வியாழன், 16 ஆகஸ்ட், 2012

யார் இவள்

  சாளர ஓரத்தின் இருக்கையில் ஏதோ பரபரப்பாக எழுதி கொண்டிருக்கிறான் அகில், எழுதி முடித்து மீண்டும் பரபரப்போடு எழுந்து கண்காணிப்பு ஆசிரியையிடம் வெற்று தாளை வாங்கி மீண்டும் பரபரப்போடு எழுதி கொண்டிருக்கிறான்.பள்ளி மணி அடிக்க விடை தாள்களை ஆசிரியை ஒன்றன் பின் ஒன்றாக வாங்கி கொண்டே அகிலை நெருங்க  அகிலும் பதட்டத்தோடு எழுதுகோலின் வேகத்தை கூட்டுகிறான் , ஆசிரியை அவன் அருகில் வந்ததும் ஒருவழியாக எழுதி முடித்த விடை தாள்களை கொடுத்து விட்டு தனது உடைமைகளை சரி பார்க்க..... மேசையின் கீழ் உள்ள கால் சட்டத்தில் அகிலின் கால் மாட்டி கீழே விழ இருந்த அந்த நொடி அருகில் இருந்த அவளின் கைகளை தன்னையறியாமல் பற்றுகிறான்...அவள் திகைப்புடன் இவனை நோக்க.... பற்றிய கைகளை சட்டென்றெடுக்கிறான் அகில், மீண்டும் கால் இடறிட தன்னையறியாமல் மீண்டும் அவளது கைகளை இவனது கைகள் பற்றிக்கொள்கிறது
அவளோ அகிலின் கைகளை தட்டி விட்டு வெறுமனே புன்னகையோடு நகர்கிறாள்

நாட்கள் நகர நகர
அவளோடு இவனது நாட்களையும் நகர்த்த எண்ணி
காணும் தொலைவெங்கும் அவள் தரிசனத்தை நாடிட மலர்ந்த பூவாய் இவனது விழிகள் காத்து கிடக்கிறது

ஆம் யார் இவள் விடையறியா பயணத்தில் மனவேள்வியில் அவளை இடுவதற்க்குள் மங்கல ஒலி கேட்க மங்கள நாண் பூண அருகில் ஒருத்தி கை பிடிக்க காத்திருக்கிறாள்

யார் அவள்.... யார் இவள்

குழப்பத்தில் அகில்

கடந்த நினைவு சுகிப்பது நலம் எனினும் கடக்க இருக்கும் நிகழ் பொழுதில் கடந்த நினைவை கலந்து குழப்புவதில் என்ன நலம்..? தேற்றிக்கொள்கிறான் அகில்

மணப்பலகையில் அமர்கிறான் மங்கல ஒலியில் மங்கைக்கு மங்கள நாண் ஏற்றுகிறான் எல்லாமும் சுமாய் நிலவ அகிலின் மனதில் மட்டும் உறுத்தல்

அக்னி சுற்றிட அகில் எழுந்திட கால் தடுமாறி அருகில் இருந்த அவளின் கைகளை தன்னையறியாமல் பற்றுகிறான் அன்று அவள் உதிர்த்த புன்னகை மாறாமல் இன்று இவளிடம் , தட்டிவிடா அரவணைப்போடு இவன் கை அவளது கையில் இருக்க இவள் பின் அக்னி சுற்றுகிறான் அகில் லயித்த வண்ணம்


எழுத்து கற்பனை

***பெருவுடையான்***