புதன், 30 மே, 2012

நான்..யார்.......சாமி..யார்

நான் யார் ... நான் யார்? , சாமி யார்? என்னை குழப்பிய வரிகள் உங்களுக்கும் இது குழப்பமான பதிவாக இருக்கலாம்.

நான் யார்..?


நான் யார் என்ற கேள்வியை உனக்குள் எழுப்பு, சிந்தி என பல சாமியார்கள் சொல்லி சொல்லியே உங்களையும் என்னையும் குழப்பி மகான்களாகி அமரர் நிலையையும் எய்து விட்டனர்.

நான் நான் என்று அடிக்கடி சொல்லிகொள்கிறோமே அந்த ”நான்” யார் என்று உங்களுக்குள்ளே நீங்களே கேள்விகேட்டு பாருங்கள் உடனே நான் சிவா என்று உங்களது பெயரை சொல்லிகொள்வீர்கள், மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருங்கள் அப்போது நீங்கள் வகிக்கும் பதவியையோ, தொழிலையோ, குடும்ப பாரம்பரியத்தையோ (இன்னார்மகன், இன்னார் பேரன்) சொல்லிகொள்வீர்கள் நான் யார் என்ற ஒற்றை கேள்விக்கு பதில் தெரியாமல் பெயர், பதவி, பாரம்பரியம், என பல பதில்களை சொல்லிகொள்கிறோம், இவற்றையெல்லாம் நீக்கிவிட்டு மீண்டுமோர் முறை நான் யார் என்ற கேள்வியை உங்களுக்குள்ளே எழுப்புங்கள்.... உங்களுக்கு பதில் கிடைப்பது சிரமமே கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் , சதை நரம்புகளாலான காற்றடைத்த பிண்டம், எண்ண குவியல்களின் களம் என்ற பதிலே நம்மில் உதிக்கும்,சரி இதையெல்லாம் நீக்கிவிட்டு மீண்டும் ஓர் முறை நான் யார் என்றுஉங்களை நீங்களே கேட்டு பாருங்களேன்.பதில்..........ஒன்றுமே இல்லை

சரி கனவிலும் நனவிலும் இதே கேள்வியை கேட்டு பாருங்களேன், அட நனவுல கேட்டு பார்த்திடலாம், கனவுல எப்டி கேக்க முடியும் காரிருள் போர்த்தி என்னை நானே அறியா நிலையிலல்லவா கிடப்பேன், என்று நிங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது...ம்ம்ம் கேட்க முடியாது தான்

ஆக, நான் யார் என்ற கேள்விக்கு நமக்கான அடையாளங்களையோ செயல்களையோ தான் பதிலாய் தருகிறோம். நான் யார் என்ற கேள்விக்கு மேற்சொன்ன பதில்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு பார்த்தால் அதுவே நான் என்ற சுயஆத்மன், அந்த நான் என்ற ஆத்மனுக்கு அடையாளங்களோ குறிகளோ குணங்களோ கிடையாது, எந்த நிலையிலும் மாறாமல் குணங்குறியற்று இருப்பது எதுவோ அதுவே ”நான்”எனும் ஆத்மன், என்று நான் யார் என்ற ஆத்ம ஆராய்ச்சியில் ரமணமகரிஷி சொல்லியிருப்பார்.நான் எனும் அந்த ஆத்மனை நம்மில் நாம் உணர்ந்திருந்தாலே பூலோகத்தில் பிரச்சனைகளே அற்று இருந்திருக்கும் ..சரி அடுத்து இந்த சாமிகளை பற்றி "ச்சி" இந்த ஆசாமிகளை பற்றி பார்ப்போம்.

சாமி யார்..?

சாமி சாமி என்று அடித்து கொண்ட கால கட்டங்களில் நான் யார் என்பதை உணர் என்று சொல்லிய ஆசாமிகள் தான் நமது மாய திரையை விலக்கிய சாமி என்று சொன்னாலும் தகும் என்று சிலர் சொல்வர். ஆசாமிகளாகிய நாம், நாம் யார் என்பதை உணர்ந்தாலே போதும் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஏதுடா சாமி என்று புகட்டியவர்களும் அவர்கள் தானே என்றும் சிலர் வாதிடுவர்.

”நான் யார்” என்று கேள்வி கேட்க தெரியாதவன் தான், ”நான்” எனும் ஆத்மனை உணராதவன் தான், தனக்குள்ளே கேள்வி கேட்டு கொள்ளுங்கள் என்று சொன்னவர்களையே சாமியாக்கி விடுகிறார்கள். நமக்கான பணிகளை நாம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென ஒருவன் நம்மை பார்த்து நீ உலகில் பல இடங்களில் பயணம் செய்திருப்பாய் ஆனால் ஓர் நாளாவது உனக்குள் நீ பயணம் செய்திருக்கிறாயா என்று கேட்டால் அவனை பார்க்கும்போது நமக்கு என்ன தோன்றும் ஒன்னு பைத்தியம்னு தோனும் இல்லன்னா என்னாமா யோசிக்கிறாம்பா நீ அதிமேதாவிதாம்பா இப்டி தான் எண்ண தோன்றும்.

இப்படி தனக்கான பாதையை விட்டு மாற்று சிந்தனையில் சிந்திப்பவர்களை ஞானி என்றும் சாமி என்றும் நம்மில் பலர் ஏற்றுகொள்கின்றனர். அவர்களின் மாற்று சிந்தனை உங்களை சிந்திக்க வைக்கிறதா அப்படியென்றால் அவர்களது மாற்று சிந்தனையையும் அவர்களின் சாரத்தையும் ஏற்றுகொள்ளுங்கள் வேண்டாமென்றில்லை அவர்களை பின்பற்றி அவர்களை அதிமேதாவிகளாக்கி சாமியாக்கி மேலுயர தூக்கி நிறுத்தாதீர் விளைவு நமக்கே

இயற்கை சக்திகளின் சீற்றங்களுக்கும் பிரபஞ்ச சக்திகளுக்கும் பயந்த நம்மவர்கள் தமக்கான பாதுகாப்பு வேண்டி அச்சக்திகளை சாமியாக்கிய வேளையில், மாற்று சிந்தனையுள்ள ஆசாமிகள் நம்மிடையே சாமிகளாகி போனர். இயற்கையை மீறிய சக்திகள் அனைத்தும் மாயைகளே என்று எப்போது நாம் உணர்கிறோமோ நான் என்ற ஆத்ம சொரூபனை எப்போது நாம் உணர்கிறோமோ அன்று இந்த சாமிகள் மீண்டும் ஆசாமிகளாகி போவர்.

இது எனது கருத்து, உங்கள் சிந்தனையோடு எனது கருத்தை ஒப்பிடும்போது சில எதிர்மறை கருத்து இருக்கலாம்.....விதிவிலக்கல்ல

எண்ண எழுத்துகளுடன்
***பிரகாஷ்சோனா***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக