சனி, 30 நவம்பர், 2013

சுட்ட கதை (பகுதி நான் மிகுதி புகழேந்தி)

என் சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தமிழை நுகர்ந்து செல்லட்டும், எனது ஒவ்வொரு நா அசைவும் காற்றோடு இசைந்து கால் அரை ஒரு மாத்திரையென தமிழை மட்டுமே அசை போடட்டும், இவைகளை கேட்டு என் செவிகள் இன்புறட்டும். இதோ தமிழுக்கான என் கர்ஜனை எட்டுத் திக்கும் பரவி வளிமண்டலத்தையே கிழித்தெரியட்டும், இனியொரு சீவன் உதயமாகின் அஃது தமிழையே நுகர்ந்து செல்லட்டும், தமிழை மட்டுமே நுகர்ந்து செல்லட்டும். அது அண்டவெளியின் எக்கோளின் உயிரினமாயினும் சரி தமிழாலே இன்புறட்டும், இஃது தமிழின் மீதான செருக்கோ ஐயமோ இல்லை, யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டுமே, 
சரி… கேளீர்.,! யாம் பெற்ற இன்பம் கேளீர், 
சுவைபடு தமிழைக் கண்டு, நிகண்டுகள் சில தந்த வீரமுனியின் தேம்பாவணி சுவைத்ததுண்டோ, தெள்ளமுதாம் தேனூர் முக்கனிச் சுவையாம் கலம்பகம் படித்ததுண்டோ, நந்திக்கலம்பக பாட்டுடைத் தலைவனை அறிந்ததுண்டோ, வனப்பு மிகு தமிழைக் கேட்டு மகிழ வர்மன் அருட்சோதியான கதையும் கேட்டதுண்டோ, 
ம்ம்ம் இன்னும் கேளீர் 
ஈரடி கருப்பொருளாம் வள்ளுவனின் மறை பொருளாம் உலகறிய மொழிபெயர்த்த கதையும் கேட்டதுண்டோ, சிவமும் அன்பும் ஒன்றாகும் அஃதின் உதயம் தென்னாடாகும்.  தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றியின் பொருளுணர்ந்ததுண்டோ

நிற்க.

தமிழ் வாள் உயர்த்தி சமூக அவலங்களை சவலை பிள்ளையாக்கிட துடிக்கும் எழுத்தாளன் தான் இவர் அதனாலேயே சர்ச்சைகளும் பல இவரை சுற்றி திரிவதுண்டு

இதோ பிரபல பத்திரிகைக்கு அவரது பிரத்யேக பேட்டி

தமிழை பற்றியும் சமூக அவலங்களை பற்றியும் கார சாரமா பல பத்திரிக்கைகள்ல எழுதியிருக்கீங்க புரட்சி எழுத்தாளன்னும் உங்கள சொல்றாங்க அத நீங்க எப்டி எடுத்துக்குறீங்க

புரட்சி வித்துகள் அண்ணன் பிரபா சே செய்யாத புரட்சியா தாடியும் மீசைக்காரனும் செய்யாத புரட்சியா நான் செய்திருக்க போறேன்

சர்ச்சைக்குரியவர்னு கூட உங்கள சொல்றாங்களே சென்ற வருடம் இணையத்தில் அதிகம் தேடபட்டவரும் நீங்கள் தான் விமர்சனத்துக்குள்ளானவரும் நீங்க தான்

பேச்சு தொணியில் சற்று வீரியத்தோடு
சமூக அவலங்களெலாம் சர்ச்சைக்கு உட்பட்டவையாதானே இருக்கு நான் அவலங்களை நோக்கி ஓடுவதால் சர்ச்சைகளும் என்னை சூழ்ந்து கொள்கிறது அவலங்களை களைவது நிம்மதியை ஏற்படுத்தும் ஒருவகை இன்பம் தானே

ஆடைகளில்லா வெண்ணிலவே உனை ஆரத்தழுவுவதில் எத்தனை இன்பம் என்று நீங்கள் சொன்ன வரிகள் சமூகத்திற்கு பொருந்தும் தானே

ஹஹஹ சர்ச்சையை கிளப்புவதே நீங்கள் தான் போல்..உண்மை தான் அவல ஆடைகளில்லா சமூக வெண்ணிலாவை தழுவுவது இன்பம் தானே

எழுத்தாளர் தமிழ்பித்தனுக்கும் உங்களுக்குமான கருத்து மோதலை பற்றி

எல்லா எழுத்தாளனுக்கும் உள்ள மோதல் போல தான் இதுவும்

நீங்கள் அவரை காளான் கவிஞன்னு சொன்னதால் அவர் உங்களை வயிற்றில் ஈரம் உலர்ந்து விட்டதால் பிதற்றுவதாக சாடுகிறாரே

ஆமாய்யா ஈரத்துணி கட்டிகிட்டு தான் அலையிறேன் என்னய்யா இது தேனை நக்குபவன் கூழ் குடிப்பவனை குறைபட்டு பார்ப்பது , உழைக்கிறோமையா உழைப்பில் பிழைக்கிறோமையா பிறகென்ன எம்மில் கேடு

உங்கள் போராட்டம் சமூக அக்கறை ஆட்சியின் நிலைப்பாடு எல்லாம் சரி, உங்கள் வீரியத்தை குறைத்து விவேகத்தோடு செயல்பட்டால் சமூக விழிப்புணர்வில் நன்மை பயக்குமே….உங்களது கோபம் தான்…..

போராட்ட குணத்திற்கு வீரியம் விவேகம் கோபம் எல்லாம் உண்டு கெஞ்சிக் கேட்டால் பிச்சை என்பான் அஞ்சி கேட்டால் கோழை என்பான் பின்பு எப்படி இதை நாங்கள் கையாளுவது சொல்லுங்கள் நீங்களே சொல்லுங்கள்…. குறுக்கு வலிக்க உழைத்த கூட்டம் குடிசைகளை விட்டு உயரவுமில்லை, குறுக்கு வழியில் பிழைத்த கூட்டம் கோடிகளை சேர்க்க்க அயரவும் இல்லை இதில் எங்கே நாங்கள் கோபபடாமல் இருக்க முடியும்

உங்களின் ஆதங்கம் எங்களுக்கு புரிகிறது அஞ்சாதே..! அஃறினையும் அழிவென்றால் அகத்தை முறைத்து காட்டும் என்ற உங்களது வரிகளையும் நாங்கள் மறக்கவில்லை இளையோருக்கான உங்களின் பாதை அவர்களை நல்வழிபடுத்தட்டும், ம்ம்ம் ஓர் எழுத்தாளனால் எல்லா நிகழ்வையும் எழுத்தில் கொண்டு வர முடியுமா..? 

அளவளாவிய உணர்வுகள் அனைத்தையும் எழுத்தில் கொண்டு வருவது சவால் தான்

உங்களின் அந்தரங்கத்தில் நுழைவதாய் எண்ண வேண்டாம் உங்கள் காதல் பற்றி…….அதுவும் நாற்பது வயதில்

நீண்ட சிரிப்பொலிக்கு பின்
காதலுக்கேது வயது வலி மறக்கும் காரணிகளை தேடித் தேடி அலுத்துப் போன மூளை செல்களுக்குள் சில நொடிகளில் ஆக்சிஜனை ஏராளமாய் நுழைக்க செய்தவள் நட்பை காதலுக்கு கடன் கேட்டபோது அன்பை தருகிறேன் என்று சொன்ன அவள் எனக்கு ஒரு தாய் போதுமா ஹஹஹ

காதலை இத்தருணத்தில் கொண்டாடும் நீங்கள் ஓரிரு வரிகள் உங்களின் காதலுக்காக

ம்ம்ம்ம்
உன்னிடத்தில் எனக்கும் என்னிடத்தில் உனக்கும் பேசிக் கொள்ள கோடி வார்த்தை இருந்தும் மெளன மட்டும் பிடித்திருக்கிறது உனக்கும் எனக்கும்
நன்றி வணக்கம்

வண்ணத்தில் புகழ் மிளிர நீலமயமாய் காயம் அமிழ்ந்து கிடக்கிறது. உங்கள் காயத்துகான புகழை நீங்களும் மிளிர செய்யுங்கள்
வணக்கம்

கற்பனை + எழுத்தாடல்
பெருவுடையான்



செவ்வாய், 12 நவம்பர், 2013

சுட்ட கதை (உணர்வால்)

ஏக்கத்துடன் உட்கார்ந்திருக்கும் அகிலின் மூளைக்குள் ஏதேதோ ஓடிக்கொண்டிருக்க நினைவுகள் பல தொலைகிறது சில நினைவுகள் அகிலை எட்டிபிடிக்க முயற்சிக்கிறது.

காலை ஏழு மணியாகியும் படுத்து தூங்கி கொண்டு இருக்கிறான் அகிலன்.  முனகலும் அழுகையுமாய் இருந்த அவனது தங்கையை அருகிலிருக்கும் சோபாவில் உட்கார வைத்து விட்டு அம்மா அகிலை எழுப்புகிறாள்.

டேய் அகில்… டேய் எந்திரிடா… டேய்…

என்னம்மா தூக்கத்த டிஸ்ட்ரப் பண்ணிகிட்டு

தங்கச்சிக்கு வயிறு வலிக்கிதாண்டா பிரசவ வலியா இருக்கும்னு நினைக்கிறேன், ’போயி ஆட்டோ கூட்டிட்டு வா’ ஹாஸ்பிட்டலுக்கு போவனும். அகிலும் வேகமாய் எழுந்து தனது உடமைகளை சரிசெய்து கொண்டு வேகமாக ஆட்டோ கூப்பிட கிளம்புகிறான்.

இதற்கிடையில், டாக்டரை பார்க்க போன் மூலம் அப்பாய்ன்மெண்ட் வாங்கி வைத்து விட்டாள் அகிலின் அம்மா,
ஆட்டோவில் ஏறி உட்கார்ந்ததுதான் இன்னும் பலமாய் கதற ஆரம்பித்து விட்டாள் ’கொஞ்சம் பொருத்துக்கம்மா இதோ கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிட்டல் வந்திடும்’ என்று மகளை தேற்றுகிறாள். ஹாஸ்பிட்டல் வந்ததும் தங்கையை வீல்சேரில் வைத்து தள்ளிக்கொண்டே அங்குள்ள ரிசப்சன் லேடியிடம் பிரசவ டாக்டர் எப்போ வருவாங்க என அகில் கேட்கிறான். அதற்கு அந்த லேடி பிரசவ டாக்டர் நாலு பேர் இருக்காங்க நீங்க எந்த டாக்டர பாக்கனும், உடனே அகிலின் அம்மா ஏங்க மஞ்சுளா மேடத்தை பாக்கனுங்க ஏற்கனவே அப்பாயின்மெண்ட் வாங்கியாச்சி,

கொஞ்சம் இருங்கம்மா இதோ போன் பண்றேன்.

.ஏம்மா உங்கள செக்கண்ட் ப்ளோருக்கு வரசொல்றாங்க,          

யாராவது ஒருத்தவங்க இங்க வாங்க
பேஸண்ட்டோட பேரு என்ன
கோமதி
வயசு
23

நர்ஸ்… பேஸண்ட்ட வந்து அழைச்சிட்டு போங்க என்று அந்த லேடி சொல்கிறாள்

இதோ இரண்டாவது மாடி வந்தாச்சி, அகிலின் தங்கையை சோதனை செய்து கொண்டிருக்கிறார் டாக்டர், இன்னும் சரியான பிரசவ வலி வரவில்லையென நர்ஸிடம் ஏதேதோ சொல்லிவிட்டு  அகிலையும் அவரது அம்மாவையும் வெளியே இருக்க சொல்லிச் செல்கிறார்.
மணி ஒன்பதாகிவிட்டது அகிலோ அம்மாவை ஹாஸ்பிட்டலிலே இருக்க சொல்லிட்டு காலை உணவு வாங்க சென்றுவிட்டான்.
அம்மாவோ தனது மருமகனுக்கு போன் பண்ணி விஷியத்தை சொல்கிறாள், மருமகனும் உடனே வருவதாக சொல்லி போனை துண்டிகிறார். அவர் கடலூரில் வேலை செய்து கொண்டிருப்பதால் சென்னை வர எப்படியும் மாலை ஐந்தாகிவிடும்,
காலை உணவை வாங்கி வந்த அகில் அம்மாவுடன் உணவருந்தி கொண்டிருக்கையில் நர்ஸ் அழைக்கிறாள்

யாரும்மா கோமதி கூட வந்தவங்க
அகிலும் உடனே போய் நான் தாங்க என்கிறான்
கோமதிக்கு நீங்க என்ன வேணும்
அண்ணங்க     
சரி நீங்க உடனே போயி ரிசப்சன்ல இருபதாயிர ரூபா பணங்கட்டிட்டு வாங்க
இதோ போறேங்க, அம்மா ஏற்கனவே சொல்லிருந்தாள் பிரசவத்துக்கு எப்படியும் 30ஆயிரத்துல இருந்து 40ஆயிரம் ஆகும்னு

இப்போ அகிலுக்கு ஒன்னுமே புரியல, அப்பாவும் ஊருல இல்ல அண்ணனும் ஊருல இல்ல அகிலுக்கோ பணம் புரட்டும் அளவுக்கு வெளி வட்டார அணுபவமோ நண்பர்களோ இல்லை, அம்மாவும் அவனை புரிந்து கொண்டு தனது கழுத்து சங்கிலியை அவுத்து தருகிறாள், அகிலுக்கு இப்பபோது தான் மனம் நிம்மதி ஆகிறது பணமும் புரட்டியாகிவிட்டது ரிசப்சனிலும் பணத்தை கட்டிவிட்டான் அகில்

மணி மாலை நான்காகிவிட்டது டாக்டர் அழைத்ததாக நர்ஸ் அழைக்கிறாள்

நீங்க யாரு
பொண்ணோட அம்மா
சரி,அவங்க கணவர் வரலையா
வந்துகிட்டு இருக்கார் மேடம்
உங்க பொண்ணுக்கு தண்ணிகொடம் உடைஞ்சிடுச்சி பாப்பவும் மோஷன் போயிடுச்சி அதனால க்ரிடிக்கல் கண்டிஷன் ஆப்ரேஷன் தான் பண்ணியாகனும் என்ன சொல்றீங்க

நீங்க என்ன செய்யனுமோ செய்யிங்க மேடம்

சரி நர்ஸ் ஒரு பார்ம் குடுப்பாங்க அதுல அவங்க வீட்டுக்காரர கையெழுத்து போட சொல்லுங்க

நர்ஸ்ஸும் பார்ம்மை எடுத்து வருகிறாள்
எங்கம்மா கோமதியோட ஹஸ்பண்ட்
அவரு இன்னும் வரலிங்க வந்துகிட்டு இருக்கார்
சரி நீங்க கையெழுத்து போடுங்க

அகிலின் தங்கையை தியேட்டருக்குள் அழைத்து செல்கிறார்கள்
மணி மாலை ஐந்தாகிவிட்டது அகிலின் அத்தானும் வந்து விட்டார்.
குழந்தையின் அழுகுரல்

என்ன குழந்தையா இருக்கும் எல்லோருக்கு ஒரே ஆவல் அதற்குள் அகிலின் அத்தான் குழந்தை பிறந்த செய்தியை சொல்ல போனை எடுத்து நம்பர் டயல் செய்து கொண்டிருக்கிறார், அகிலும் வேகமாய் பக்கத்தில் இருக்கும் கடைக்கு சென்று சாக்லெட் வாங்கி வந்து எல்லோருக்கும் கொடுக்க, என்ன குழந்த தம்பினு கேட்கிறாங்க அதே போல அகிலின் அத்தனும் எல்லாரிடமும் போனில் விஷியத்தை சொல்ல அவர்களும் என்ன குழந்தைனு கேக்குறாங்க

இப்போ இருவரும் ஒரே குரலின் நர்ஸ்ஸிடன் என்ன குழந்தைங்க என்று கேட்க, உள்ளே இருந்து ஒரு ஆயாம்மா வந்து மகாலட்சுமி பொறந்துருக்கு கண்ணு மகாலட்சுமி பொறந்திருக்கா நான் தான் இதோ…. இப்போ தான் ட்ரஸ்ஸிங் பண்ணிட்டு வந்தேன் அம்புட்டு அழகா இருக்கு போயி பாரு, அம்மா உள்ள தான் இருக்கு என்று சொல்கிறாள்.

அகிலின் அம்மாவும் வெளியே வருகிறாள், மருமகனை அழைக்கிறாள்.
’ஐயா வாங்க குழந்தைய போயி பாருங்க’ என்று சொல்கிறாள் அகிலும் அவனது அத்தானும் உள்ளே சென்று பார்கிறார்கள். அம்மா குழந்தையை தூக்கி அகிலிடம் தருகிறாள். அகிலும் பயந்தவாறே குழந்தையை தூக்கி ரசித்து விட்டு அத்தானிடம் கொடுத்து விட்டான், அளவில்லா சந்தோசம் அவனுக்கு அம்மாவை பார்த்து கேட்கிறான் எங்கம்மா தங்கச்சி

இன்னும் தியேட்டர்ல இருந்து கூட்டிட்டு வரல தனி பெட்டு ஒதுக்கனதுக்கு அப்பறம் கூட்டிட்டு வருவாங்கடா என்கிறாள்
இப்பொது அகில் எல்லோரிடமும் சந்தோசமாய் சொல்கிறான் நான் மாமாவாகிட்டேன்னு சொன்ன அந்த நாட்களின் நினைவு அகிலின் உணர்ச்சியற்ற ஜடத்தை கொஞ்சம் சோதித்து பார்க்கிறது

சோகசிரிப்பொன்றை உதிர்த்த அவனது உதடுகள் ஏதோ சொல்ல நினைக்க மூன்றரை வருட நினைவுகளை கண்ணீர் அழிக்க நினைக்கிறது. அன்று தங்கையின் பிரசவத்திற்கு ஓடியதை விட இன்று தங்கையின் குழந்தைக்கு வேகமாக ஓடி சோர்ந்து போய் நிலைகுலைந்து உட்கார்ந்திருக்கிறான், அன்று அவனுக்கு நண்பர்கள் இல்லை அப்பா அண்ணன் வெளியூர் சென்றிருந்தனர், வெளிவட்டார பழக்க வழக்கம் இல்லை ஆனால் இன்று எல்லாமே இருந்தும் ஓடி ஓடி களைத்து, நண்பன் தோளின் மீதும் தந்தையின் தோள்மீதும் மாறி மாறி சாய்ந்து துவண்டு கிடக்கிறான்

விஷகாய்ச்சலால் பாதித்த அந்த குழந்தையை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்தும் காப்பாற்ற முடியாது என்று சொன்னதால் துவண்டுகிடக்கிறான்

தங்கை டாக்டரின் காலை பிடித்து மன்றாடுகிறாள் பலனில்லை பிணகிடங்கிற்கு அழைக்கிறார்கள் நிலைகுலைந்து செல்கிறான் அகில்
அகிலின் தாயோ ஒப்பாரியிடுகிறாள் ஆவேசமாய்

போ போயி உன் கடனை கழிச்சிட்டு வா அன்னைக்கி பிஞ்சு குழந்தையா கையில வாங்குன இன்னைக்கி பொனமா வாங்கிட்டு வா போடா போ என்று கதறுகிறாள்

ஹாஸ்பிட்டலே கொஞ்சம் கலங்கிதான் போயிருந்தது இவர்களின் கதறலை பார்த்து

அகில் அழாமல் இருப்பதை பார்த்து இவன் தான் தைரியசாலி என நினைத்தாரோ என்னமோ வார்டுபாய், உயிர் பிரிந்த குழந்தையை வாங்க அகிலை அழைத்து செல்கிறான்

குழந்தையின் சரீரத்தை ஹாஸ்பிட்டல் வேன்லையே ஏத்தி தானும் ஏறிகொண்டு மற்றவர்களை வாடகை வண்டிடியில் ஏற்றிவிட்டான்
அகிலின் முன் கிடத்தியிருக்கும் செல்லத்தை பார்த்ததும் அழுகை முட்டிகொண்டது

ஒருதடவை அவளது அம்மாவுடன் மார்க்கெட் போகும் போது தொலைந்து போனதை சொல்லி அம்மா அடிச்சிட்டாங்க மாமா என்று சொன்ன விஷியத்தை அன்றைய சூழலில் காமெடியாக பாடிய பாடலை அழுது கொண்டே
பச்ச பாவாடை நிஷா பொண்ணு
மார்க்கெட் போறா நிஷா பொண்ணு
மார்கெட் போன நிஷா பொண்ணு கானா போயிட்டா என ஓவென்று அழுகிறான் அகில்

வாழ்க்கையின் அழகான தருணங்கள் வேகமாய் கடந்து விடுகிறது என்று நண்பர் கவிக்கோ. புகழேந்தி சொன்ன வரிகள் அவன் நினைவிற்கு வருகிறது

அவள் உலகை விட்டும் அகலவில்லை அகிலின் மனதை விட்டும் அகலவில்லை இன்றும் தனக்கு தெரிந்தவர்கள் மரணத்தோடு போராடினால் அகில் இவளை உருகி நினைத்தாலே போதும் இவளின் மூச்சு காற்று அவர்களின் மரணத்தை விடுவிக்கும் என்ற நம்பிக்கையோடு இதோ அவளின் நான்காவது பிறந்த நாளை கொண்டாட தயாராகிவிட்டான்

எண்ணங்களும் எழுத்து கோர்வையும்
*****பெருவுடையான்*****