இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 ஜூன், 2012

விவாசாய புரட்சி (விவசாய நிலத்தின் புலம்பல்)

தரிசா கிடந்த நான் - வாகனம்
தரிகெட்டு ஓடும் தார் சாலையாகி போனேன்
மகசூல் ஈன்ற என் வயிறும்
பாளம் பாளமா வெடிச்சி பாழா போனேன்
விளை நிலமா இருந்த நான்
ரியல் எஸ்டேட்டுக்கு விலையாகி போனேன்

விவசாய குத்தகைக்கு போன எம்மேல
சாயம் பூசுன மகராசி குத்தவச்சிட்டா மாளிகையா
காணி நிலமும் இப்போ அவளுக்கே காணிக்கையா
நஞ்சையும் புஞ்சையும் நைந்து போச்சு
பட்டறை கழிவால எல்லாம் நஞ்சாகி போச்சு
சாகுபடியும் இப்போ கழிவா போச்சு

நான் இன்னும் மலடு ஆகல - என்
நண்பன் மட்டும் கிழடு ஆகிட்டான் - நீயோ
விஞ்ஞானத்துக்கு கைகூலியாகிட்ட
வசதி வாழ்கைக்கு எனை மறந்தே போயிட்ட
சகதியில நின்னவனும் காணா போயிட்டான்
சகட்டு மேனிக்கு அவன் வீணா போயிட்டான்

வேள்னா கொடைனு சொல்லுவாங்க அதனாலயே
எனக்கு வேளாண்ணு பேரும் வச்சாங்க
யாராவது எனக்கு கொஞ்சம் கொடை தாங்க
அதுவும் பசுமை கொடையா தாங்க - உங்கள
காக்கும் எனக்கு எனது பட்டினி சாவ தடுக்க
மீண்டுமோர் பசுமை புரட்சி கொண்டுவாங்க

களை எடுக்க வந்த காலம் மாறி
களை கூட இல்லாம களையிழந்து நிக்கிறேன்
என்னை கொஞ்சம் கை தூக்கி விடுங்க
விவசாயத்துக்கு ஒரு புரட்சி பண்ணுங்க

என்றென்றும் உங்கள்
பிரகாஷ் சோனா

வியாழன், 31 மே, 2012

தேன் நிலவு

தேன்...
ஆதிமனிதனின் முதல் உணவு
சுவைகளின் முதல்வன்
பூலோகத்தின் அருமருந்து
பூக்களின் சொத்து

லட்சம் போராளிகளை(தேனீக்களை)
வென்றெடுத்த அமுது

நெடுந்தூர பயண களைப்பில்
தோள் சாய்ந்து கிடந்தவளை
மறந்தே போனான் அமுதன்

மூன்று வருட மரண சுகம் அனுபவித்த
காதல் வாழ்க்கைக்கு பின்
சிறகு விரித்த பறவையாய் அவர்களின்
தேன் நிலவுக்கான பயணம்

பெயருக்கேற்ப கொஞ்சி பேசுவதில்
அவள்... தேன் மொழிதான்

அவன், தேடல் கொண்டவன்.
போராளி, காதலிக்கும் போது
அவளின் மனதை அறிய முற்ப்பட்ட
போராளி.

ஏன் நெடு நேர மெளனம்
ஏதும் சிந்தனையா
அமுதனின் மெளனத்தை கலைத்தால்
தேன்மொழி

இந்த தேனீக்களுக்கு
சுறுசுறுப்பும் கட்டுகோப்பான ஒற்றுமையையும்
யார் சொல்லி தந்தார்கள்
என்று சிந்தனை

அவை ரிங்காரமிட்டு ஆடி பாடி அப்படி
என்னதான் பேசிகொள்ளும்
என்று சிந்தனை

தோள் சாய்ந்தவள்
வாள் பார்வை வீசி

நீங்கள் தேன் பிரியரா

ஆம்... இந்த தேன் மங்கை
மீது பிரியம் கொண்டவன்

போதும்... தேன் தெவிட்டிவிட போகிறது

தேனோடு இந்த அமுதன்
சேர்ந்திருப்பதால்
தெவிட்டாது கண்ணே..

கட்டியணைத்து , தேனீக்கள் அறியா
இதழ் மலரோடு இதழ் மலரில்
முத்தமிட்ட அவளை
மின்சார முத்த பாய்ச்சலை கலைத்தது
பெண்ணுக்கே உரித்தான நாணம்.

பொய்யான கோபத்தில்
மெய்யான வெட்க புன்னகை
உதிர்த்தாள்.

தேன்மொழி
அங்கே பார் மனிதனுக்கான
உணவு சங்கிலிக்கு
ஆயத்தமாகின்றன தேனீக்கள்

விளங்காமல் விழித்தாள் தேன்மொழி

தேனீக்கள் பூக்களின்
மகரந்த சேர்க்கைக்கு
ஆயத்தமாகின்றன பெண்ணே

ஆளுயர மரங்கள் புதர் மண்டிய காடுகளுக்கு
அப்பால் சூரியன் மறைந்தே கிடந்ததால்
இருள் மங்கிய சூழல்
வெப்பம் தனித்த மெல்லிய குளிர் காற்று
இருந்தும் மயங்கிய நிலையில் தேன்மொழி
காதல் மனம் கொண்ட புதுமண தம்பதியல்லவா

தேன் நிலவுக்கான விளக்கம் தெரியுமா அமுதன்

ம்ம்ம் சொல்கிறேன் கேள்

தம்பதியரின் உள்ளங்கைகளில்
தேனை ஊற்றி நிலவும் தேனும்
ஓர் கோட்டில் இணையும் நேரம்
இவர்களும் இணைந்து
தேனை ஒருவர் மாற்றி ஒருவர்
ஊட்டி விடும் தருணம் அது பெண்ணே

உன் கட்டுகதையை நிறுத்து
செல்ல முனுமுனுப்புடன்
தேன்மொழி

உன் ஒவ்வொரு வெட்க புன்னகையும்
ஒவ்வொரு தேன்துளி போலல்லவா இருக்கிறது

நான்
உன் தேன்துளி வெட்க புன்னகையை சேகரிக்க
அந்த தேனீக்களை விட படாது பாடல்லவா
படவேண்டியிருக்கிறது

தேனீக்கள்
தேனை சேகரிக்க
லட்சம் முறை பறக்கும்போது
உனக்கென்னவாம் எனை
லட்சம் முறை கூட
வெட்க புன்னகை சிந்த வை

தேன்மொழி
உன் நடை, இடை,  உடை
ஒரே மொழி பேசினாலும்
செவ்விதழ் பதித்த உன் முகம்
பல மொழி பேசுகிறதே அதிலும்
அந்த செவ்விதழோரம் சிறு
குறு குறு துடிப்பு ...அடடே
உண்மையிலே உன் மொழி
தேன்மொழி தான்

சோமபாணம் தேனில் உருவானது
பலமுறை படித்தும் மனம்
ஏனோ ஏற்கவில்லை

உன் இதழ் அசைவின் பேச்சில்
கிறங்கிதான் போயிருக்கேன்
உண்மையிலே சோமபாணம்
தேனில் உருவானது தான்

சிறு வெட்க புன்னகை களைந்து

அமுதன் அங்கே பார்
ரோஜா மலர்

ரோஜா இதழுக்கும் தேனுக்கும்
ஓர் தொடர்பு உண்டு
பிஸ்கட் உருவாக இவர்கள் தான்
முதல் காரண கர்த்தா

தேன்மொழி
இந்தா இந்த பூவின் தேனை ருசி
ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு ருசி

தேனிலவில் தேன்மொழியோடு
மனதில் ஓர் புது தெம்பு தான்

மங்கோலிய வீரன் செங்கீஸ்கானுக்கு
போர்கால உணவாய் தெம்பூட்டியது
அந்த தேனென்றால்
இந்த அமுதனுக்கு
தேனிலவில் தெம்பூட்டும் உணவாய்
நீ தானடி தேன்மொழி

வெட்க புன்னகையாள்
மீண்டும் நாணத்தோடு


எண்ணங்களும் எழுத்தும்
****பிரகாஷ்சோனா****




சனி, 25 பிப்ரவரி, 2012

பனை (கற்பக விருட்சம்)

சிவாவுக்கு அந்நாளின் இயந்திர வாழ்க்கை முடிவடையும் தருணம் ஆம் வேலைக்கு போய்விட்டு சோர்வாய் வந்து சோபாவில் அமர
என்னங்க இன்னைக்கு ரொம்ப வேலையா என்று சிவாவின் தலையை கோதிவிட்ட படி கேட்டாள் மனைவி
இல்லம்மா ட்ராபிக்-ல வண்டிய ஓட்டிட்டு வர்ரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சிம்மா விலைவாசி உயர்வை கண்டித்து மீட்டிங் போட்ருக்காங்க அதா ரொம்ப டயர்டு ஆகிடுச்சி
 சரி மோகிதா தூங்கிட்டாளா
இப்பதான் பால் குடிச்சிட்டு தூங்குறா
ம்ம்ம்ம் என்னங்க அப்றம் மாமா போன் பன்னிருந்தாங்க
ஊர்ல இருந்து கிளம்பிட்டாங்களாம்
இன்னும் ஒருமணி நேரத்துல இங்க வந்துடுவாங்களாம்
ம்ம்ம் சரி
இருவரும் சாப்பிட்டு கண்ணயரும் நேரத்தில் காலிங் பெல் ஒலிக்க கதவை திறந்தாள் சிவாவின் மனைவி கழுத்திழுக்க தலைசுமையுடன் உள்ளே வந்தார் சிவாவின் அப்பா, வயது 60வதை கடந்து விட்டதால் பயணகளைப்பு ,தலைசுமை இவற்றால் மயங்கிய நிலையில் இருந்தார் பெரியவர்.
இதை கண்ட சிவா ஆதங்கத்தில் தண்ணீர் எடுத்து வா, என்று மனைவியிடம் சிறிது கடிந்து கொண்டு பெரியவரையும் திட்ட ஆரம்பித்தான்,

வயசான காலத்துல எதுக்கு அங்கிட்டு இங்கிட்டு அலைஞ்சிகிட்டு
இப்ப இதெல்லா எடுத்துட்டு வரலைன்னு
யார் அழுதா என்று குரலை உயர்த்தி பிடிக்க

தூங்கி கொண்டிருந்த மோகிதா விழித்து கொண்டாள் ....

உங்கப்ப இப்டிதா பேசுவான் நீ வாடா செல்லம் தூங்கிட்டீங்களாக்கும்
தாத்தா.... உங்களுக்கு என்னமெல்லா வாங்கிட்டு வந்திருக்கேன் பாத்தீங்களா நீங்க ஆசையா கேப்பிங்களே கற்கண்டு , சீனிமிட்டாயி
அப்றம்..... அப்றம் .....கருப்பட்டி என்று சிரித்தபடியே
தனது பேத்தியிடம் கொஞ்சி குழைய

இதெல்லாம் சாப்புட்டு குழந்தைக்கு ஏதாவது ஆகிட போகுதுப்பா
அவ அதெல்லா சாப்பிட மாட்டா என்று சிவா சொல்ல

பெரியவர் மவுனமாய் புன்னகைத்து கொண்டார் அவர் புன்னகையில் ஆயிரம் அர்த்தமுண்டு ஆம் என்ன புரியலையா கற்கண்டும் கருப்பட்டியும் விளையும் பனையை போல தான் இவரும் விவரம் தெரிந்த நாள் முதல் உழைத்த தேகம் இன்றுவரை அதற்கு ஓய்வேயில்லை சரி ஆயிரம் அர்த்தம் கொண்ட பெரியவரின் புன்னகையின் மர்மத்தை பார்ப்போமா ஹஹஹஹ என்ன புரியலையா பனை மரத்த பத்தின சேதி தாங்க அது


நுங்கு


பனங்கிழங்கு

பனம்பழம்

பனங்கற்கண்டு

கருப்பட்டி(எ)பனைவெல்லம்


தவுனு


பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்கு தருவதால் பனையை, கேட்டதை தரும் தேவலோகத்து மரம் என கூறப்படும் கற்பக விருட்சத்தோடு ஒப்பிடுவர். பனைகள் பயிரிடுவதில்லை பாதுகாக்க படுவதுமில்லை அது தானாகவே வளர்கிறது சராசரியா 30 மீட்டர் வரை வளரகூடியது.. பனையிலிருந்து நமது பயன்பாட்டுக்கு ஓலை, நுங்கு, கள்ளு(பதனி), பனங்கிழங்கு, பனம்பழம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, தவுனு என பல கிடைக்கிறது, இவை அத்தனையும் மருத்துவ குணம் கொண்டது, அதுவும் நமது தமிழர்கள் வாழ்வில் பனை பெரும் பங்கு வகிக்கிறது. வள்ளல் பாரியின் பெண்களுக்கு மணமுடிக்க நினைத்த அவ்வையிடம் மூவேந்தர்கள் பனம்பழம் கேட்டதாக கதைகளும் உண்டு

திங்கட் குடையுடைச் சேரனும், சோழனும்,
பாண்டியனும் அவ்வை சொற்படியே
மங்கலமாயுண்ட தெய்வப் பனம்பழம்
மரியாதை அற்றதோ ஞானப் பெண்ணே--என்று நவாலியூர் யாழ்பாண கவிஞர் சோமசுந்தரர் பாடியிருப்பார்

சங்ககால புலவர் ஒருவர் நாரையின் மூக்கை(அலகை)பனங்கிழங்கோடு உவமை படுத்தியிருப்பார்..

நாராய் நாராய் செங்கால் நாராய்
பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
    என்று பாடியிருப்பார்

தேக சூட்டினால் ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் இந்த பனை

இந்த பனையை பற்றி வ.கெளதமன் அவர்கள் இயக்கிய வீடியோவையும் பாருங்களேன்



மூவேந்தர்கள் மழை வெள்ளம் ஊரினில் புகாமலிருக்க ஏரிகரைகளில் அரண் போல பனைகளை நட்டுள்ளனர். இதன் பூவை வெற்றிமாலைகளாகவும் அணிந்துள்ளனர்.

இப்ப புரியுதா அந்த பெரியவரின் மவுன சிரிப்புக்கான அர்த்தம் நமக்கான தடங்களை நாமே அழித்து கொண்டு இருக்கிறோம். மருத்துவ குணம் கொண்ட உணவு முறைகளை மறந்து போய் மருந்தையே உணவாக தற்போது உட்கொண்டு வருகிறோம் . வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு அப்டின்னு பழமொழியே உண்டு ....முடிவு உங்கள் கையில்

மேலதிக தகவலுக்கு : http://nganesan.blogspot.in/2011/06/pennai-female-palmyrah-tree.html

உதவியவர்கள் : விக்கிபீடியா

எழுத்துகளும் எண்ண கோர்வைகளும்

***பிரகாஷ் சோனா***





வெள்ளி, 25 நவம்பர், 2011

ருத்ராட்சமும் அதன் தன்மைகளும்

ருத்ராட்சம் , ருத்ராட்சத்தை பற்றி பல பதிவுகள் படித்திருப்பீர்கள் ,ருத்ராட்சத்தை பற்றி அறிந்திருப்பீர்கள். ருத்ராட்சம் என்றவுடன் இது ஆன்மீக பதிவு என்று நினைத்து விட வேண்டாம் ,சரி நாம் விடயத்துக்கு வருவோம்.
ருத்ராட்சம் சிவபக்தர்கள் அணிய கூடியது, சைவர்களின் அடையாள சின்னம், ஞானிகளும் யோகிகளும் அணிய கூடியது ,சுத்த பத்தமாக இருப்பவர்கள் மட்டும் தான் அணிய வேண்டும், இதை அணிந்தால் பல விதிகளை கையாள வேண்டும் , என்று பலவாக சொல்லி கேட்டிருப்பீர்கள் .சரி அது அத்தோடு இருக்கட்டும் .பதிவை படித்துவிட்டு நீங்கள் அணிந்து கொள்ளலாமா வேண்டாமா என்று நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்.
ருத்ராட்சம் இதன் வேதியல் பெயர் எலீயோகார்பஸ்( Elaeocarpus)
எலீயோகார்பஸ் மரத்திற்கு 36 உட்பிரிவுகள் இருக்கு, ஆனால் அந்த 36 மரங்களின் கொட்டைகளையும் ருத்ராட்சமாக பயன்படுத்துவது கிடையாது ,அதிலிருந்து குறிப்பிட்ட மூன்று மரங்களின் கொட்டைகளை மட்டுமே ருத்ராட்சமாக பயன்படுத்துகிறோம் அவை,
 எலீயோகார்பஸ் சொராட்டஸ் (Elaeocarpus serratus)
எலீயோகார்பஸ் ட்யூபர்குலேட்டஸ் (Elaeocarpus tuberculatus)
எலீயோகார்பஸ் கானிட்ரஸ்(Elaeocarpus ganitrus) ஆகியனவாகும்.

                                                               ருத்ராட்ச மரம்
இவை தென் கிழக்கு ஆசிய பகுதிகளான இந்தோனேசியா,ஜாவா,சுமத்ரா,போர்னியோ வடக்கே இந்திய இமயமலை சாரல், நேபாளம், வங்கதேசம் அஸ்ஸாம்,ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதி ஆகிய பகுதிகளில் விளைகின்றன. இவை 100அடி உயரம் வரை வளர்ந்து 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்க கூடியது,  25லிருந்து 36டிகிரி வரை தட்பவெப்பனிலையில் உள்ள பிரதேசங்களில் மட்டுமே வளரும் . இவை அவ்வளவு எளிதாக முளைக்காது ,இதனை பயிர் செய்தால் 1முதல் 2ஆண்டுகள் வரை முளைப்பே வெளியில் தெரியாது, இதன் இலை 

                                                             ருத்ராட்சப்பழம்  
                                                     
மினுமினுப்பான வெளிர் பச்சை நிறம், வெண்மை நிறப்பூக்கள், கருநீலப்பழம் ஆகிய அமைப்பை கொண்டிருக்கும்.
இவை ஏப்ரல்-மே மாதங்களில் பூ பூக்கும், ஜீன் மாதங்களில் காய்க்கும், ஆகஸ்ட்-அக்டோபரில் பழம் பழுக்கும்
ருத்ராட்சம் மேற்சொன்னவாறு ஞானிகளும் யோகிகளும் அணிய கூடியது, சுத்த பத்தமாக இருப்பவர்கள் மட்டும் தான் அணியவேண்டும், என்று பரவலாக எண்ணபட்டதால் பலரும் அணியமலிருந்தனர் .ருத்ராட்சத்தின் ஆற்றல் பல காலமாக மக்களுக்குத் தெரிந்திருந்த போதும், எண்பதுகளின் பிற்பகுதியில் தான் இது மேலும் பிரபல்யம் அடைந்தது. குறிப்பாக, இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்களின் ஆய்விற்குப் பின்னரே  ருத்ராட்சம் புகழ்பெற்றது. இவர்கள் உயிர் வேதியியல் துறை (Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை (Psychiatry) பொது மருத்துவத் துறை, உளவியல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து  ருத்ராட்சம் குறித்து ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில் ருத்ராட்சத்திற்கு மூன்று பண்புகள் தன்மைகள் உள்ளதாக கண்டறிந்தனர் அவை

                        *சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic)
                        *காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic)
                       *அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை (Inductive)  ஆகியன
ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய ருத்ராட்சத்தையோ அல்லது ஒரு தொகுதி முகங்கள் கொண்ட ருத்ராட்சர மணிகளையோ அணிவோருக்கு, ஒரு குறிப்பிட்ட வகை மின் துடிப்புகள் (Transformation in the personality) வாழ்க்கையை நோக்கும் தன்மை, தன் ஆர்வம், மனத்திட்பம் ஆகிய மாற்றம் பெறுகின்றனர். மேலும்  ருத்ராட்ச மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதையும் ஆய்வில் தெரிவித்தனர்.மேலும் ருத்ராட்ச மணிகள் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிக் கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றது என்றும் தெரிவித்தனர்.அன்று முதல் வெளிநாட்டவர் முதல் உள்ளூர்வாசிகள் வரை அணிய தொடங்கினர் . ருத்ராட்ச மணிகளுக்கு ஆழ்ந்த கோடுகள் உண்டு அதனையே முகங்கள் என்று சொல்வர், ஒரு கோடு இருந்தால் ஒரு முகம் என்றும் ,ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம் என்றும் கூறுவர் .இந்த மணிகளுக்கு இயற்கையாகவே துவாரங்கள் உண்டு, ருத்ராட்ச மணிகள் மூன்று நிறங்களில் உண்டு .செம்மை நிறம், கறுப்பு நிறம், வெளிர் மஞ்சள் நிறம்(பொன் நிறம்) ஆகும்.ருத்ராட்ச மணிகளை கொண்டு சித்த மருந்துகளும் தயாரிக்க படுகின்றன.

ஏழுமுக ருத்ராட்சையின் உள்தோற்றம்
ஒன்பது முக ருத்ராட்சையின் உள்தோற்றம்
              



ருத்ராட்சமணிகள் எத்தனை முகம் உள்ளதோ அதே போல் அந்த மணிகளுக்குள்ளும் அத்தனை அறைகள் இருக்கும், ஒவ்வொரு அறையிலும்  ஒரு கொட்டை இருக்கும், உதாரணமாக 5முகம் ருத்ராட்சம் என்றால் அந்த 5 முக ருத்ராட்ச மணிக்குள் 5 அறைகளும் 5 கொட்டைகளும் இருக்கும் . ருத்ராட்ச மணிகள் ஒரு முகம் முதல் 21 முகம் வரை கிடைக்கும்

இரண்டுமுகம்
   
மூன்றுமுகம்
நான்கு முகம்
ஐந்து முகம்
ஆறுமுகம்
ஏழு முகம்
எட்டு முகம்
ஒன்பது முகம்
பத்து முகம்
பதிநான்கு முகம்

பத்தொன்பது முகம்

த்ரிஜீடி
பதினோரு முகம்
பனிரெண்டு முகம்
பதிமூன்று முகம்
பழத்தினுள் ருத்ராட்ச கொட்டை




இப்போது சொல்லுங்கள் மருத்துவ குணம் கொண்ட இந்த ருத்ராட்ச மணிகளை அணியலாமா வேண்டாமா என்று , ருத்ராட்சம் அணியுங்கள் .நம்மிடம் இருக்கும் எதிர் மறை எண்ணங்கள் மறையட்டும்.

கொசுரு: 17முகம் ருத்ராட்சம்-99ஆயிரமாம்
                  15முகம்--37ஆயிரம்
                  14முகம்--19ஆயிரம்
                  19முகம்--1லட்சத்து 99ஆயிரம்
ஸ்ஸுப்பா இப்பவே கண்ணகட்டுதே நீங்க கவலை படாதீங்க நம்ம 5முகம் 6முகம் 4முகம் இப்டி வாங்கி போட்டுக்கலாம் அதெல்லாம் விலை கம்மி தானாம் 10ரூ முதல் 100ரூ வரை தாம்.ஒருமுகம் கிடைப்பது ரொம்ப அரிதாம்


நன்றி விக்கிபீடியா,ருத்ராட்சம், சிவனின் கண்கள்

என்றென்றும் உங்கள்
பிரகாஷ் சோனா