செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

கிராமியம் - தாலாட்டு


நெடுநாட்களுக்கு பின் கிராமியங்களில் பாடப்படும் தாலாட்டு பாடல்களோடு இப்பதிவு வழியாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி , பொதுவாக தாலாட்டுகளில் ஆராரோ,ஆரிரரோ,என்று இசை வரிகளை பயன்படுத்தபட்டே பாடபட்டிருக்கும். எல்லாம்... குழந்தைகளை வசீகரிக்க கூடிய ஒரு ஈர்ப்பு தான் அவ்வரிகள். அதே போல ஆண் குழந்தைகளுக்கு தனி, பெண் குழந்தைகளுக்கு தனி, என சில சில மாற்றங்கள் செய்து பாடபட்டிருக்கும், ஆண்,பெண் என இருவருக்கும் பொதுவான பாடல் வரிகளும் இருக்கும். 

உதாரணம் :

ராராரோ... ஆரிரரோ
ஆராரோ... ராரிரரோ
என் கண்ணே
ஆரிரரோ ராராரோ...
கண்ணுங்கு... கண்ணுறங்கு...
கண்மணியே... கண்ணுறங்கு... - என்
பொன்மணியே கண்ணுங்கு...

ராராரோ... ஆரிரரோ
கண்ணே ஆரிரரோ ராராரோ...

ஓடு மான் ஓட
ஒன்பது மான் பின் தொடர
காட்டு மான் கூட
கவரிமான் கண்ணுறங்கு
கண்ணான கண்ணே
கண்மணியே கண்ணுறங்கு
பொன்னான கண்ணே
பூமரத்து வண்டுறங்கு

ராரிக்கு அழுத கண்ணோ
நீ ராமர் புஷ்பம் கேட்ட கண்ணோ
தூரிக்கு அழுத கண்ணோ
நீ சொக்க ரதம் கேட்ட கண்ணோ
ஓ ராரி ராரி ராரி ராராரோ             (பொது)
**********************************************************
சரி, ஆணுக்கு தனி பெண்ணுக்கு தனி தாலாட்டு பாடல்கள் என்று சொன்னேன் அல்லவா ,அந்த ஆண் பிள்ளைகளுக்கான தாலாட்டு வரிகள் எப்படி இருக்கும், கொஞ்சம் வீரம் கலந்ததாக இருக்கும் அவ்வளவே இதோ கீழே

உதாரணம் :

பூனை பால் பீச்சி
புலிப்பால் உறையூத்தி
ஆனைப்பால் பீச்சி வரும்
ஆனழகன யாரடிச்சா

தெற்கே உறகிணறாம் - உன்
தெருவெல்லாம் பால்கிணறாம்
பால்கிணத்த பாக்க வந்த
பாலகன யாரடிச்சா

யாரடிச்சா நீ அழுக
நீ அடிச்சாரை சொல்லி அழு

மாமா அடிச்சாகளோ உன்னை
மல்லிகப்பூ செண்டால
அத்தை அடிச்சாகளோ உன்னை
அரளிப்பூ செண்டால
தாத்தா அடிச்சாகளோ உன்னை
தாழம்பூ செண்டாலே
பாட்டி அடிச்சாகளோ உனக்கு
பால் கொடுக்கும் கையாலே

யாரடிச்சா நீ அழுக
நீ அடிச்சாரை சொல்லி அழு

ஓ ராரி ராரி ராரி ராராரோ         (ஆண்)
*********************************************************
அடுத்து பெண் பிள்ளைகளுக்கான தாலாட்டு , இது கொஞ்சம் செல்லமாகவும் குல பெருமைகளை தழைக்க செய்ய கூடியதாகவும் இருக்கும் இதோ

உதாரணம் :

வடக்கே நிலம் வாங்கி உங்க அப்பா
வாழை தோப்பு உண்டு பண்ண
வாடகாத்து வீசுதல்லோ
வருசமக நீ கண்ணசர

தெற்கே நிலம் வாங்கி உங்க அப்பா
தென்னந்தோப்பு உண்டு பண்ண
தெங்காத்து வீசுதல்லோ
செல்லமகள் நீ கண்ணசர

நீ போற இடம்
என்ன வச்சா தோப்பாகும்
இஞ்சி பிஞ்சரங்கம்
எலுமிச்சை தோப்பாகும்
மஞ்ச பயிராகும்
மாமரம் சோலையாகும்

மானே மரிக்கொழுந்தே
மருகில்லா மாணிக்கமே
தேனே திரவியமே
தெவிட்டாத தெள்ளமுதே
மாசி பிறையே
மங்காத மாங்கனியே
தேசப் பிறையே
தெவிட்டாத மாங்கனியே
உங்க குலம் மங்காம
எதிர் குலத்தார் ஏசாம
தங்கமலை பொக்கிசத்தை
தானாள வந்த கண்ணே

கண்ணுரங்கு கண்ணுரங்கு
கண்மணியே கண்ணுரங்கு - என்
பொன்மணியே கண்ணுரங்கு       (பெண்)

தாலாட்டினை உங்கள் இல்லங்களிலும் சிறிது பயன்படுத்தி தான் பாருங்களேன் . உங்களுக்கு தெரிந்த நாட்டுபுற கிராமிய தாலாட்டு வகைகள் ஏதேனும் இருந்தாலும் கூறுங்களேன் 

நன்றி
பெருவுடையான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக