புதன், 11 ஜூலை, 2012

என்னவளே II

சிங்கார மயிலுக்கு சின்ன குயில் கூவுது
ஆலோபங்கிளியும் ஆரிராரோ கேட்குது

இலைச்சருகு சிறகாய் துள்ளி திரியுது
மின்மினி யிங்கே கண் சிமிட்டுது

மாய கண்ணனிங்கே மன்மதனாக
மாயவள் எங்கே மனக் கூட்டு குயிலே

ஊடல் சுகம் கற்க காதல் ஏற்க வந்தேன்
வசந்தனுமிங்கே...! வாயடைத்தே போனேன்

ஓரவிழி பார்வையில் ஓடைதனில் நீ நனைய
மாராப்பு போடுதம்மா வேனிற்கால தூரல்

தூண்டில் கண்கள் சரசம் பேசிட
தூவான மெங்கும் ஒலியொளி வீசுது

ஆடுமயிலே நீ சேலை உடுத்த வருணனும்
மறைந்தானம்மா வண்ண சேலை கொடுத்திட

நெருஞ்சிகளும் உன் பாதந்தனை  பதம் பார்க்க
கைகொடுத்தேன் உன் நெஞ்சில் இதமாய் வாழ

காதல் வழி தேட மோதல் விழி வீசுகிறாய்  அடடா...
இன்பசுகம் இன்பசுகம் என்னில் நீ பேசுகிறாய்

உடுக்கை இடைதனை காண உன்னுடுப்பை
களைகிறான் பாதகன் நெருஞ்சி சகோதரன்

மீண்டும் என்னில் மோதல் விழி வீசுகிறாய்
காதல் மொழி பேசி ஊடல்சுகம் கற்கிறாய்

அடடா... இன்பசுகம் நல்லினிய சுகம்

நாற் திசையவர் அறியா நான்மறை யறிந்தேன்
நடுநிசி உறக்கம் நான் மறந்தேன்

என்னில் எனையே நான் மறந்தேன்

***பிரகாஷ் சோனா***


சனி, 7 ஜூலை, 2012

நட்போடு மீண்டும் ஓர் நாள்

மூவேழாண்டு முந்தைய நட்பின் அழைப்பு
வீட்டின் அழைப்பு மணியில் ரிங்காரமிடுகிறது

நட்புகள்...
ஆர்ப்பாட்ட அகமகிழ்வோடு இயல்பாய்
நலம் சுகிக்க பின்னோக்கி நகர்கிறது நாட்கள்....

ஆகாய கூட்டங்களாய் நட்பான காலமது

கேலி கூத்துகளிடையே காலியான மன காயங்கள்
துயில் கலையுமுன் மீண்டுமோர் குட்டி தூக்கம்
அறிமுக நாட்களில் உதிர்ந்த மரியாதை நிமித்த வார்த்தைகள்
பிருந்தா முதல் மணிமேகலை வரை மதிப்பெண் இட்டு
மகிழ்ந்த வேளை எனக்கான மதிப்பெண் முத்தமாய் விழ
வீழ்ந்த என் மனதுக்கு நட்பின் கேலி கரவொலிகளென
நுகர்ந்து சென்றது ஆராவாரமான நினைவுகள்....

நட்புகள் பலர் நலமாய் மேன்மையில் உளவென
நட்பு கூற மனமேனோ குளிர்ச்சியில் நனைகிறது
நல்லறமேற்ற நட்புக்கு என்றும் மேன்மையேயென
சொல்லிச் சிரிக்கிறது வெகுளி உதடுகள்
செருக்கில்லா நட்பவனது பேச்சிலும் மகிழ்வு செழிப்புடன்

தொடர் பேச்சில் எச்சில் விழுங்க முடியா நிகழ்வு பல
மனதை தட்டிப் பார்க்க அஞ்சலியாய் மெளனங்கள்
மீண்டுமோர் முறை இழந்தவை பெற்றிடலாமென

நொடிகள் கரைந்து கொண்டிருக்க விடை பெறும் தருணம்
ஆரத்தழுவிய நட்பு
இல்லம் ஓர் முறையேனும் வாயேன்...!  என்றிட
கண்ணீர் பெருகி தோள் சாயந்திட....
கண்ணீர் துளி மட்டும்
அவனோடு........
அவனில்லம் நோக்கி பயணிக்கிறது


****பிரகாஷ்சோனா****





புதன், 4 ஜூலை, 2012

கோடிகளை நாடி

அண்டம் கோடி அதில் விழும் பிண்டம் பலகோடி
இருப்பது பலகோடி இனி வருவதும் பலகோடி

கிட்டினர் கோடி... காடிக்கு பட்டினியர் கோடி
தாடிகள் தேடி அடிகள் ஆக்குவோரும் கோடி

தோடிகள்  நாடி...  இலயிப்போர் கோடி
கோடிகர் கோடி... கோடி ஈட்டுவோர் கோடி
கோடிப் பருவந் தனில் கோட்டிகள் கோடி

தெருக்கோடி தனில் பேடிகளும் வாடி
கோடிகளோ கேடிகளையே நாடி - இனி
கோடிதனில் புரள்வதும் யார் யாரோ

குறிப்பு :
********
                 கிட்டினர் -- உறவினர்
                 காடி         --  புளித்த கள்
                அடிகள் ---  சாமியார்(ஆச்சாரியார்)
                தோடி  ----  இராகம், பண்,கர்நாட்டிக்
                கோடிகர்-- நெசவாளர்
                கோடி  ---- புதுத்துணி(சீலை)
               கோடிப்பருவம் -- இளமைப்பருவம்
               கோட்டி -- துன்பம்,பகடி,விகட கூத்து,அழகு
               பேடி   ---- அலி, அச்சமுடையவன்

***பிரகாஷ் சோனா***