வியாழன், 31 மே, 2012

தேன் நிலவு

தேன்...
ஆதிமனிதனின் முதல் உணவு
சுவைகளின் முதல்வன்
பூலோகத்தின் அருமருந்து
பூக்களின் சொத்து

லட்சம் போராளிகளை(தேனீக்களை)
வென்றெடுத்த அமுது

நெடுந்தூர பயண களைப்பில்
தோள் சாய்ந்து கிடந்தவளை
மறந்தே போனான் அமுதன்

மூன்று வருட மரண சுகம் அனுபவித்த
காதல் வாழ்க்கைக்கு பின்
சிறகு விரித்த பறவையாய் அவர்களின்
தேன் நிலவுக்கான பயணம்

பெயருக்கேற்ப கொஞ்சி பேசுவதில்
அவள்... தேன் மொழிதான்

அவன், தேடல் கொண்டவன்.
போராளி, காதலிக்கும் போது
அவளின் மனதை அறிய முற்ப்பட்ட
போராளி.

ஏன் நெடு நேர மெளனம்
ஏதும் சிந்தனையா
அமுதனின் மெளனத்தை கலைத்தால்
தேன்மொழி

இந்த தேனீக்களுக்கு
சுறுசுறுப்பும் கட்டுகோப்பான ஒற்றுமையையும்
யார் சொல்லி தந்தார்கள்
என்று சிந்தனை

அவை ரிங்காரமிட்டு ஆடி பாடி அப்படி
என்னதான் பேசிகொள்ளும்
என்று சிந்தனை

தோள் சாய்ந்தவள்
வாள் பார்வை வீசி

நீங்கள் தேன் பிரியரா

ஆம்... இந்த தேன் மங்கை
மீது பிரியம் கொண்டவன்

போதும்... தேன் தெவிட்டிவிட போகிறது

தேனோடு இந்த அமுதன்
சேர்ந்திருப்பதால்
தெவிட்டாது கண்ணே..

கட்டியணைத்து , தேனீக்கள் அறியா
இதழ் மலரோடு இதழ் மலரில்
முத்தமிட்ட அவளை
மின்சார முத்த பாய்ச்சலை கலைத்தது
பெண்ணுக்கே உரித்தான நாணம்.

பொய்யான கோபத்தில்
மெய்யான வெட்க புன்னகை
உதிர்த்தாள்.

தேன்மொழி
அங்கே பார் மனிதனுக்கான
உணவு சங்கிலிக்கு
ஆயத்தமாகின்றன தேனீக்கள்

விளங்காமல் விழித்தாள் தேன்மொழி

தேனீக்கள் பூக்களின்
மகரந்த சேர்க்கைக்கு
ஆயத்தமாகின்றன பெண்ணே

ஆளுயர மரங்கள் புதர் மண்டிய காடுகளுக்கு
அப்பால் சூரியன் மறைந்தே கிடந்ததால்
இருள் மங்கிய சூழல்
வெப்பம் தனித்த மெல்லிய குளிர் காற்று
இருந்தும் மயங்கிய நிலையில் தேன்மொழி
காதல் மனம் கொண்ட புதுமண தம்பதியல்லவா

தேன் நிலவுக்கான விளக்கம் தெரியுமா அமுதன்

ம்ம்ம் சொல்கிறேன் கேள்

தம்பதியரின் உள்ளங்கைகளில்
தேனை ஊற்றி நிலவும் தேனும்
ஓர் கோட்டில் இணையும் நேரம்
இவர்களும் இணைந்து
தேனை ஒருவர் மாற்றி ஒருவர்
ஊட்டி விடும் தருணம் அது பெண்ணே

உன் கட்டுகதையை நிறுத்து
செல்ல முனுமுனுப்புடன்
தேன்மொழி

உன் ஒவ்வொரு வெட்க புன்னகையும்
ஒவ்வொரு தேன்துளி போலல்லவா இருக்கிறது

நான்
உன் தேன்துளி வெட்க புன்னகையை சேகரிக்க
அந்த தேனீக்களை விட படாது பாடல்லவா
படவேண்டியிருக்கிறது

தேனீக்கள்
தேனை சேகரிக்க
லட்சம் முறை பறக்கும்போது
உனக்கென்னவாம் எனை
லட்சம் முறை கூட
வெட்க புன்னகை சிந்த வை

தேன்மொழி
உன் நடை, இடை,  உடை
ஒரே மொழி பேசினாலும்
செவ்விதழ் பதித்த உன் முகம்
பல மொழி பேசுகிறதே அதிலும்
அந்த செவ்விதழோரம் சிறு
குறு குறு துடிப்பு ...அடடே
உண்மையிலே உன் மொழி
தேன்மொழி தான்

சோமபாணம் தேனில் உருவானது
பலமுறை படித்தும் மனம்
ஏனோ ஏற்கவில்லை

உன் இதழ் அசைவின் பேச்சில்
கிறங்கிதான் போயிருக்கேன்
உண்மையிலே சோமபாணம்
தேனில் உருவானது தான்

சிறு வெட்க புன்னகை களைந்து

அமுதன் அங்கே பார்
ரோஜா மலர்

ரோஜா இதழுக்கும் தேனுக்கும்
ஓர் தொடர்பு உண்டு
பிஸ்கட் உருவாக இவர்கள் தான்
முதல் காரண கர்த்தா

தேன்மொழி
இந்தா இந்த பூவின் தேனை ருசி
ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு ருசி

தேனிலவில் தேன்மொழியோடு
மனதில் ஓர் புது தெம்பு தான்

மங்கோலிய வீரன் செங்கீஸ்கானுக்கு
போர்கால உணவாய் தெம்பூட்டியது
அந்த தேனென்றால்
இந்த அமுதனுக்கு
தேனிலவில் தெம்பூட்டும் உணவாய்
நீ தானடி தேன்மொழி

வெட்க புன்னகையாள்
மீண்டும் நாணத்தோடு


எண்ணங்களும் எழுத்தும்
****பிரகாஷ்சோனா****




புதன், 30 மே, 2012

நான்..யார்.......சாமி..யார்

நான் யார் ... நான் யார்? , சாமி யார்? என்னை குழப்பிய வரிகள் உங்களுக்கும் இது குழப்பமான பதிவாக இருக்கலாம்.

நான் யார்..?


நான் யார் என்ற கேள்வியை உனக்குள் எழுப்பு, சிந்தி என பல சாமியார்கள் சொல்லி சொல்லியே உங்களையும் என்னையும் குழப்பி மகான்களாகி அமரர் நிலையையும் எய்து விட்டனர்.

நான் நான் என்று அடிக்கடி சொல்லிகொள்கிறோமே அந்த ”நான்” யார் என்று உங்களுக்குள்ளே நீங்களே கேள்விகேட்டு பாருங்கள் உடனே நான் சிவா என்று உங்களது பெயரை சொல்லிகொள்வீர்கள், மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருங்கள் அப்போது நீங்கள் வகிக்கும் பதவியையோ, தொழிலையோ, குடும்ப பாரம்பரியத்தையோ (இன்னார்மகன், இன்னார் பேரன்) சொல்லிகொள்வீர்கள் நான் யார் என்ற ஒற்றை கேள்விக்கு பதில் தெரியாமல் பெயர், பதவி, பாரம்பரியம், என பல பதில்களை சொல்லிகொள்கிறோம், இவற்றையெல்லாம் நீக்கிவிட்டு மீண்டுமோர் முறை நான் யார் என்ற கேள்வியை உங்களுக்குள்ளே எழுப்புங்கள்.... உங்களுக்கு பதில் கிடைப்பது சிரமமே கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் , சதை நரம்புகளாலான காற்றடைத்த பிண்டம், எண்ண குவியல்களின் களம் என்ற பதிலே நம்மில் உதிக்கும்,சரி இதையெல்லாம் நீக்கிவிட்டு மீண்டும் ஓர் முறை நான் யார் என்றுஉங்களை நீங்களே கேட்டு பாருங்களேன்.பதில்..........ஒன்றுமே இல்லை

சரி கனவிலும் நனவிலும் இதே கேள்வியை கேட்டு பாருங்களேன், அட நனவுல கேட்டு பார்த்திடலாம், கனவுல எப்டி கேக்க முடியும் காரிருள் போர்த்தி என்னை நானே அறியா நிலையிலல்லவா கிடப்பேன், என்று நிங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது...ம்ம்ம் கேட்க முடியாது தான்

ஆக, நான் யார் என்ற கேள்விக்கு நமக்கான அடையாளங்களையோ செயல்களையோ தான் பதிலாய் தருகிறோம். நான் யார் என்ற கேள்விக்கு மேற்சொன்ன பதில்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு பார்த்தால் அதுவே நான் என்ற சுயஆத்மன், அந்த நான் என்ற ஆத்மனுக்கு அடையாளங்களோ குறிகளோ குணங்களோ கிடையாது, எந்த நிலையிலும் மாறாமல் குணங்குறியற்று இருப்பது எதுவோ அதுவே ”நான்”எனும் ஆத்மன், என்று நான் யார் என்ற ஆத்ம ஆராய்ச்சியில் ரமணமகரிஷி சொல்லியிருப்பார்.நான் எனும் அந்த ஆத்மனை நம்மில் நாம் உணர்ந்திருந்தாலே பூலோகத்தில் பிரச்சனைகளே அற்று இருந்திருக்கும் ..சரி அடுத்து இந்த சாமிகளை பற்றி "ச்சி" இந்த ஆசாமிகளை பற்றி பார்ப்போம்.

சாமி யார்..?

சாமி சாமி என்று அடித்து கொண்ட கால கட்டங்களில் நான் யார் என்பதை உணர் என்று சொல்லிய ஆசாமிகள் தான் நமது மாய திரையை விலக்கிய சாமி என்று சொன்னாலும் தகும் என்று சிலர் சொல்வர். ஆசாமிகளாகிய நாம், நாம் யார் என்பதை உணர்ந்தாலே போதும் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஏதுடா சாமி என்று புகட்டியவர்களும் அவர்கள் தானே என்றும் சிலர் வாதிடுவர்.

”நான் யார்” என்று கேள்வி கேட்க தெரியாதவன் தான், ”நான்” எனும் ஆத்மனை உணராதவன் தான், தனக்குள்ளே கேள்வி கேட்டு கொள்ளுங்கள் என்று சொன்னவர்களையே சாமியாக்கி விடுகிறார்கள். நமக்கான பணிகளை நாம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென ஒருவன் நம்மை பார்த்து நீ உலகில் பல இடங்களில் பயணம் செய்திருப்பாய் ஆனால் ஓர் நாளாவது உனக்குள் நீ பயணம் செய்திருக்கிறாயா என்று கேட்டால் அவனை பார்க்கும்போது நமக்கு என்ன தோன்றும் ஒன்னு பைத்தியம்னு தோனும் இல்லன்னா என்னாமா யோசிக்கிறாம்பா நீ அதிமேதாவிதாம்பா இப்டி தான் எண்ண தோன்றும்.

இப்படி தனக்கான பாதையை விட்டு மாற்று சிந்தனையில் சிந்திப்பவர்களை ஞானி என்றும் சாமி என்றும் நம்மில் பலர் ஏற்றுகொள்கின்றனர். அவர்களின் மாற்று சிந்தனை உங்களை சிந்திக்க வைக்கிறதா அப்படியென்றால் அவர்களது மாற்று சிந்தனையையும் அவர்களின் சாரத்தையும் ஏற்றுகொள்ளுங்கள் வேண்டாமென்றில்லை அவர்களை பின்பற்றி அவர்களை அதிமேதாவிகளாக்கி சாமியாக்கி மேலுயர தூக்கி நிறுத்தாதீர் விளைவு நமக்கே

இயற்கை சக்திகளின் சீற்றங்களுக்கும் பிரபஞ்ச சக்திகளுக்கும் பயந்த நம்மவர்கள் தமக்கான பாதுகாப்பு வேண்டி அச்சக்திகளை சாமியாக்கிய வேளையில், மாற்று சிந்தனையுள்ள ஆசாமிகள் நம்மிடையே சாமிகளாகி போனர். இயற்கையை மீறிய சக்திகள் அனைத்தும் மாயைகளே என்று எப்போது நாம் உணர்கிறோமோ நான் என்ற ஆத்ம சொரூபனை எப்போது நாம் உணர்கிறோமோ அன்று இந்த சாமிகள் மீண்டும் ஆசாமிகளாகி போவர்.

இது எனது கருத்து, உங்கள் சிந்தனையோடு எனது கருத்தை ஒப்பிடும்போது சில எதிர்மறை கருத்து இருக்கலாம்.....விதிவிலக்கல்ல

எண்ண எழுத்துகளுடன்
***பிரகாஷ்சோனா***

செவ்வாய், 29 மே, 2012

ஆதி வித்துக்கள்

எண்ணங்களுக்கு தூபம் போட்டு
வண்ண கனவுகளை வளர்க்க வேணாமடா
நல் உள்ளங் கொண்டு வல்லோன் வலியோன்
வாழ்த்திட்டால் போதுமடா

மாய உலகில் சாயமிகு காயத்தை
அகற்றினால் மன காயங்களும் மாயமாகுமடா
இகழ்ச்சியும் புகழ்ச்சியும் துச்சமெனகொள்
உன்னில் மகிழ்ச்சியும் தஞ்சமாகுமடா

வன்மமில்லா கன்மங்களோடு
திண்மமாய் வாழ்ந்திட்டால்
அஃதே வாழ்வியலின் உச்சமடா-உனக்கு
வானளாவிய புகழ்ச்சி நிச்சயமடா

கூச்சம் தவிர்த்து பயத்தை போக்கி
சந்தர்ப்பத்தை பயன்படுத்தினால் - வாழ்நாள்
போராட்டம் சிறிதேனும் குறையுமடா
 மனம் விரைவில் நிறையுமடா

புத்தியை கிளரி சிந்தையுணர்ந்து
நிதானமாய் கவனித்து எண்ணங்களை
செயல்படுத்தினால் தரணியில்
நிரந்தரமாகும் உன் பவனியடா

இஃது ஆதியில் புகட்டிய வரிகளேயடா -ஆகையின்
அகமறிந்தோன் ஏட்டினையும் சிறிது பாரடா
இதுவே வாழ்வியலின் வித்தென நீயும் கூறடா

 எண்ண எழுத்துகளுடன்
****பிரகாஷ்சோனா****

புதன், 9 மே, 2012

மார்கழி

தேகம் குளிருது நெஞ்சு சிலுக்குது
மஞ்ச வெயிலு மதி மயக்குது
வாட காத்தும் எனை வாட்டியெடுக்குது
ஆவி பறக்க வந்த ஆகாரமும் தாவி பறக்குது

இன்ச் இன்ச்சா இஞ்சி முத்தம் வச்சி கலங்கடிக்குற
பிஞ்சு நெஞ்ச பஞ்சு போல பதற வைக்குற
கட்டுபாட்டை மீறிதான் கட்டியணைக்குற
அத்து மீறி எனையே ஆள பாக்குற

உதிரமும் உறைஞ்சிதான் போகுது
சுவாசமும் குறைஞ்சியே சுழலுது
உன் வாசம் மட்டும் வசமாகுது - மாசமோ
மார்கழி மாசமாகுது பனி பிரசவமாகுது

முட்டி மோதி முடங்கிதான் போறேன்
காலை வெயிலு வந்தும் கெறங்கியே தான் வாரேன்
என் பணி தோய்ந்திருக்க - உன் பனி
அப்பப்பா... முன்பனி பின்பனி தான்

மாறுமோ மார்கழி
தீருமோ என் மீதான பழி
வாராதோ வசந்தம்
எனையும் கொஞ்சம் பாராதோ

***இவன்***
பிரகாஷ் சோனா

யுத்தம் செய்

யுத்தம் செய்
நித்தம் நித்தம்
நல் யுத்தம் செய்

சிந்தை பெற
பித்தம் தெளிய -நல்
யுத்தம் செய்

விந்தை பெற -நல்
யுக்தியுடன்
சித்தம் கலங்க -புது
யுத்தம் செய்

யுத்தம் செய்
யுத்தம் செய்
வீழ்ந்திடாத -இனியும்
வீழ்த்திடாத யுத்தம் செய்

நல் எண்ணங்கொண்டு
வித்திட்ட யுத்தம் செய்
பாரும் விக்கித்து போகும்
புது யுத்தம் செய்

பிணிவந்தாலும் -தன்
பணியுணர்ந்து
யுத்தம் செய்

தாழ்வுமில்லா ஏற்றமுமில்லா
சாதியில்லா மதமுமில்லா
பேதமில்லா பாதகமில்லா
நல்லுலகம் படைக்க
யுத்தம் செய் புது யுத்தம் செய்

வீழவ்து நாமாயினும் எழுவது
புது இனமாகட்டும் அதுவும்
நம் மினமாகட்டும்
யுத்தம் செய் நல் யுத்தம் செய்

***இவன்***
பிரகாஷ் சோனா

சனி, 5 மே, 2012

யோவ் ...போயா ஆளும் மண்டையும் சைசும்

ஹலோ சார்
இந்த சூட்கேஸ் உங்களுதா
இல்ல ...
அவுருது
அவுருதா இல்லையே நல்லா டைட்டா பெல்ட் போட்டிருக்கேனே
ஐயோ .....
உங்க பின்னாடி நிக்கிறாரே அவுருது
இல்லையே அவரும் நல்லா டைட்டா......
யோவ் ...போயா ஆளும் மண்டையும் சைசும்

பிரகாஷ் சோனா

சுட்ட ஃபேமிலி

ம்ம்ம் நல்லாயிருக்கே இந்த தோசைய சுட்டது யாரு
நான் தா
நீங்களா...
இல்ல உங்க அம்மாகிட்ட இருந்து.......
அம்மாவா
இல்ல
கடையில சுட்டது....
ஐயோ.......
புரியுற மாதிரி சொல்லுங்களேன்
நம்ம முனியாண்டி மெஸ்-ல தோசை சுட்டாங்களா
உங்கம்மா அதை கடைகாரனுக்கு தெரியாம சுட்டுட்டாங்க
 உங்கம்மாவுக்கு தெரியாம நான் சுட்டுட்டேன்
இப்ப நீ எங்கிட்ட இருந்து...........
போதும் தலை வலிக்குது
ஆமா இது என்ன பார்சல்
ஹிஹிஹிஹிஹி இது
எங்க ஆபீஸ்ல சுட்டது

(ஃபேமிலியும் சுட்ட ஃபேமிலியா இருக்குமோ)

பிரகாஷ் சோனா

வியாழன், 3 மே, 2012

திகைப்புடன்... காகிதங்களை தேடி

தேடிப்பிடித்த எழுத்துகள் 
வரிகளாகுமுன்
காகிதங்கள் கசங்குவதும்

நெடுநேர விழித்தலுக்கு பின்
விழிகள் அயர்வதும்

நடுநிசியில் நிர்மூலமான
அரைகுறை நித்திரையும்
வழக்கமாகிட......

சேவல் கூவி விடியாத இரவுகள்
அலார ரிங்காரத்தில் விடிய
காலை நேர தேனீரும் 
கசப்பாய்...

எந்திரலோக பயணத்தில்
நான்.....

வழியெங்கும் செவித்திரைக்கெட்டிய 
துர்நாற்றங்கள் காட்சி பிழைகளாய் 
ஆங்காங்கே...

ஒவ்வா மனவியல்புகளுடன்
ஒன்றிய மாமேதைகள்
பணந்திண்ணி கழுகுகளாய்

சுழலுலகின் சூழலால் 
சுழலில் சிக்கிய 
மனுதர்ம மறியா மானிடர்கள்

கல்வி யாது மொழி யாது -என
அறியாது... சமூக சுமைகளுடன்
மழலை பிஞ்சுகள்

அன்று முதலின்று வரை -எம்
பெண்டுகளை போக புசித்தலாகவே
காணும் காமுகர்கள்

அன்பு களைந்த பற்றுதலாய் 
மெய் களைந்த உந்துதலாய் 
மதங்கள்...மடாதிபதிகள்

இவைகளை எங்ஙனம் களைவது
திகைப்புடன் 

மீண்டும்... 
கண்டதை வரிகளாக்கிட 
காகிதங்களை தேடி 
எழுத்துகளுடன் யான்....

***பிரகாஷ் சோனா***