செவ்வாய், 10 ஜனவரி, 2012

தண்ணீர் தேசத்தில் ரசித்த துளிகள்

கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை. 

இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.

பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது
  
முதல் உயிர் பிறந்தது
கடலிலா? நம்புவதெப்படி
நான்?
  
கடலில் பிறந்த முதல் உயிர்
தண்ணீரில்தானே சுவாசித்திருக்க
முடியும். அந்த மரபுரிமையின்
தொடர்ச்சிதான் இன்றும்
கர்ப்பத்தில் வளரும் சிசு
தண்ணீர்க் குடத்தில்
சுவாசிக்கிறது
  
பணம் ஒரு விசித்திரமான
மாயமான். அது தன்னைத்
துரத்துபவனுக்குக்
குட்டி போட்டுவிட்டு
ஓடிக்கொண்டேயிருக்கிறது.
குட்டிகளில் திருப்தி அடையாத
மனிதன் தாய்மானைப் பிடிக்கும்
வேட்டையில் தவிக்கத் தவிக்க
ஓடிச் செத்துப் போகிறான்.
  
இந்தப் பிரபஞ்சமே
எனது பெட்டி
என்கிறேன் நான். இல்லை
உங்கள்வீட்டுப் பெட்டிக்குள்தான்
பிரபஞ்சம் என்கிறீர்கள்
நீங்கள்.
உங்களைப் பிரபஞ்சமாய்
விரியவிடுங்கள். பிரபஞ்சத்தை
உங்களாய்ச் சுருக்கி
விடாதீர்கள்.
  
எப்போதும் வெப்பம்.
எதிலும்
ஆவேசம். எதையும்
அறிவாகவே
பார்க்கும் அவசரம். இது
தகாது
நீங்கள் புன்னகையைக்
கழற்றிவிட்டுப் போர்வாள்
தரித்திருக்கிறீர்கள்.
போர்தான். அடுத்த
நூற்றாண்டு
யுத்தம்தான். மிருகவாழ்க்கை
மனிதனுக்குத் திரும்பும். வலிமை
உள்ளது மட்டுமே தப்பிக்கும்.
அன்பு - அறம் - எல்லாம்
அன்றில் - அன்னம் பட்டியலில்
காணாமல்போகும்.
அடுத்த நூற்றாண்டில் எவனும்
சைவனாய் இருக்கமாட்டான்.
நரமாமிசம் தின்பான்.
டீக்கடைகளின் மனிதரத்தம்
விற்கும்.

இந்த நூற்றாண்டு மனமும்
உடம்பும்
அடுத்த நூற்றாண்டுக்காகாது.

நகரவாழ்க்கை என்னும் இந்தத்
தார்ப்பாலைவனம் கடக்க
தோல் - தோள் இரண்டும்
தடித்திருக்கவேண்டும்.

இனி வருவது போராளிகளின்
காலம். மனிதர்களோடு
மனிதர்களும் -
எந்திரங்களோடு
எந்திரங்களும்,
தொடர்ந்து யுத்தம்
புரியும் ஒலிகளின் நூற்றாண்டு.

அந்த யுத்தத்திற்குத் தங்களைத்
தயாரித்துக் கொண்டவர்கள்
மட்டுமே ஜீவிதரயிலின் அடுத்த
நூற்றாண்டுப் பெட்டியில் ஏறிக்
கொள்ளலாம். முடியாதவர்கள்
இந்த நூற்றாண்டின்
இறுதியிலேயே
இறங்கிக் கொள்ளலாம்.

வாழ்க்கையின்மீது
நீங்கள்மட்டுமே
நிறைவேற்றிக்கொள்ளும்
அவநம்பிக்கைத் தீர்மானம்
இது.

இந்தத் தீர்மானத்தை ஆதரித்து
உயர்வது உங்கள்
ஒருகரமாய்த்தானிருக்கும்.
இன்னொரு கரம் உயர்ந்தால்
அது உங்கள் இடக்கரமாய்
இருக்கலாம்.

அவ்வளவுக்கு வாழ்க்கை இன்னும்
அழுகிவிடவில்லை. அழுகப்
போவதுமில்லை.

வேட்டையாடுகிற
வேட்டையாடப்
படுகிற இரண்டு இனங்களும்
உயிர்கள் தோனறிய
காலந்தொட்டு
உலவிக்
கொண்டுதானிருக்கின்றன.
ஆனால், சிங்கம்
அழிந்துவிடவுமில்லை. முயல்
முடிந்துவிடவுமில்லை.

வலைகளின் எண்ணிக்கை
அதிகமானதற்காய் மீன்களின்
எண்ணிக்கை
குறைந்துவிடவில்லை.


வசந்தம்-கோடை-மழை-குளிர்-
வெயில்-புயல் என்ற
அனுபவங்கள்
இல்லையேல் எப்போதோ பூமி
இறந்துபோயிருக்கும்.

கல்யாணச் சந்தையில் உன்னைத்
துலக்கிவைப்பதற்கு மட்டுமல்ல
கல்வி.
அனுபவங்களின்பால்
ஆற்றுப்படுத்துவது கல்வி.



கடல் இல்லையென்றால்
வானுக்கு நிறமில்லை. நீ
இல்லையென்றால் என்
வாழ்க்கைக்கு நிறமில்லை.



நீ கடல். நான் பூமி என்பது
வெறும் உவமை
அல்ல. உண்மை.



உணர்வுகளின் தேவை காதல்.
உணர்ச்சிகளின் தேவை காமம்.
உலகத்தின் தேவை உழைப்பு. 



பெண்மீது காதலும் வெற்றிமீது
வெறியும் இல்லையென்றால்
இன்னும் இந்த பூமி பிறந்த
மேனியாகவே
இருந்திருக்கும்.



உள்ளே எதையும் ஒளிக்காதே.
துணிந்துவிடு. துப்பிவிடு.

ஆசையைத் துப்பு.
ஞானம் வரும்.
அச்சம் துப்பு.
வீரம் வரும்.
ரகசியம் துப்பு. தூக்கம்
வரும்.



இயற்கை தாலாட்டினால்
இந்தக் கடல் இவர்களுக்குத்
தொட்டில்.
இயற்கை தள்ளிவிட்டால் இந்தக்
கடல் - கல்லறை.

கரை மீண்டால் இவர்கள்
மீன்தின்னலாம். கரை
மீளாவிட்டால் இவர்களை
மீன்தின்னும்.

வேட்டையாடு. அல்லது
ஆடப்படு.- இதுதான்
இந்தத் தண்ணீரில் எழுதப்பட்ட
அழியாத வாசகம்.



வாழ்வைக் கற்பனை செய்.
சாவைக் கற்பனை செய்யாதே...

பூக்கள் காற்றில் உதிர்ந்தால் பூகம்பம்
வந்துவிட்டதென்று புலம்பித் திரியாதே.

உச்சிவானத்தில் நிலா வந்தால் தலையில்
விழுந்துவிடுமோ என்று சந்தேகப்படாதே...

இன்பத்தைக் கற்பனை செய்து பார்.
துன்பத்தை எதார்த்தமாய்ப் பார்.

இன்பத்தை இரண்டாய்ப் பார்.
துன்பத்தைப் பாதியாய்ப் பார்...



நிலாவின் வட்டமுகத்தை - வளர்ந்த கொடியின்
வளைவு நெளிவுகளை - புல்லின் மெல்லிய
அதிர்வுகளை - நாணலின் மென்மையை -
பூக்களின் மலர்ச்சியை - மானின் பார்வையை-
உதயசூரியனின் உற்சாகத்தை - மேகத்தின்
கண்ணீரை - காற்றின் அசைவை - முயலின்
அச்சத்தை - மயிலின் கர்வத்தை - தேனின்
இனிமையை - புலியின் கொடுரத்தை -
நெருப்பின் வெம்மையை - பனியின்
தன்மையை - குயிலின் கூவலை - கொக்கின்
வஞ்சகத்தை - கிளியின் இதயத்தை -
சக்கரவாகத்தின் கற்பை ஒட்டுமொத்தமாய்ச்
சேர்த்துப் பெண் படைத்தானாம் பிரம்மன்.



தெரிந்த பூமியைப் பார்க்க மறந்ததும் -
தெரியாத கடவுளைத் தேடி அலைந்ததும்
தான் தமிழன் செய்த தவறு. பசித்தவன்
காதில் வேதாந்தம் ஓதக்கூடாது
என்பார்கள். வேதாந்தம் மட்டுமல்ல.
விஞ்ஞானமும் ஓதக்கூடாது...