலுக்கு தீர்க்கமான முடிவெடுத்தல் அச்செயல் மீண்டும் உருப்பெறாமல்அழித்தல்


வெற்றி : செயல்களனைத்தையும் நீதிக்கு உடன்பட்டு களிப்புறுதல் தோல்விக்கு தினம் தினம் முற்று வைத்தல்


கொல்லுதல் : நீதிக்கு தலைவணங்கல் மனுநீதி சோழனை போல நீதிக்கு பின் தான் பந்தபாசமெல்லாம்

என்ன நண்பர்களே மறம் என்ற ஒற்றை சொல்லில் எப்படி நம் முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள் பார்த்தீர்களா நமக்கும் இதில் அனேக செயல்கள் இருக்கும் ...இருக்காதா பின்ன நம் முன்னோர்கள் விட்டு சென்ற தடயங்களாயிற்றே....

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

தமிழ் மொழியின் தினசரி நாளேடுகள்

நம் நாட்டின் செய்திதுறை மற்றும் தொலைகாட்சி ஊடகதுறைகள் அபரி விதமாக வளர்ந்துள்ளது மகிழ்ச்சியானதே இவ்வளவு வளர்ச்சி கண்டும் குற்றங்களை மட்டும் தடுக்க முடியவில்லை எந்தளவுக்கு முன்னேற்றத்தை நோக்கி செல்கிறோமோ அந்தளவுக்கு குற்றங்களும் அதிகரித்து கொண்டுதான் செல்கின்றன சரி நாம் விஷயத்துக்கு வருவோம் நமது தாய் மொழியான தமிழில் எத்தனை பத்திரிக்கைகள் உள்ளது என்று பார்ப்போம்

தமிழ் மொழியின் தினசரி நாளேடுகள் :

நமது தமிழ் மொழியில் வெளியான முதல் செய்தி பத்திரிக்கை சுதேசமித்ரன் என்ற பத்திரிகையாகும்.இது 1882 ஆம் ஆண்டு திரு.ஜி.சுப்ரமணிஅய்யரால் துவங்கபட்டது 1904ல் பாரதியார் அவ்ர்கள் இந்த பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றியுள்ளார் நாவல்களில் சிறந்த நாவல் என்று கூறப்படும் திரு.ஜானகிராமன் அவர்களின் நாவலான மோகமுள் இந்த பத்திரிகையில்தான் தொடராக வெளிவந்தது 1962ல் திரு.ஜி.சுப்ரமணிஅய்யரின் மறைவுக்குபின் வழிநடத்த முடியாத காரணத்தால் 1970ல் இந்த பத்திரிகை மூடபட்டது

1.தினத்தந்தி-1942ல் திரு.சி.பா. ஆதித்தனாரால் மதுரையில் தொடங்கப்பட்டது.

2.தினமணி-1934ல் திரு.t.sசொக்கலிங்கம் அவர்களுடன் தொடங்கப்பட்டது
new indian expressஆல் வழிநடத்தபடுகிறது

3.தினமலர்-1951ல் திரு.டி.வி.ராமசுப்பய்யரால் தொடங்கப்பட்டது

4.தினகரன்-கே. பி. கந்தசாமி அவ்ர்களால் தொடங்கபட்டு வழிநடத்த முடியாத காரணத்தால்
2005 முதல் திரு.கலாநிதி மாறன் அவர்களால் வழிநடத்தபடுகிறது

5.தினபூமி-1990 களின் பிற்பகுதியில் வெளியாகத் தொடங்கியது

6.தீக்கதிர்-மதுரையில் இருந்து வெளிவரும் செய்திதாள்

7.முரசொலி-1942ல் முன்னாள் முதல்வர் திரு.கலைஞர்.கருணாநிதி அவ்ர்களால்
தொடங்கபட்டது

8.நமது எம்ஜிஆர்-முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கபட்டது

9.விடுதலை-தந்தை பெரியார் அவர்களால் தொடங்கபட்டது

10.தமிழ்சுடர்-திரு.உஸ்மான் பயாஸ் அவர்களால் தொடங்கபட்டது

11.தினசுடர்-1963ல் தொடங்கபட்டது கர்நாடகாவிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிக்கை

12.மாலைமலர்-1977 திரு.சி.பா.ஆதித்தனாரால் கோவையில் தொடங்கபட்டது ஒரு மாலை
நாளிதழ்

13.மாலைமுரசு-

14.தமிழ்முரசு-2005 திரு.கலாநிதி மாறன் அவர்களால் தொடங்கபட்டது ஒரு மாலை நாளிதழ்

15.மாலைசுடர்-

16.தினகரன்-1932ல் தொடங்கபட்டது இது இலங்கையில் வெளியாகும் தமிழ் செய்திதாள்
லேக்ஹவுஸ் நிறுவனம் வழி நடத்துகிறது

17.தினகுரல்-இது இலங்கையில் வெளியாகும் தமிழ் செய்திதாள் வீரகேசரி பத்திரிகையில்
ஆசிரியர்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாட்டால் தொடங்கபட்டது

18.வீரகேசரி-1930ல் திரு.சுப்ரமணி செட்டியாரால் தொடங்கபட்டது இது இலங்கையில்
வெளியாகும் தமிழ் செய்திதாள்

19.உதயன்-1985ல் தொடங்கபட்டது இது இலங்கையில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

20.விடிவெள்ளி-இது இலங்கையில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

21.காலைகதிர்-பிரித்தானியா(uk)விலிருந்து வெளியாகும் தமிழ் செய்திதாள்

22.மக்கள் ஓசை-1981 மலேசியாவில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

23.மலேசியநண்பன்-மலேசியாவில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

23.தமிழ்நேசன்-1924ல் தொடங்கபட்டது

24.ஈழமுரசு-பிரான்சில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

25.மக்கள்குரல்-1973 திரு.சண்முகவேல் அவ்ர்களால் தொடங்கபட்டது

26.தமிழ்முரசு-சிங்கபூரில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

எனக்கு தெரிந்த நாளிதழ்களை மட்டும் தெரிவித்துள்ளேன் இன்னும் நமது தாய் மொழியான தமிழ் நாளிதழ்களை பற்றி உங்களுக்கு தெரிந்தால் குறிப்பிடுங்களேன்