செவ்வாய், 30 ஏப்ரல், 2013

ஆசிரியர் நகைச்சுவை

ஆசிரியர் : சனி ஞாயறு திங்க லீவு

மாணவர்கள் : ஹையா ஜாலி ஜாலி

ஆசிரியர் : எப்பா ராசாக்களா சனி ஞாயறு திங்க திங்க லீவு(சாப்டலீவு)

மாண்வர்கள் : ஞே..பவ்வ்வ்

*************************************************************************************************

ஆசிரியர் : 23ம் நூற்றாண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு இனி காது இருக்காது

மாணவர்கள் : அப்டியா..! ஏன் சார்..?

ஆசிரியர் : கண்ணுகளா 23ம் நூற்றாண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு இனி காது இரு(இரண்டு) காது 

மாணவர்கள் : ஞே.....பவ்வ்வ்


இறைவன் உதயமாகிறான்


கலைக்கண் கொண்டு சிலையொன்று
எம்முன்னோன் செதுக்கினரோ

வழிவந்தோரெலாம் அக்கலை கண்டு வியந்து
கைகூப்பி தொழுதனரோ

கலைதனை தொழிலாய் கொண்டு
தொழிற்தனில் கடவுளை கண்டனரோ
எம்மக்காள் அம்முதல் இறைதனை ஏற்றனரோ

அண்ட வெளியில் காணாத இறையை
அன்பினில் அடைத்தனரோ
இயற்கையில் காணாத இறையின் வனப்பை
சிலையின் அழகில் புகுத்தினரோ

அவ்வழி இல்லையெனில்

விஞ்ஞான மெய்ஞான வியாக்யான
மெலாம் பேசி எம்மக்காள் 
இறைதனை கண்டனரோ

சாதிசமய தீண்டாமைதனை
இரவல் பெற்ற அறிவைகொண்டு
எம்குல மக்காள் எங்ஙன்ம் வகுத்தனரோ
இதில் எங்ஙகனம் இறைதனை படைத்தனரோ

பெருவுடையான்

என் தேசம் என் மக்கள்


சாதீ ஒழிய பாடுபடும் பலர்,
சமய ஒழிப்பில் சிலர் ஆகி போகிறார்கள்.

இவ்விரண்டும் தேவையென்று சொல்லும் சிலரின் கருத்தடைவு யாதெனில், அவரவர் இனம் யாதென அறியவே இவையாம்.

பாவம், இரவல் வாங்கிய அறிவை கொண்டு சிந்திப்பவர்கள் போல
தமிழர் பண்டிகை எல்லாம் இந்துக்கள் பண்டிகை எனவும்,
இந்திய தேசம் இந்துக்கள் தேசம் எனவும் எண்னுவோர்க்கு என்ன சொல்லி புரிய வைப்பது.

மனிதரின் புறவாழ்வில் சாதீயும், அகவாழ்வில் மதமும் அகலா இடம் பிடித்து விட்டது. அறமும் வீரமும், ஊடலும் கூடலும், காதலும் களிப்பும் ,இருந்த மனித வாழ்வில் சாதி கம்பளம் விரிக்கபட்டு மதங்கள் வீருநடை போட்டு கொண்டுதான் இருக்கிறது. இதில் எம் தமிழினம் காலந்தோரும் ஒன்றுபடாமல் பிரிக்கபட்டே கிடக்கிறது

தமிழ்...
சைவத்தமிழ்
வைணவதமிழ்
சமணத்தமிழ்
என சமயங்களால் வளர்க்கபட்டது போல் இனிவருங்காலம் சாதிகளால் வளர்க்கபட்டு விடுமோ

இத்தருணம் நாம் காணும் தமிழ், சமயங்களால் வளர்க்கபட்டு அழிவின் விளிம்பில் மிஞ்சியவைகளே

மிஞ்சியவை சாதிகளால் வளர்க்க பட்டால் இனியும் எஞ்சுவது கடினமே, எனும் ஐயப்பாடே என்னில்  நிலவுகிறது

இன்றய சூழலில் தமிழ் பேசுபவன் யாரென்றால், முதலிடம் பிடிப்பவர்கள் அரசியல் கட்சி தலைவர்களே, பிறமொழி கலப்பில்லாமல் பேசினாலே அவனை அரசியல் கட்சிகாரனாகவே பார்க்கிறது சமூகம் ,என்னை பொறுத்தவரையில்

சமூகம் வளர அரசியல்ஆட்சி நடத்தியது போய், சாதிசமய வளர்ச்சியில் ஒண்டிகுடித்தனம் நடத்துகின்றன ஆட்சிகளும் & கட்சிகளும்

சமூக வளர்சியில் பூர்வகுடி இனவளர்ச்சியை மேம்படுத்தாத அரசுகள்,  கடைநிலை குடிமகனின் தேவையை சீர்குலைக்கும் சாதி சமயத்தை சீர்படுத்தாத அரசுகள், கண்டம் விட்டு கண்டம் கொள்ளையடித்தது போதாதென்று, கோள்விட்டு கோள் சென்று கனிம வளங்களை கொள்ளையடிக்க தயாராகி வருகிறது . இது தான் இன்றைய நிலையில் எம் தேசத்துக்கான வளர்ச்சி

சாதியம் ஒழிக்க பாடுபட்டவர்களின் பெயர் கூட இன்று சாதி பட்டியலில் ,இனம் காக்க பாடு பட்டவர்களின் பலரது பெயர் இனபட்டியலில் கிடைப்பது அரிதே

சமணர்களுக்கு பிடிக்காத ஐந்திரம் எனும் இலக்கண நூல் பாணினியால் அழிக்க பட்டது போல் சாதிசமயங்களால் தமிழும் ,எம் இனமும் அழியபடாமல் இருந்தால் சரி

(ஐந்திரம் வழியாக அகத்தியத்தின் துணையோடு தொல்காப்பியர் நூலியற்றியதாக தொல்காப்பியரின் சக மாணவரான பனம்பாரர் கூறுகிறார்)

பெருவுடையான்

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

கிராமியம் - தாலாட்டு


நெடுநாட்களுக்கு பின் கிராமியங்களில் பாடப்படும் தாலாட்டு பாடல்களோடு இப்பதிவு வழியாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி , பொதுவாக தாலாட்டுகளில் ஆராரோ,ஆரிரரோ,என்று இசை வரிகளை பயன்படுத்தபட்டே பாடபட்டிருக்கும். எல்லாம்... குழந்தைகளை வசீகரிக்க கூடிய ஒரு ஈர்ப்பு தான் அவ்வரிகள். அதே போல ஆண் குழந்தைகளுக்கு தனி, பெண் குழந்தைகளுக்கு தனி, என சில சில மாற்றங்கள் செய்து பாடபட்டிருக்கும், ஆண்,பெண் என இருவருக்கும் பொதுவான பாடல் வரிகளும் இருக்கும். 

உதாரணம் :

ராராரோ... ஆரிரரோ
ஆராரோ... ராரிரரோ
என் கண்ணே
ஆரிரரோ ராராரோ...
கண்ணுங்கு... கண்ணுறங்கு...
கண்மணியே... கண்ணுறங்கு... - என்
பொன்மணியே கண்ணுங்கு...

ராராரோ... ஆரிரரோ
கண்ணே ஆரிரரோ ராராரோ...

ஓடு மான் ஓட
ஒன்பது மான் பின் தொடர
காட்டு மான் கூட
கவரிமான் கண்ணுறங்கு
கண்ணான கண்ணே
கண்மணியே கண்ணுறங்கு
பொன்னான கண்ணே
பூமரத்து வண்டுறங்கு

ராரிக்கு அழுத கண்ணோ
நீ ராமர் புஷ்பம் கேட்ட கண்ணோ
தூரிக்கு அழுத கண்ணோ
நீ சொக்க ரதம் கேட்ட கண்ணோ
ஓ ராரி ராரி ராரி ராராரோ             (பொது)
**********************************************************
சரி, ஆணுக்கு தனி பெண்ணுக்கு தனி தாலாட்டு பாடல்கள் என்று சொன்னேன் அல்லவா ,அந்த ஆண் பிள்ளைகளுக்கான தாலாட்டு வரிகள் எப்படி இருக்கும், கொஞ்சம் வீரம் கலந்ததாக இருக்கும் அவ்வளவே இதோ கீழே

உதாரணம் :

பூனை பால் பீச்சி
புலிப்பால் உறையூத்தி
ஆனைப்பால் பீச்சி வரும்
ஆனழகன யாரடிச்சா

தெற்கே உறகிணறாம் - உன்
தெருவெல்லாம் பால்கிணறாம்
பால்கிணத்த பாக்க வந்த
பாலகன யாரடிச்சா

யாரடிச்சா நீ அழுக
நீ அடிச்சாரை சொல்லி அழு

மாமா அடிச்சாகளோ உன்னை
மல்லிகப்பூ செண்டால
அத்தை அடிச்சாகளோ உன்னை
அரளிப்பூ செண்டால
தாத்தா அடிச்சாகளோ உன்னை
தாழம்பூ செண்டாலே
பாட்டி அடிச்சாகளோ உனக்கு
பால் கொடுக்கும் கையாலே

யாரடிச்சா நீ அழுக
நீ அடிச்சாரை சொல்லி அழு

ஓ ராரி ராரி ராரி ராராரோ         (ஆண்)
*********************************************************
அடுத்து பெண் பிள்ளைகளுக்கான தாலாட்டு , இது கொஞ்சம் செல்லமாகவும் குல பெருமைகளை தழைக்க செய்ய கூடியதாகவும் இருக்கும் இதோ

உதாரணம் :

வடக்கே நிலம் வாங்கி உங்க அப்பா
வாழை தோப்பு உண்டு பண்ண
வாடகாத்து வீசுதல்லோ
வருசமக நீ கண்ணசர

தெற்கே நிலம் வாங்கி உங்க அப்பா
தென்னந்தோப்பு உண்டு பண்ண
தெங்காத்து வீசுதல்லோ
செல்லமகள் நீ கண்ணசர

நீ போற இடம்
என்ன வச்சா தோப்பாகும்
இஞ்சி பிஞ்சரங்கம்
எலுமிச்சை தோப்பாகும்
மஞ்ச பயிராகும்
மாமரம் சோலையாகும்

மானே மரிக்கொழுந்தே
மருகில்லா மாணிக்கமே
தேனே திரவியமே
தெவிட்டாத தெள்ளமுதே
மாசி பிறையே
மங்காத மாங்கனியே
தேசப் பிறையே
தெவிட்டாத மாங்கனியே
உங்க குலம் மங்காம
எதிர் குலத்தார் ஏசாம
தங்கமலை பொக்கிசத்தை
தானாள வந்த கண்ணே

கண்ணுரங்கு கண்ணுரங்கு
கண்மணியே கண்ணுரங்கு - என்
பொன்மணியே கண்ணுரங்கு       (பெண்)

தாலாட்டினை உங்கள் இல்லங்களிலும் சிறிது பயன்படுத்தி தான் பாருங்களேன் . உங்களுக்கு தெரிந்த நாட்டுபுற கிராமிய தாலாட்டு வகைகள் ஏதேனும் இருந்தாலும் கூறுங்களேன் 

நன்றி
பெருவுடையான்

புதன், 5 செப்டம்பர், 2012

தமக்கையின் வலையகம்

http://chinaintamil.blogspot.hk/ இவ் வலையகத்தின் உள்ளடக்கங்களே பின் வருவன
 
 
தமிழ் தேசப் பறவை
சீனம் நோக்கி கூடமைத்தது ஏனோ
பெய்ஜிங் இசை நாடகங் கேட்கதானோ
சீனச்சுவட்டில் சீறிய பண்பேதுமுண்டோ

உண்டென்று கூறும் நீவீர்
அஃது கலாச்சார மொழிபற்று தானோ
வியப்பு!என்னில் மேலோங்குது வியப்பு
தேசமொழி மாறும்;நேசமொழி மாறுமோ
உம்மில் யாமின் பாசவழிதான் கலையுமோ

கலையா; அன்புக்கன்பே நிகர்.
நலமான ஊன்றிய இழப்பே வரலாறாகுங்பட்சம்
வரலாற் றாசானின் இழப்பும் நலமன்றோ
நலமென்கின் உம் எண்ணச் சுவட்டில்
அஃது வரலாறு ஆகட்டும்

வரலாறாகிய நட்புகள் புரிவதேயில்லை
நிரந்தரமாய் நட்பு பிரிவதுமில்லை
நட்பென்றும் அழகே; நட்பின் நலன் கருதுவதால்
நட்பு ஆழமான நினைவு பரிசு
நட்பு சுமையிறக்கும் வழிப்போக்கன்

சுமையிறக்கும் வழிப்போக்கன் வாரானோ
என்சுமை தீர்ப்பானோ;கண்ணில் நீர்வழிய
நெஞ்சில் நினைவுகளுடன், இன்னும்
சிலமாதம் தளிர் நடைபோட்டு கடப்பேனோ
உமைகாண சிலநினைவுளை விழைவேனோ

விழைந்த நினைவும் உன் பெயருச்சரிக்க
அஃதன்பென்று மனம் நகைக்கிறது-அங்கே
இளைப்பாற மனம் யாசிக்கிறது; அன்புமொழி
வாசிக்க,அழகாய் நலம் விசாரிக்க; மனம்
யாசிக்கிறது,குழந்தையாய் மனம் அடம்பிடிக்கிறது

அடம்பிடித்த மனம் அன்னை முந்தானையில்
ஒளிந்த நினைவுகளோடு வாழ்த்தையிட்டு நகர்கிறது
கவலை தோய்ந்த அந்தநொடி என்னுயிர்
நண்பன் நீதான் என்கிறது, கம்போடியா நகரத்து
கோயில் போல விசாலமாய்...

விசாலமான கம்போடியத்து அங்கோர்வாட் பல்
நூற்றாண்டை உள்வாங்கியது அஃதே பல்லுலக
பார்வைகளையும் உள்வாங்கியது, நாற்திசை
நாவாயில் ஓர்ரகழி மும்மண்டப ஐந்துகோவிலென
கலை பிரம்மாக்கள் அடங்கிய சொர்க்கபுரி

சொர்க்கபுரி வர்மனால் உச்சத்தை தொட
வாட்போ புத்தனும் சுவர்ணபூமி வாசுகியசுர
தேவரும் விழிதனில் ஆழப்பதிந்து பஹுரத்
ஆச்சிரியத்தில் புருவம் தூக்கி நிற்கிறது
மிச்சத்தை உம்எழுத்து தொட நினைக்கிறது

தொட நினைப்பது எதுவோ நீவீர்
அஃது உலகவரலாறு தானோ; நியான்
காலம் வசந்தகால புத்தாண்டாய் மாற
யானும் உங்களில் பகிர்கிறேன்
ஷின் நியான் குவாய்ல

ஷின் நியான் குவாய்ல சொல்லி
புன்னகையோடு நிறுத்தாமல் பாசவலையியில்
சிக்கிடலாமென நினைக்கிறேன்; கூறும்
தமக்கையே உம்பயணத்தில் எனக்கோர் இடமுண்டா
வெற்றிடத்தை நிரப்ப எனக்கோர் சிம்மாசனமுண்டா

சிம்மாசனம் எமக்கு உண்டென்பது நிச்சயம்
நீவீர் பழகிய புரிதலால் அஃது சாத்யம்

பிரகாஷ்சோனா(பெருவுடையான்

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

யார் இவள்

  சாளர ஓரத்தின் இருக்கையில் ஏதோ பரபரப்பாக எழுதி கொண்டிருக்கிறான் அகில், எழுதி முடித்து மீண்டும் பரபரப்போடு எழுந்து கண்காணிப்பு ஆசிரியையிடம் வெற்று தாளை வாங்கி மீண்டும் பரபரப்போடு எழுதி கொண்டிருக்கிறான்.பள்ளி மணி அடிக்க விடை தாள்களை ஆசிரியை ஒன்றன் பின் ஒன்றாக வாங்கி கொண்டே அகிலை நெருங்க  அகிலும் பதட்டத்தோடு எழுதுகோலின் வேகத்தை கூட்டுகிறான் , ஆசிரியை அவன் அருகில் வந்ததும் ஒருவழியாக எழுதி முடித்த விடை தாள்களை கொடுத்து விட்டு தனது உடைமைகளை சரி பார்க்க..... மேசையின் கீழ் உள்ள கால் சட்டத்தில் அகிலின் கால் மாட்டி கீழே விழ இருந்த அந்த நொடி அருகில் இருந்த அவளின் கைகளை தன்னையறியாமல் பற்றுகிறான்...அவள் திகைப்புடன் இவனை நோக்க.... பற்றிய கைகளை சட்டென்றெடுக்கிறான் அகில், மீண்டும் கால் இடறிட தன்னையறியாமல் மீண்டும் அவளது கைகளை இவனது கைகள் பற்றிக்கொள்கிறது
அவளோ அகிலின் கைகளை தட்டி விட்டு வெறுமனே புன்னகையோடு நகர்கிறாள்

நாட்கள் நகர நகர
அவளோடு இவனது நாட்களையும் நகர்த்த எண்ணி
காணும் தொலைவெங்கும் அவள் தரிசனத்தை நாடிட மலர்ந்த பூவாய் இவனது விழிகள் காத்து கிடக்கிறது

ஆம் யார் இவள் விடையறியா பயணத்தில் மனவேள்வியில் அவளை இடுவதற்க்குள் மங்கல ஒலி கேட்க மங்கள நாண் பூண அருகில் ஒருத்தி கை பிடிக்க காத்திருக்கிறாள்

யார் அவள்.... யார் இவள்

குழப்பத்தில் அகில்

கடந்த நினைவு சுகிப்பது நலம் எனினும் கடக்க இருக்கும் நிகழ் பொழுதில் கடந்த நினைவை கலந்து குழப்புவதில் என்ன நலம்..? தேற்றிக்கொள்கிறான் அகில்

மணப்பலகையில் அமர்கிறான் மங்கல ஒலியில் மங்கைக்கு மங்கள நாண் ஏற்றுகிறான் எல்லாமும் சுமாய் நிலவ அகிலின் மனதில் மட்டும் உறுத்தல்

அக்னி சுற்றிட அகில் எழுந்திட கால் தடுமாறி அருகில் இருந்த அவளின் கைகளை தன்னையறியாமல் பற்றுகிறான் அன்று அவள் உதிர்த்த புன்னகை மாறாமல் இன்று இவளிடம் , தட்டிவிடா அரவணைப்போடு இவன் கை அவளது கையில் இருக்க இவள் பின் அக்னி சுற்றுகிறான் அகில் லயித்த வண்ணம்


எழுத்து கற்பனை

***பெருவுடையான்***

புதன், 11 ஜூலை, 2012

என்னவளே II

சிங்கார மயிலுக்கு சின்ன குயில் கூவுது
ஆலோபங்கிளியும் ஆரிராரோ கேட்குது

இலைச்சருகு சிறகாய் துள்ளி திரியுது
மின்மினி யிங்கே கண் சிமிட்டுது

மாய கண்ணனிங்கே மன்மதனாக
மாயவள் எங்கே மனக் கூட்டு குயிலே

ஊடல் சுகம் கற்க காதல் ஏற்க வந்தேன்
வசந்தனுமிங்கே...! வாயடைத்தே போனேன்

ஓரவிழி பார்வையில் ஓடைதனில் நீ நனைய
மாராப்பு போடுதம்மா வேனிற்கால தூரல்

தூண்டில் கண்கள் சரசம் பேசிட
தூவான மெங்கும் ஒலியொளி வீசுது

ஆடுமயிலே நீ சேலை உடுத்த வருணனும்
மறைந்தானம்மா வண்ண சேலை கொடுத்திட

நெருஞ்சிகளும் உன் பாதந்தனை  பதம் பார்க்க
கைகொடுத்தேன் உன் நெஞ்சில் இதமாய் வாழ

காதல் வழி தேட மோதல் விழி வீசுகிறாய்  அடடா...
இன்பசுகம் இன்பசுகம் என்னில் நீ பேசுகிறாய்

உடுக்கை இடைதனை காண உன்னுடுப்பை
களைகிறான் பாதகன் நெருஞ்சி சகோதரன்

மீண்டும் என்னில் மோதல் விழி வீசுகிறாய்
காதல் மொழி பேசி ஊடல்சுகம் கற்கிறாய்

அடடா... இன்பசுகம் நல்லினிய சுகம்

நாற் திசையவர் அறியா நான்மறை யறிந்தேன்
நடுநிசி உறக்கம் நான் மறந்தேன்

என்னில் எனையே நான் மறந்தேன்

***பிரகாஷ் சோனா***


சனி, 7 ஜூலை, 2012

நட்போடு மீண்டும் ஓர் நாள்

மூவேழாண்டு முந்தைய நட்பின் அழைப்பு
வீட்டின் அழைப்பு மணியில் ரிங்காரமிடுகிறது

நட்புகள்...
ஆர்ப்பாட்ட அகமகிழ்வோடு இயல்பாய்
நலம் சுகிக்க பின்னோக்கி நகர்கிறது நாட்கள்....

ஆகாய கூட்டங்களாய் நட்பான காலமது

கேலி கூத்துகளிடையே காலியான மன காயங்கள்
துயில் கலையுமுன் மீண்டுமோர் குட்டி தூக்கம்
அறிமுக நாட்களில் உதிர்ந்த மரியாதை நிமித்த வார்த்தைகள்
பிருந்தா முதல் மணிமேகலை வரை மதிப்பெண் இட்டு
மகிழ்ந்த வேளை எனக்கான மதிப்பெண் முத்தமாய் விழ
வீழ்ந்த என் மனதுக்கு நட்பின் கேலி கரவொலிகளென
நுகர்ந்து சென்றது ஆராவாரமான நினைவுகள்....

நட்புகள் பலர் நலமாய் மேன்மையில் உளவென
நட்பு கூற மனமேனோ குளிர்ச்சியில் நனைகிறது
நல்லறமேற்ற நட்புக்கு என்றும் மேன்மையேயென
சொல்லிச் சிரிக்கிறது வெகுளி உதடுகள்
செருக்கில்லா நட்பவனது பேச்சிலும் மகிழ்வு செழிப்புடன்

தொடர் பேச்சில் எச்சில் விழுங்க முடியா நிகழ்வு பல
மனதை தட்டிப் பார்க்க அஞ்சலியாய் மெளனங்கள்
மீண்டுமோர் முறை இழந்தவை பெற்றிடலாமென

நொடிகள் கரைந்து கொண்டிருக்க விடை பெறும் தருணம்
ஆரத்தழுவிய நட்பு
இல்லம் ஓர் முறையேனும் வாயேன்...!  என்றிட
கண்ணீர் பெருகி தோள் சாயந்திட....
கண்ணீர் துளி மட்டும்
அவனோடு........
அவனில்லம் நோக்கி பயணிக்கிறது


****பிரகாஷ்சோனா****





புதன், 4 ஜூலை, 2012

கோடிகளை நாடி

அண்டம் கோடி அதில் விழும் பிண்டம் பலகோடி
இருப்பது பலகோடி இனி வருவதும் பலகோடி

கிட்டினர் கோடி... காடிக்கு பட்டினியர் கோடி
தாடிகள் தேடி அடிகள் ஆக்குவோரும் கோடி

தோடிகள்  நாடி...  இலயிப்போர் கோடி
கோடிகர் கோடி... கோடி ஈட்டுவோர் கோடி
கோடிப் பருவந் தனில் கோட்டிகள் கோடி

தெருக்கோடி தனில் பேடிகளும் வாடி
கோடிகளோ கேடிகளையே நாடி - இனி
கோடிதனில் புரள்வதும் யார் யாரோ

குறிப்பு :
********
                 கிட்டினர் -- உறவினர்
                 காடி         --  புளித்த கள்
                அடிகள் ---  சாமியார்(ஆச்சாரியார்)
                தோடி  ----  இராகம், பண்,கர்நாட்டிக்
                கோடிகர்-- நெசவாளர்
                கோடி  ---- புதுத்துணி(சீலை)
               கோடிப்பருவம் -- இளமைப்பருவம்
               கோட்டி -- துன்பம்,பகடி,விகட கூத்து,அழகு
               பேடி   ---- அலி, அச்சமுடையவன்

***பிரகாஷ் சோனா***






சனி, 30 ஜூன், 2012

காதலித்துப்பார்....

காதலித்துப்பார் அழகாகும் உன் வாழ்வு
இஃதோர் கவிஞனின் கூற்று
நானு வோர் நாள் காதலிப்பேன்
அவள் விழி வசங்கொண்டு கவி வடிப்பேன்
புசித்த வண்ணம் குருதியூற்று சில்லிடுமரை

இப்போது மட்டுமென்ன
ம்ம்ம்... காதலிக்கிறேன்
இலக்கண மீறா ஓரீர் மூவென நாலசைச்சீர் உடன்
தேமா புளிமா கருவிளங் கூவிளங் காய்கனி யென
சிறப்பானவளை காதலிக்கிறேன்

பன்னிரு உயிரோடு பதினென் மெய்கலந்து
ஆய்தமேந்தியவளை மூவின பகுத்தலோடு
லுகர லிகர ஐகார ஒளகார ஆய்த மகரங்
களேந்தியவளை சிறப்பாய் காதலிக்கிறேன்

அங்கொருவன் நகைக்கிறான்
நகைக்காதே... நகைத்த நொடி
நாக்கறுந்து மனம் குளறிவிடும்
மொழி திரிதல் நாகரீகமென கருதும்
நீ.... நகைக்காதே

உன் ஏளனம் புரிகிறது
தொன்மை பெரிதல்ல வெனவும்
வழக்கொழிந்திடா தொன்மை காத்து
புதுமை நின் திகழ்வதே நன்மொழியென
யாம் அறிவோம்

புதுமை ஏற்பவளே எம் பதுமை
ஓர்முறையேனும் காதலித்துப்பார்
விளங்கும் ; உன் எண்ணம் விலகும்
உதிரத்தில் கலந்த துர்நாளங்களை
துகிலுரித்து... இவளை கோர்த்தெடு
காதலி...... இனி புரியும் - உன் வாழ்வு
உண்மையிலே வளமாகும்

***பிரகாஷ் சோனா***


செவ்வாய், 26 ஜூன், 2012

காதல் + வக்கிரம் + கொலை,

கனமான விசயம் தான், இதை பார்த்த பிறகு எதுவுமே எனக்கு சொல்ல வரல பாதுகாப்பு கொடுக்க பட வேண்டிய பெற்றோரே இப்படி இருந்தால் குழந்தைகளால் என்னதான் செய்ய முடியும், ஒரு தனி மனிதனின் குரூர வக்கர புத்திக்கு எத்தனை குடும்பம் பாதிக்கிறது . இந்த நிகழ்வு மட்டுமல்ல இன்னும் பல நிகழ்வுகள் நம் சமுதாயத்தில் எங்கோ ஓர் மூலையில் நடந்தேரி கொண்டு தான் இருக்கிறது 



இது போன்ற வக்கிர நிகழ்வுக்கு என்ன காரணம்...? சமூகங்கள் இதை தான் நமக்கு கற்பிக்கிறதா இவங்க என்ன சொல்றாங்க பாருங்கள்



திங்கள், 25 ஜூன், 2012

இரண்டும் எட்டும்

இந்தா பக்கத்துல தான் ரெண்டு எட்ல போயிடலாம் அப்டினு பலர் சொல்றத கேட்டிருப்போம்

இந்த ரெண்டுக்கும் எட்டுக்கும் அப்டி என்னதான் தொடர்பு இருக்கு, சம்பந்தமே இல்லாம நடந்து போறதுக்கு எதுக்கு ரெண்டு எட்டுனு சொல்றாங்க இந்த ரெண்டையும் எட்டையும் பத்தி நம் முன்னோர்கள் என்ன தான் சொல்லிருக்காங்க,ஏதோ எனக்கு தெரிஞ்சவரைக்கும் நான் கற்றது வரைக்கும் சொல்றனே. தெரிஞ்சதை சொல்றேனு சொல்றதை விட தெரிஞ்சதை ஒரு குழப்பு குழப்பி தாரேன் நீங்க அப்டியே புடிச்சிக்கோங்க (அட குழப்பி விடறதுக்கும் யாராவது வேணும்ல)

இரண்டு : கண்ணிரண்டு, காலிரண்டு, கையிரண்டு

எட்டு : எண் ஜான் உடலமைப்பு

இந்த எட்டு ஜான் உடம்பை கொண்டு அக்கம் பக்கம் வேடிக்கை பாக்காம கையிரண்டும் வீசி நடந்தா போற தூரம் பக்கம் வந்திடும். அப்டினு வேற யாரும் சொல்லலை நான் தான் சொல்றேன். சரி திட்டாதீங்க நான் தான் முதல்லையே சொன்னேல்ல எதையாவது எனக்கு தெரிஞ்சதை குழப்பி தருவேன்னு...நீங்க திட்னாலும் எதோ இதுல உண்மை இருக்குற மாதிரிதான் தெரியுது (அப்பாடா குழப்பியாச்சி)

ஏதாவது ஆன்மீக குருமார்களிடம் இதை பற்றி கேட்டா அது சித்த சன்மார்க்கத்திற்கான வழின்னு மறைபொருள்ல சொல்லுவாங்க அது என்ன சித்த சன்மார்க்கம் ... எட்டு என்ற எண்ணிற்கு தமிழ் எண்களில்  என்றும் இரண்டிற்கு  என்றும் குறிப்பிடுவது உண்டு அடி உச்சி நு அர்த்தமாம் அதாவது உச்சி முதல் பாதம் வரைக்குமான ஓர் விதமான பயிற்சி அப்டினு ஒரு சாராரும் , எண் ஜான் உடலமைப்பை கொண்ட நாம் உலகில் உள்ள இருமைகளுக்கு உட்பட்டு தான் இருக்கிறோம் இவைகளை கடந்து கடை நிலையான வீடு பேறு அடைவது அதாவது இறைவனடி சேர்தலே இந்த இரண்டு எட்டும் அப்டினு மற்றொரு சாராரும் சொல்வாங்க

எது எப்டியோ இத படிச்சிட்டு நீங்க ஒரு முடிவுக்கு வந்துருப்பீங்க

கொசுரு
*********
* எட்டு போல நடைபயிற்சி மேற்கொண்டால் உடலுக்கு நல்லதாம்
* யோக முறைகள் எட்டு (இயமம்,நியமம்,ஆசனம்,பிராணயாமம்,பிரத்தியாகாரம்,தாரணை,தியானம்,சமாதி)
* சங்க இலக்கியத்தில் தொகை நூல்கள் எட்டு (நற்றிணை,குறுந்தொகை,ஐங்குறுநூறு,பதிற்றுபத்து, பரிபாடல்,கலித்தொகை,அகநானூறு,புறநானூறு)
* கணித முறை படி எட்டு இரட்டை எண் ஆகும்
* சித்தி முறைகள் எட்டு (அணிமா,மகிமா,கரிமா,லகிமா,ப்ராப்தி,ப்ரகாம்ய,ஈசத்வம்,வசத்வம்)


பிரகாஷ் சோனா

  




சனி, 16 ஜூன், 2012

ஓம் சாந்தி

வார்த்தையாலிட்ட ..தீ.. எனை
வருத்திவிட்டது-அத்தீ
வீரியம் கொண்டு
விருத்தியாகிவிட்டது

சூதாட்ட சொல் கொண்டு உனை
சுத்திகரிக்க பார்க்கிறாய் -உன்
சாகசம் அறியா என்மனதை
சங்கடபடுத்தி பார்க்கிறாய்

காரணம் வினவ
களவாணியை கண்டதை போல்
கூச்சலிடுகிறாய் எனை
குழப்பத்தில் ஆழ்த்துகிறாய்

பொறுமையிழந்து நிற்கிறேன்
போர்கால சிப்பாய் போல

சமாதனம் அடைய என் மனது
சங்கல்பம் எடுத்து கொண்டது - நீ...
சமரசம் பேசும் வரை
சல்லாபம் வேண்டாமென்று

அடைக்கலம் கேட்டு என்னில் நானே
ஆசுவாச படுத்திகொள்கிறேன்
இருந்தும் முடியவில்லை - உனை
ஈட்டிய மனதுக்குள்
ஈட்டுப்பத்திரமாய் நான்...

சாந்தி...சாந்தி...சாந்தி
சாந்தி...மனமே...சாந்தி


***பிரகாஷ்சோனா***


சனி, 9 ஜூன், 2012

விவாசாய புரட்சி (விவசாய நிலத்தின் புலம்பல்)

தரிசா கிடந்த நான் - வாகனம்
தரிகெட்டு ஓடும் தார் சாலையாகி போனேன்
மகசூல் ஈன்ற என் வயிறும்
பாளம் பாளமா வெடிச்சி பாழா போனேன்
விளை நிலமா இருந்த நான்
ரியல் எஸ்டேட்டுக்கு விலையாகி போனேன்

விவசாய குத்தகைக்கு போன எம்மேல
சாயம் பூசுன மகராசி குத்தவச்சிட்டா மாளிகையா
காணி நிலமும் இப்போ அவளுக்கே காணிக்கையா
நஞ்சையும் புஞ்சையும் நைந்து போச்சு
பட்டறை கழிவால எல்லாம் நஞ்சாகி போச்சு
சாகுபடியும் இப்போ கழிவா போச்சு

நான் இன்னும் மலடு ஆகல - என்
நண்பன் மட்டும் கிழடு ஆகிட்டான் - நீயோ
விஞ்ஞானத்துக்கு கைகூலியாகிட்ட
வசதி வாழ்கைக்கு எனை மறந்தே போயிட்ட
சகதியில நின்னவனும் காணா போயிட்டான்
சகட்டு மேனிக்கு அவன் வீணா போயிட்டான்

வேள்னா கொடைனு சொல்லுவாங்க அதனாலயே
எனக்கு வேளாண்ணு பேரும் வச்சாங்க
யாராவது எனக்கு கொஞ்சம் கொடை தாங்க
அதுவும் பசுமை கொடையா தாங்க - உங்கள
காக்கும் எனக்கு எனது பட்டினி சாவ தடுக்க
மீண்டுமோர் பசுமை புரட்சி கொண்டுவாங்க

களை எடுக்க வந்த காலம் மாறி
களை கூட இல்லாம களையிழந்து நிக்கிறேன்
என்னை கொஞ்சம் கை தூக்கி விடுங்க
விவசாயத்துக்கு ஒரு புரட்சி பண்ணுங்க

என்றென்றும் உங்கள்
பிரகாஷ் சோனா

புதன், 6 ஜூன், 2012

என்னவளே...!


பரீட்சைக்கு
மனப்பாடம் செய்கையில்
உனக்கான வாசனையோடு
கார்மேக கருங்கூந்தலை
என் மீது வீசி சென்றாயடி

நொடி பொழுதில்
மனப்பாடம் செய்த 
வரிகளணைத்தும் உனை 
மனப்பாடம் செய்ய துடிக்குதடி
உனை மனப்பாடம் செய்ய
என் மனதுக்கு கற்று தருவாயா
இல்லை
உனை மணமுடிக்க தான் விரல் 
கொஞ்சம் தருவாயா
ஆணுலகின் ஈர்ப்பு விசை நீதானடி
உன் பாதம் தேடி வந்து விழுந்த
நியூட்டனின் ஆப்பிளும் நான் தானடி
மீண்டுமோர் முறை உன் பார்வை
என் மீது வீசி செல்வாயா
இல்லை
எனை நேசிக்க தான் வருவாயா
ஏதோ மயக்கம் 
ஏனோ தயக்கம் எல்லாம் உன்னாலே
ஏங்குது மனம் தூங்காமல் தன்னாலே
காதல் பயம் 
காதல் ஜுரம் என்னிலே
எல்லாம் உன்னாலே
என்னில் நீயும் வந்திடுவாயா 
காதல் தாகம் தீர்த்திடுவாயா


*************************************************
என்றென்றும் உனக்கானவனாய்
பிரகாஷ் சோனா

வியாழன், 31 மே, 2012

தேன் நிலவு

தேன்...
ஆதிமனிதனின் முதல் உணவு
சுவைகளின் முதல்வன்
பூலோகத்தின் அருமருந்து
பூக்களின் சொத்து

லட்சம் போராளிகளை(தேனீக்களை)
வென்றெடுத்த அமுது

நெடுந்தூர பயண களைப்பில்
தோள் சாய்ந்து கிடந்தவளை
மறந்தே போனான் அமுதன்

மூன்று வருட மரண சுகம் அனுபவித்த
காதல் வாழ்க்கைக்கு பின்
சிறகு விரித்த பறவையாய் அவர்களின்
தேன் நிலவுக்கான பயணம்

பெயருக்கேற்ப கொஞ்சி பேசுவதில்
அவள்... தேன் மொழிதான்

அவன், தேடல் கொண்டவன்.
போராளி, காதலிக்கும் போது
அவளின் மனதை அறிய முற்ப்பட்ட
போராளி.

ஏன் நெடு நேர மெளனம்
ஏதும் சிந்தனையா
அமுதனின் மெளனத்தை கலைத்தால்
தேன்மொழி

இந்த தேனீக்களுக்கு
சுறுசுறுப்பும் கட்டுகோப்பான ஒற்றுமையையும்
யார் சொல்லி தந்தார்கள்
என்று சிந்தனை

அவை ரிங்காரமிட்டு ஆடி பாடி அப்படி
என்னதான் பேசிகொள்ளும்
என்று சிந்தனை

தோள் சாய்ந்தவள்
வாள் பார்வை வீசி

நீங்கள் தேன் பிரியரா

ஆம்... இந்த தேன் மங்கை
மீது பிரியம் கொண்டவன்

போதும்... தேன் தெவிட்டிவிட போகிறது

தேனோடு இந்த அமுதன்
சேர்ந்திருப்பதால்
தெவிட்டாது கண்ணே..

கட்டியணைத்து , தேனீக்கள் அறியா
இதழ் மலரோடு இதழ் மலரில்
முத்தமிட்ட அவளை
மின்சார முத்த பாய்ச்சலை கலைத்தது
பெண்ணுக்கே உரித்தான நாணம்.

பொய்யான கோபத்தில்
மெய்யான வெட்க புன்னகை
உதிர்த்தாள்.

தேன்மொழி
அங்கே பார் மனிதனுக்கான
உணவு சங்கிலிக்கு
ஆயத்தமாகின்றன தேனீக்கள்

விளங்காமல் விழித்தாள் தேன்மொழி

தேனீக்கள் பூக்களின்
மகரந்த சேர்க்கைக்கு
ஆயத்தமாகின்றன பெண்ணே

ஆளுயர மரங்கள் புதர் மண்டிய காடுகளுக்கு
அப்பால் சூரியன் மறைந்தே கிடந்ததால்
இருள் மங்கிய சூழல்
வெப்பம் தனித்த மெல்லிய குளிர் காற்று
இருந்தும் மயங்கிய நிலையில் தேன்மொழி
காதல் மனம் கொண்ட புதுமண தம்பதியல்லவா

தேன் நிலவுக்கான விளக்கம் தெரியுமா அமுதன்

ம்ம்ம் சொல்கிறேன் கேள்

தம்பதியரின் உள்ளங்கைகளில்
தேனை ஊற்றி நிலவும் தேனும்
ஓர் கோட்டில் இணையும் நேரம்
இவர்களும் இணைந்து
தேனை ஒருவர் மாற்றி ஒருவர்
ஊட்டி விடும் தருணம் அது பெண்ணே

உன் கட்டுகதையை நிறுத்து
செல்ல முனுமுனுப்புடன்
தேன்மொழி

உன் ஒவ்வொரு வெட்க புன்னகையும்
ஒவ்வொரு தேன்துளி போலல்லவா இருக்கிறது

நான்
உன் தேன்துளி வெட்க புன்னகையை சேகரிக்க
அந்த தேனீக்களை விட படாது பாடல்லவா
படவேண்டியிருக்கிறது

தேனீக்கள்
தேனை சேகரிக்க
லட்சம் முறை பறக்கும்போது
உனக்கென்னவாம் எனை
லட்சம் முறை கூட
வெட்க புன்னகை சிந்த வை

தேன்மொழி
உன் நடை, இடை,  உடை
ஒரே மொழி பேசினாலும்
செவ்விதழ் பதித்த உன் முகம்
பல மொழி பேசுகிறதே அதிலும்
அந்த செவ்விதழோரம் சிறு
குறு குறு துடிப்பு ...அடடே
உண்மையிலே உன் மொழி
தேன்மொழி தான்

சோமபாணம் தேனில் உருவானது
பலமுறை படித்தும் மனம்
ஏனோ ஏற்கவில்லை

உன் இதழ் அசைவின் பேச்சில்
கிறங்கிதான் போயிருக்கேன்
உண்மையிலே சோமபாணம்
தேனில் உருவானது தான்

சிறு வெட்க புன்னகை களைந்து

அமுதன் அங்கே பார்
ரோஜா மலர்

ரோஜா இதழுக்கும் தேனுக்கும்
ஓர் தொடர்பு உண்டு
பிஸ்கட் உருவாக இவர்கள் தான்
முதல் காரண கர்த்தா

தேன்மொழி
இந்தா இந்த பூவின் தேனை ருசி
ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு ருசி

தேனிலவில் தேன்மொழியோடு
மனதில் ஓர் புது தெம்பு தான்

மங்கோலிய வீரன் செங்கீஸ்கானுக்கு
போர்கால உணவாய் தெம்பூட்டியது
அந்த தேனென்றால்
இந்த அமுதனுக்கு
தேனிலவில் தெம்பூட்டும் உணவாய்
நீ தானடி தேன்மொழி

வெட்க புன்னகையாள்
மீண்டும் நாணத்தோடு


எண்ணங்களும் எழுத்தும்
****பிரகாஷ்சோனா****




புதன், 30 மே, 2012

நான்..யார்.......சாமி..யார்

நான் யார் ... நான் யார்? , சாமி யார்? என்னை குழப்பிய வரிகள் உங்களுக்கும் இது குழப்பமான பதிவாக இருக்கலாம்.

நான் யார்..?


நான் யார் என்ற கேள்வியை உனக்குள் எழுப்பு, சிந்தி என பல சாமியார்கள் சொல்லி சொல்லியே உங்களையும் என்னையும் குழப்பி மகான்களாகி அமரர் நிலையையும் எய்து விட்டனர்.

நான் நான் என்று அடிக்கடி சொல்லிகொள்கிறோமே அந்த ”நான்” யார் என்று உங்களுக்குள்ளே நீங்களே கேள்விகேட்டு பாருங்கள் உடனே நான் சிவா என்று உங்களது பெயரை சொல்லிகொள்வீர்கள், மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருங்கள் அப்போது நீங்கள் வகிக்கும் பதவியையோ, தொழிலையோ, குடும்ப பாரம்பரியத்தையோ (இன்னார்மகன், இன்னார் பேரன்) சொல்லிகொள்வீர்கள் நான் யார் என்ற ஒற்றை கேள்விக்கு பதில் தெரியாமல் பெயர், பதவி, பாரம்பரியம், என பல பதில்களை சொல்லிகொள்கிறோம், இவற்றையெல்லாம் நீக்கிவிட்டு மீண்டுமோர் முறை நான் யார் என்ற கேள்வியை உங்களுக்குள்ளே எழுப்புங்கள்.... உங்களுக்கு பதில் கிடைப்பது சிரமமே கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் , சதை நரம்புகளாலான காற்றடைத்த பிண்டம், எண்ண குவியல்களின் களம் என்ற பதிலே நம்மில் உதிக்கும்,சரி இதையெல்லாம் நீக்கிவிட்டு மீண்டும் ஓர் முறை நான் யார் என்றுஉங்களை நீங்களே கேட்டு பாருங்களேன்.பதில்..........ஒன்றுமே இல்லை

சரி கனவிலும் நனவிலும் இதே கேள்வியை கேட்டு பாருங்களேன், அட நனவுல கேட்டு பார்த்திடலாம், கனவுல எப்டி கேக்க முடியும் காரிருள் போர்த்தி என்னை நானே அறியா நிலையிலல்லவா கிடப்பேன், என்று நிங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது...ம்ம்ம் கேட்க முடியாது தான்

ஆக, நான் யார் என்ற கேள்விக்கு நமக்கான அடையாளங்களையோ செயல்களையோ தான் பதிலாய் தருகிறோம். நான் யார் என்ற கேள்விக்கு மேற்சொன்ன பதில்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு பார்த்தால் அதுவே நான் என்ற சுயஆத்மன், அந்த நான் என்ற ஆத்மனுக்கு அடையாளங்களோ குறிகளோ குணங்களோ கிடையாது, எந்த நிலையிலும் மாறாமல் குணங்குறியற்று இருப்பது எதுவோ அதுவே ”நான்”எனும் ஆத்மன், என்று நான் யார் என்ற ஆத்ம ஆராய்ச்சியில் ரமணமகரிஷி சொல்லியிருப்பார்.நான் எனும் அந்த ஆத்மனை நம்மில் நாம் உணர்ந்திருந்தாலே பூலோகத்தில் பிரச்சனைகளே அற்று இருந்திருக்கும் ..சரி அடுத்து இந்த சாமிகளை பற்றி "ச்சி" இந்த ஆசாமிகளை பற்றி பார்ப்போம்.

சாமி யார்..?

சாமி சாமி என்று அடித்து கொண்ட கால கட்டங்களில் நான் யார் என்பதை உணர் என்று சொல்லிய ஆசாமிகள் தான் நமது மாய திரையை விலக்கிய சாமி என்று சொன்னாலும் தகும் என்று சிலர் சொல்வர். ஆசாமிகளாகிய நாம், நாம் யார் என்பதை உணர்ந்தாலே போதும் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஏதுடா சாமி என்று புகட்டியவர்களும் அவர்கள் தானே என்றும் சிலர் வாதிடுவர்.

”நான் யார்” என்று கேள்வி கேட்க தெரியாதவன் தான், ”நான்” எனும் ஆத்மனை உணராதவன் தான், தனக்குள்ளே கேள்வி கேட்டு கொள்ளுங்கள் என்று சொன்னவர்களையே சாமியாக்கி விடுகிறார்கள். நமக்கான பணிகளை நாம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென ஒருவன் நம்மை பார்த்து நீ உலகில் பல இடங்களில் பயணம் செய்திருப்பாய் ஆனால் ஓர் நாளாவது உனக்குள் நீ பயணம் செய்திருக்கிறாயா என்று கேட்டால் அவனை பார்க்கும்போது நமக்கு என்ன தோன்றும் ஒன்னு பைத்தியம்னு தோனும் இல்லன்னா என்னாமா யோசிக்கிறாம்பா நீ அதிமேதாவிதாம்பா இப்டி தான் எண்ண தோன்றும்.

இப்படி தனக்கான பாதையை விட்டு மாற்று சிந்தனையில் சிந்திப்பவர்களை ஞானி என்றும் சாமி என்றும் நம்மில் பலர் ஏற்றுகொள்கின்றனர். அவர்களின் மாற்று சிந்தனை உங்களை சிந்திக்க வைக்கிறதா அப்படியென்றால் அவர்களது மாற்று சிந்தனையையும் அவர்களின் சாரத்தையும் ஏற்றுகொள்ளுங்கள் வேண்டாமென்றில்லை அவர்களை பின்பற்றி அவர்களை அதிமேதாவிகளாக்கி சாமியாக்கி மேலுயர தூக்கி நிறுத்தாதீர் விளைவு நமக்கே

இயற்கை சக்திகளின் சீற்றங்களுக்கும் பிரபஞ்ச சக்திகளுக்கும் பயந்த நம்மவர்கள் தமக்கான பாதுகாப்பு வேண்டி அச்சக்திகளை சாமியாக்கிய வேளையில், மாற்று சிந்தனையுள்ள ஆசாமிகள் நம்மிடையே சாமிகளாகி போனர். இயற்கையை மீறிய சக்திகள் அனைத்தும் மாயைகளே என்று எப்போது நாம் உணர்கிறோமோ நான் என்ற ஆத்ம சொரூபனை எப்போது நாம் உணர்கிறோமோ அன்று இந்த சாமிகள் மீண்டும் ஆசாமிகளாகி போவர்.

இது எனது கருத்து, உங்கள் சிந்தனையோடு எனது கருத்தை ஒப்பிடும்போது சில எதிர்மறை கருத்து இருக்கலாம்.....விதிவிலக்கல்ல

எண்ண எழுத்துகளுடன்
***பிரகாஷ்சோனா***

செவ்வாய், 29 மே, 2012

ஆதி வித்துக்கள்

எண்ணங்களுக்கு தூபம் போட்டு
வண்ண கனவுகளை வளர்க்க வேணாமடா
நல் உள்ளங் கொண்டு வல்லோன் வலியோன்
வாழ்த்திட்டால் போதுமடா

மாய உலகில் சாயமிகு காயத்தை
அகற்றினால் மன காயங்களும் மாயமாகுமடா
இகழ்ச்சியும் புகழ்ச்சியும் துச்சமெனகொள்
உன்னில் மகிழ்ச்சியும் தஞ்சமாகுமடா

வன்மமில்லா கன்மங்களோடு
திண்மமாய் வாழ்ந்திட்டால்
அஃதே வாழ்வியலின் உச்சமடா-உனக்கு
வானளாவிய புகழ்ச்சி நிச்சயமடா

கூச்சம் தவிர்த்து பயத்தை போக்கி
சந்தர்ப்பத்தை பயன்படுத்தினால் - வாழ்நாள்
போராட்டம் சிறிதேனும் குறையுமடா
 மனம் விரைவில் நிறையுமடா

புத்தியை கிளரி சிந்தையுணர்ந்து
நிதானமாய் கவனித்து எண்ணங்களை
செயல்படுத்தினால் தரணியில்
நிரந்தரமாகும் உன் பவனியடா

இஃது ஆதியில் புகட்டிய வரிகளேயடா -ஆகையின்
அகமறிந்தோன் ஏட்டினையும் சிறிது பாரடா
இதுவே வாழ்வியலின் வித்தென நீயும் கூறடா

 எண்ண எழுத்துகளுடன்
****பிரகாஷ்சோனா****

புதன், 9 மே, 2012

மார்கழி

தேகம் குளிருது நெஞ்சு சிலுக்குது
மஞ்ச வெயிலு மதி மயக்குது
வாட காத்தும் எனை வாட்டியெடுக்குது
ஆவி பறக்க வந்த ஆகாரமும் தாவி பறக்குது

இன்ச் இன்ச்சா இஞ்சி முத்தம் வச்சி கலங்கடிக்குற
பிஞ்சு நெஞ்ச பஞ்சு போல பதற வைக்குற
கட்டுபாட்டை மீறிதான் கட்டியணைக்குற
அத்து மீறி எனையே ஆள பாக்குற

உதிரமும் உறைஞ்சிதான் போகுது
சுவாசமும் குறைஞ்சியே சுழலுது
உன் வாசம் மட்டும் வசமாகுது - மாசமோ
மார்கழி மாசமாகுது பனி பிரசவமாகுது

முட்டி மோதி முடங்கிதான் போறேன்
காலை வெயிலு வந்தும் கெறங்கியே தான் வாரேன்
என் பணி தோய்ந்திருக்க - உன் பனி
அப்பப்பா... முன்பனி பின்பனி தான்

மாறுமோ மார்கழி
தீருமோ என் மீதான பழி
வாராதோ வசந்தம்
எனையும் கொஞ்சம் பாராதோ

***இவன்***
பிரகாஷ் சோனா