ஞாயிறு, 12 மே, 2013

அன்னை


உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்து
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்து கொஞ்சும் தாய்க்கு ஈமச்சடங்கினில் அவள் சிறப்பினை நெஞ்சுருகி பாடிய பட்டினத்தடிகளின் பாடலை நினைவு கூர்தல் இவ்வன்னையர் தினத்தில் சிறப்பினை நல்குமென நினைக்கிறேன்

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்று

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டி

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்க்கு பட்டினத்தடிகளின்  இவ்வரிகள் அன்னையர்களுக்கான சிறப்பமைவு சமர்ப்பனமெனவே நான் கருதுகிறேன்.

அது போல் திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்  என்ற வாசகத்திற்கிணங்க,  திருவாசகத்தில் போற்றி திருவகவலில், மானிட பிறப்பு எவ்விடத்தெல்லாம் பிழைத்து வருதலை நோக்குங்கால், அதில் அன்னையின் சிறப்பும் மறைந்திருப்பதை காணலாம்.

மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும

ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும்
ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்

எனப் பாடபட்டுள்ள இப்பாடலில் கருவோடு படும் துன்பம், பிள்ளையோடு படும் துன்பம் என அன்னை படும் இன்னலை மறைமுகமாக இருப்பதை நான் உணர்கிறேன். என்றுமே அன்னை என்பவள் பிறருக்கு தெரியாமல் மறைமுகமாகவே இன்னல் அனுபவிப்பவள் தானே ...... தாய்மைக்கும் எனது அன்னைக்கும் அன்பான வணக்கங்களோடு தலை வணங்குகிறேன்

இவன்

பெருவுடையான்