இந்த பதிவை நான் எழுத பெருமை பட்டாலும் சிறிய வருத்தமும் உண்டு ஏனென்றால் இக்கலை அழியக்கூடிய தொய்வு நிலையில் இருப்பதனால் அட என்ன கலைன்னு கேக்குறீங்களா நம்ம நாட்டு புற இசை கலைகள் தாங்க...அட ஆமாங்க முன்பெல்லாம் கிராமங்கள்ல எதற்கெடுத்தாலும் பாட்டு பாடுவாங்க குழந்தை பிறக்கும் முதல் இறக்கும் வரை....
குழந்தைக்கு தாலாட்டு பாட்டு , சும்மா சுற்றி திரியிற இளங்காளைகளுக்கும் கன்னியருக்குமான காதல் பாட்டு., விளையாடும் போது பாட்டு , வேலை செய்யும் போது சோர்வு தெரியாமலிருக்க நடவு பாட்டு ,ஏற்றம் இறைக்கும் போது பாட்டு , வழிபாட்டு பாட்டு ,கதை பாட்டு, திருமண சடங்கு பாட்டு ,நின்னா பாட்டு, உக்காந்தா பாட்டு, கும்மி பாட்டு ,குலவ பாட்டு இப்டி நம்ம தமிழர் மரபுல இசையோடும் இயற்கையோடும் ஒன்றியே வாழ்ந்திருந்திருக்காங்க நம்ம முப்பாட்டன்மார்கள் .
ஆனால் நாம இப்ப நமக்கு புரியாத மேற்கத்திய இசையோட கலந்துட்டோம் சரி அதெல்லாம் இப்ப நமக்கெதுக்கு வந்த விடயத்தை சொல்லிடுறேன்.
நாட்டுபுற பாடல்களை பற்றி எனக்கு தெரிந்த , கேட்ட ,படித்த சில பாடல்களை தான் குறிப்பிடலாம்னு இருக்கேன். சரி இப்ப முதல்ல குழந்தைங்க பாட்டுல இருந்து ஆரம்பிப்போம் குழந்தைக்கான தாலாட்டு பாட்டுல மாமன்மார்களுக்கு முக்கியத்துவம் குடுத்து பாடபட்டிருக்கும். அது எதுக்குன்னு தெரியல ஒரு வேளை குழந்தைக்கு தாய்மாமன் முக்கியத்துவம் கருதி கூட இருக்கலாம் உதாரணத்துக்கு
”பால் குடிக்க கிண்ணி
முகம் பார்க்க கண்ணாடி
கொண்டு வந்தான் தாய்மாமன்
ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ”
அதேபோல குழந்தை பயன்படுத்தும் பொருட்களை வர்ணனை படுத்தியும் அவன் பிறப்பின் பெருமைகளை பற்றியும் பாடபட்டிருக்கும். மேலும் குழந்தை வளரும் தருணங்களில்
”தப்பளாங் குட்டி தவழ்ந்து வர
தரை எத்தனை பாக்கியம் செய்ததோ
குட்டியானை குதித்து வர
குடில் எத்தனை தவம் செய்ததோ”
இப்படி குழந்தை பிறந்தது முதல் அடியெடுத்து நடப்பது விளையாடுவது வரை குழந்தைக்கான நாட்டுபுற பாடல்கள்..உண்டு. சிறு குழந்தைக்கான விளையாட்டு பாடல்
ஆலையிலே சோலையிலே;ஆலங்காடி சந்தையிலே
கிட்டிபுள்ளும் பம்பரமும் கிறிக்கியடிக்க
பாலாறு பாலாறு பாலாறு - னு
சொல்லிகிட்டே கில்லியடிப்பாங்க அதே போல இளைஞர்களும்
நாநதா வீரனடா; நல்லமுத்து பேரனடா
வெள்ளிசிலம்பெடுத்து விளையாட வாரேன்டா
தங்க சிலம்பெடுத்து தாலிகட்ட வாரேன்டா
சடுகுடு சடுகுடு சடுகுடு - னு
கபடி ஆடுவாங்க சரி நம்ம இளைஞர்கள் கபடியும், கிட்டி மட்டுமா விளையாடுவாங்க அட ஆமாங்க காதல் விளையாட்டுலையும் கை தேர்ந்தவங்க நம்ம இளைஞர்கள், அவரவர் முறை பெண்களை கேலி செய்து பாடும் பாடல்கள் அவளின் கடைகண் பார்வைக்காக ஏங்குவது போல் பாடல்கள் என நம் நாட்டுபுற பாடல்களில் உண்டு. அதிலும் பெண்கள் தான் கிண்டல் செய்வதில் கெட்டிகாரங்க அட ஆமாங்க இத கொஞ்சம் கேளுங்க
மாமா மணியக்காரா என்னை கட்டிக்க
மஞ்சவடை சுட்டுப்போடுறேன் என்னை கட்டிக்க
கூளூரு போறமட்டும் குத்து பட்டுக்க
கொழுக்கட்ட சுட்டு போடுறேன் புட்டு போட்டுக்க - இப்டி
ஒரு பெண் ஒரு ஆண்மனை கேலிசெய்யறபாட்டு அதே போல அத்தை மகனை கேலி செய்யுற மாதிரி பாட்டுகளும் உண்டு ...இதோ...
நெல்லு வெளஞ்சத பாருங்கடி யம்மா
நெல்லு சாஞ்சத பாருங்கடி
நேத்து பொறந்த அத்த மவனுக்கு
மீசை மொளச்சத பாருங்கடி
அதேபோல திருமண நிச்சயித்த பெண் தனக்கான ஆண்மகனை கேலிசெய்யும் பாடலும் இதோ...
என்னை ஏண்டா பாக்குற நீ சும்மா சும்மா
சுண்ணாம்புக்கு பாக்குறேண்டி உன்னை உன்னை
உனக்குதாண்டா பாக்குறாங்க என்னை என்னை
அதுக்குதாண்டி பாக்குறேன் உன்னை உன்னை
அதே போல கோவலன் போல சுற்றி திரியுற கணவனை பார்த்து மனைவி பாடுற மாதிரி ஒரு பாட்டு
சாமத்தில பூத்த பூவு மச்சா
சாமந்திப்பூ நானிருக்க
சாறிப்போன பூவுக்கு தான் மச்சா
சந்து சந்தா நீ சுத்தலாமா
இப்படியாக ஒவ்வொரு நிகழ்வுக்கும் பாடல்களா பாடி இசையோடவே ஒன்றி நாம் வாழ்ந்திருக்கோம், அதே போல பாடல்களை பாட எழுத்து வரிகளை கையாண்ட முறைகளும் அருமையா இருக்கும். சில பெருசுகளின் பாடல்களை கேட்க தவமாய் காத்திருந்திருப்போம், ஏன் நம்ம கம்பன் கூட ஏற்றம் இறைக்கும் விவசாயின் பாடலுக்காக ஒரு நாள் முழுவதும் காத்து கிடந்ததாக கதைகளும் உண்டு இதோ அந்த பாடல்
மூங்கிலை மேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே
மரித்தோருக்கான பாடல் :
ஆரங்கி ரவிக்கையும் ஆனைமுக தங்க காப்பும்
அதட்டி கழட்டையில என் அங்கம் நடுங்குதே
பூவாலழகியம்மா நான் புண்ணியரோட மனைவியம்மா
புண்ணியரத் தோத்தேனே பூவிழந்து போனேனே
மஞ்சளழகியம்மா நான் மன்னனோட தேவியம்மா
மன்னவரத் தோத்தேனே மஞ்சளிழந்து போனேனே
பொன்னு திருவளைய நான் பொறக்கையில போட்டாளையா
புண்ணியனா வாசலிலே பொடி பொடியாவுதே
இப்படி நிறைய பாடல்கள் உண்டு என்னால் எல்லா பாடல்களையும் பதிவிட முடியல மீண்டும் சந்தர்பம் கிடைக்கும் போது பகிர்கிறேன் முடிவா ஒரு சின்ன கும்மி பாட்டோட பதிவை முடித்து கொள்கிறேன்
வாங்கடி வாங்கடி தோழி பெண்டுகளா-வள்ளி
மாமயில் பாட்டை படியுங்கடி
கானலில் இருந்த மாமயிலே-கந்தன்
கண்ட கதைய படியுங்கடி
குறவர் குடிசை நுழைந்தானடி-அந்த
கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
துறவர் வணங்கும் புகழாண்டி-அவன்
தோற்றத்தை பாடி அடியுங்கடி
உங்களுக்கும் ஏதாவது கிராமிய பாடல்கள் தெரிந்தால் குறிப்பிடுங்க மீண்டும் சந்திப்போம்
உதவிய பக்கங்கள் : நாட்டுபுற இயல் , விக்கி , கிராமியம்
எண்ணங்களும் எழுத்து கோர்வையும்
பிரகாஷ் சோனா